Thursday, 25 September 2014

வேலிமசால் பசுந்தீவன சாகுபடியில் இரட்டிப்பு வருவாய்

தமிழகத்தில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைக்கிறதா? என்றால் இல்லை.இதனால், பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே அண்மை காலமாக பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியது:தமிழகத்தில் உள்ள 4 கோடி கால்நடைகளுக்கு 10 கோடி டன் பசுந்தீவனம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழத்தில் 50 முதல் 60 சதவீதம் அளவுக்கு பசுந்தீவனப் பற்றாகுறை உள்ளது.பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்க, அதிக மகசூல் தரும் தீவனப் பயிர்களை இறவையில் பயிரிட்டு ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் தீவன மகசூலை உயர்த்துவதாலேயே முடியும்.மேலும் புரதச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்க பயறு வகை பசுந்தீவனப் புற்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.இப்போது உள்ள மழை அளவைப் பார்க்கும்போது நெல், உளுந்து உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்வதைக் காட்டிலும் பசுந்தீவனப் புற்களை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்யும்போது இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும்.குறிப்பாக, வேலிமசால் பசுந்தீவனப் புல்லை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்தால், 1 ஏக்கருக்கு 100 கிலோ முதல் 110 கிலோ வரை விதை உற்பத்தி செய்யலாம்.இதைச் சாகுபடி செய்வதால் மண் வளம் மேம்படுத்தப்படும். பூச்சி, நோய் ஆகியன இந்தப் பயிரைத் தாக்குவதில்லை. குறைந்த நீரிலேயே சாகுபடி செய்துவிடலாம்.குறைந்த அளவு வேலையாட்கள் போதுமானதாகும். இதில் 19.2 சதவீதம் புரதம், 27 சதவீதம் உலர்த்தீவனத் தன்மை, 55.3 சதவீதம் செரிக்கும் தன்மையும் கொண்டுள்ளதால் கால்நடைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. எனவே பால், மாமிச உற்பத்தி பெருகுகிறது.

வேலி மசால் பசுந்தீவனம் குறித்த சிறு குறிப்பு:பருவம்: ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலம்: எல்லா மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். முன்செய் நேர்த்தி: நன்கு பன்படுத்தப்பட்ட நிலத்தில் 16-20 ச.மீ. பாத்திகள் அமைக்க வேண்டும்

. விதையளவு: ஹெக்டேருக்கு 20 கிலோ இடைவெளி: வரிசைக்கு வரிசை 50 செ.மீ. இடைவெளி விட்டு நெருக்கமாக விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதைகள் நன்றாக முளைக்க, கொதிக்க வைத்த குளிர்ந்த நீரில் விதைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி விட்டு நிழலில் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.

உர அளவு: ஹெக்டேருக்கு தொழு உரம் 20 டன், தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ.

 பின்செய் நேர்த்தி: விதைத்த 30 நாள்களுக்கு பின்பு ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் களை எடுக்கவும்.

நீர்ப் பாசனம்: 10-15 நாள்களுக்கு 1 முறை. அறுவடை: விதைத்த 80 நாள்களில் முதல் அறுவடையும், பிறகு 40-45 நாள்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.

மகசூல்: ஹெக்டேருக்கு 1 ஆண்டுக்கு 80 முதல் 100 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.வேலிமசால் குறித்த மேலும் விவரங்களை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சாகுபடி தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் பெ. முருகன்.வேலிமசால் பசுந்தீவன உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும்  காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன்.வேலிமசால் பசுந்தீவனம் விளைவிக்கப்பட்டுள்ள நிலம்.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்: வேளாண் துறை தகவல்

பூந்தமல்லி: நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்கவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.நாளுக்கு நாள் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வரும் வேளையில் விவசாயத்தின் அவசியம் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சீரிய திட்டங்களை உருவாக்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்:

 இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.



"அட்மா' திட்டம்:

 அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து பூந்தமல்லி வேளாண் உதவி இயக்குநர் டி.என்.உமாதேவி தினமணி செய்தியாளரிடம் கூறியது: "பூந்தமல்லி வட்டத்தில் ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.இதில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நெல் தவிர காய்கறிப் பயிர்கள், மலர்கள், சிறிய அளவில் பயறு, நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளின் நிலத்திலும் மண் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து "ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு' வழங்கப்பட்டு வருகிறது.அரசு வழங்கும் மானியத் திட்டங்களை விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என்றார்.

Thursday, 18 September 2014

மிளகாய் சாகுபடியில் அறுவடை பின் செய்நேர்த்தி

மிளகாய் வற்றலின் கூடுதல் விலை வற்றலின் சிவப்பு நிறத்தன்மை மற்றும் காரத்தன்மையைப் பொறுத்தே அமைகிறது. வற்றல் ""சிறப்புத்தரம்'' ""நடுத்தரம்'' மற்றும் ""பொதுத்தரம்'' என மூன்று தரங்களாகப் பிரிக்கப்படுகிறது. தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள் பின்வருமாறு.மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாணக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கள், ஹீலி யாத்திஸ் மற்றும் புருடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். சிபாரிசுப்படி பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நல்ல நிறமும் காரத்தன்மையும் அதிகரிக்கிறது.மிளகாய்ச் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களைக் காம்புடன் பறிக்க வேண்டும். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல் பரப்பிய களங்களில் பழங்களைப் பரப்பி உலரவிட வேண்டும். மிளகாய் பழங்களை மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலிலிருந்து காய்ப்புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.அறையின் ஈரம் மிளகாய்ப் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதாப் போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். தவறான சேமிப்பு முறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் இவற்றை நல்ல விலைக்கு விற்க முடியாது. மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கில் அமுக்காமல் அள்ளி வைத்து வற்றல் உடைந்து விடாமல் கொண்டு செல்ல வேண்டும்.





- முனைவர்கள் கி.இராமகிருஷ்ணன், வி.கு.பால்பாண்டி, இரா.கார்த்திக்மண்டல ஆராய்ச்சி நிலையம்,கோவிலாங்குளம்,அருப்புக்கோட்டை. 

பழத்தோட்டமான செம்மண் தரிசு நிலம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை.எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலில் மாதுளை கன்றுகளை வளர்த்தார். உரமிட இப்பகுதியில் உள்ள இலை, தழைகளை மட்டும் பயன்படுத்தினார். மாடுகளின் சாணத்தை மட்டுமே உரமாக இட்டார். மாடுகளுக்கு வழங்கும் உணவில் கூட ரசாயனம் கலந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் இவரது பழ உற்பத்திக்கு உலகளவிலான "ஆர்கானிக் சான்று' எளிதாக கிடைத்து விட்டது. ஐ.எஸ்.ஓ., சான்றும் கிடைத்து விட்டது. இதனால் அடுத்து பப்பாளி, மா, பலா, திராட்சை, முருங்கை, சப்போட்டா, எலுமிச்சை, தென்னை சாகுபடி செய்தார்.குவியும் ஆர்டர்கள்: எல்லாவற்றிற்குமே சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப் பாசனம் செய்தார். அதேபோல் வளமான, மாசற்ற இயற்கை கொடுத்த வரத்தால் விளைச்சல் நன்றாக உள்ளது. பழங்களின் நிறமும் சுவையும் உலகில் முன்னணி இடத்திற்கு போட்டியிடும் திறனை பெற்று விட்டன. எனவே உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரிடம் பழங்கள் வாங்க ஆர்டர்கள் குவிந்தன.

அழகிய பண்ணை:

 வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைக்கு நேரடியாக ஆய்வாளர்கள் வரத்தொடங்கினர். இதனால் பண்ணையை அழகுற அமைத்தார். "ஹார்வஸ்ட் பிரஷ்' என்ற பெயருக்கு ஏற்ப பண்ணையில் இயற்கை உரம் தயாரிப்பது, தங்கும் குடில்கள், பணியாளர்கள் குடில்கள், விருந்தினர் குடில்கள், வாத்து, நாட்டுக்கோழி, நவீன மாட்டுப்பண்ணை, நேர்த்தியான ரோடுகள், மாட்டு வண்டி என எல்லாமே கேரள ஸ்டைலில் வடிவமைத்தார்.இன்று தென்மாநிலங்களில் முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இங்கிருந்து பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் பழங்கள் செல்கின்றன.மாதுளை தேன்: இங்கு மற்றொரு சிறப்பம்சம் மாதுளை தேன். நிலத்தில் 90 சதவீதம் மாதுளை சாகுபடி செய்திருப்பதால், நூற்றுக்கணக்கான தேன்பெட்டிகள் வைத்து மாதுளை தேன் சேகரிக்கிறார். இயற்கையாக விளைந்த மாதுளை என்பதாலும், மாதுளை தேன் என்பதாலும் உலக மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது. இதனால் அடுத்த பல ஆண்டுகளுக்கு கூட மாதுளை தேனுக்கு முன்பதிவு உள்ளது. கேட்ட பணம் கொடுத்து முன் பதிவு செய்துள்ளது எல்லாமே பன்னாட்டு நிறுவனங்கள் என்பது முக்கிய அம்சம்.
பாதுகாப்பு ஏற்பாடு

: இங்குள்ள ஒரே பிரச்னை பழங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு. அடர்ந்த மலையடிவாரம் என்பதால் காட்டு பன்றிகள், யானை, காட்டு மாடுகள் உட்பட வனவிலங்குகள் தொல்லை அதிகம். எனவே பண்ணையை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்துள்ளார்.வெளிமார்க்கெட்டில் எவ்வளவு விலை கிடைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் பழங்களை வழங்கி வருகிறார். கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்களுக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மாதுளை சில்லரை மார்க்கெட்டில் தெரு வியாபாரிகள் மூலம் கிடைத்து வருவது இதில் மிகவும் சிறப்பான அம்சம்.குரியன்ஜோசப் கூறியதாவது:""நன்மை விதைத்து, நல்லதை அறுவடை செய்'' என்று கேரளாவில் கூறுவார்கள்.நான் மண்ணை கெடுத்து அதிக லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை. மாறாக மண்ணை வளப்படுத்தி, நிறைவான விளைச்சல் எடுக்க விரும்பினேன். நமது பழங்களை தரமாக மாசற்ற வகையில் உற்பத்தி செய்து வென்றுள்ளேன்.அடுத்த கட்டமாக, இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக இந்த இடத்தில் பண்ணை சுற்றுலா அமைக்க திட்டமிட்டுள்ளேன். வருபவர்களை இங்கேயே தங்க வைத்து, பண்ணையை நேரடியாக பார்வையிட்டு, பழங்களை பறித்து சாப்பிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.தொடர்புக்கு: 91 93886 10249www.harvestfresh.in, info@harvestfresh.in-எம்.பாண்டியராஜன்