‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’கைகொடுக்கும் கண்வலி கிழங்கு‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால்,‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும்.ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’!நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. ஆகவே, கிராமப்புறத்து காடு, மேடுகளில் எவர் இந்தச் செடியைக் கண்டாலும் ஆவேசம்கொண்டு வெட்டித்தள்ளி விடுவார்கள். இது... பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. இன்றோ, பல விவசாயிகளை தலைநிமிர்ந்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் விளைச்சல் அதிகம். வெள்ளம் மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக பிற பகுதிகளில் விளைச்சல் குறைந்துவிட, வேதாரண்யம் பகுதியில் விதைகளை வாங்க ஏக போட்டி.‘எங்களிடம் விதைகளை விற்றால் கிலோவுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும்’ என்று கவர்ச்சிகரமான நோட்டீஸ்களை விநியோகித்து, போட்டிப் போட்டு விதைகளை வாங்கியுள்ளனர் விதை முகவர்கள். புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ‘‘எனக்கு நிலம், நீச்சு ரொம்பக் கிடையாது. மேட்டுக்காடாயிருந்த கொஞ்ச நிலத்தை வெட்டி சமப்படுத்தி மூணு வருஷமா கார்த்திகை கிழங்கு பயிரிடுறேன். ரெண்டு வருஷத்துக்கு முந்தி பொண்ணைக் கட்டிக் கொடுத்த கல்யாண கடன் அப்படியே இருந்துச்சு, இந்த வருஷம் விதை நல்ல விலைக்குப் போனதால் கடனை மொத்தமா அடைச்சுட்டேன்’’ என்று நெகிழ்ந்து போனவராகச் சொன்னார்.இதே கிராமத்தின் ஜெயலட்சுமி, ‘‘என் வீட்டுக்காரர் மலேசியா போய் சரியா வேலை கிடைக்காம திண்டாடினாரு. இங்க ரெண்டு பிள்ளைகளை வெச்சுகிட்டு குடும்பம் நடத்த ரொம்பவே சிரமப்பட்டேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்களைப் பார்த்து கார்த்திகை கிழங்கு போட்டேன். முறையா கவனிச்சதால எனக்கு நல்ல லாபம். அந்த பணத்தை வெச்சி புதுசா நிலம் வாங்கியிருக்கேன்’’ என்றார் உற்சாகத்துடன்.தீவிர விவசாயியான சாமிநாதன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.‘‘கடலோர மணற்பாங்கான பகுதி என்பதால் இங்கு தென்னை, மா, முந்திரிதான் அதிகம். இப்பொழுது எல்லோரும் கார்த்திகை கிழங்கு சாகுபடியில் இறங்கிவிட்டனர். பொதுவாக மணற்பாங்கான இடங்களிலும், செம்மண் பூமியிலும் கார்த்திகை கிழங்கு நன்கு வளர்கிறது. தண்ணீர் தேங்காத, நல்ல வெயில் உள்ள மேட்டுப் பகுதியிலேயே இதைச் சாகுபடி செய்யவேண்டும். கிழங்கு விதைப்பதற்கு முன் சில ஆயத்த வேலைகள் உள்ளன. எவ்வளவு இடத்தில் சாகுபடி செய்யப்போகிறோமோ அந்த இடத்தில் முதலில் பந்தல் போடவேண்டும். கொடி படர்வதற்காக பாகல், புடலைக்கு பின்னுவதுபோல பந்தல் மீது குறுக்கு நெடுக்கில் கயிறு மூலம் பின்னல் அமைக்க வேண்டும். பிறகு 75 செ.மீ. இடைவெளியில் குச்சிகளை நட்டு, பாத்தி அமைத்து உரமிட்டு தண்ணீர் விடவேண்டும்.ஆயத்தப் பணிகள் முடிந்தபின் கிழங்கை இரண்டாக ஒடித்து ஒவ்வொரு குச்சிக்கு அருகிலும் மூன்று அங்குல ஆழத்தில் விதைக்கவேண்டும். பெரிய கிழங்கு எனில் குச்சிக்கு இரண்டும், சிறிய கிழங்கு என்றால் மூன்றும் விதைக்கலாம். தொடர்ந்து ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். விதைத்த பதினைந்தாவது நாள் முளை விடும். சில சமயம், முளை வந்த கிழங்குகளை விதைப்பதும் உண்டு. செடி வளர ஆரம்பித்ததும் குச்சியோடு சேர்த்துக்கட்டி பந்தலில் விட்டால் கொடியாகப் படரும். மூன்றாவது மாதத்தில் பூ பூக்கும். ஆறாவது மாதத்திலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். ஒன்பதாவது மாதம் வரை விளைச்சல் இருக்கும்’’ என்றார் சாமிநாதன்.தோண்டி எடுத்த கிழங்குகளை இரண்டாக ஒடித்து அடுக்கிக் கொண்டிருந்த சிவஞானம், ‘‘மலேசியாவில் வேலை பார்த்துகிட்டிருந்த நான் கார்த்திகை கிழங்குப் பற்றி கேள்விப்பட்டதும், வேலையை உதறிட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வருஷம் அமோக விளைச்சல்’’ என்றபடியே நோய்த் தாக்குதல் பற்றி சொன்னார்.‘‘பச்சைப் புழுவும், கம்பளிப் புழுவும்தான் கார்த்திகைச் செடிக்கு எமன்கள். இலைகளின் அடிப்பகுதியில் பச்சைப் புழுக்களின் முட்டைகள் இருக்கும்பொழுதே கவனித்து அழித்துவிட வேண்டும். செடி பந்தலை அடையும் வரை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். பச்சைப் புழுக்களைக் கவனிக்காமல் விட்டால், நூற்றுக்கணக்கில் பெருகி ஒரே இரவில் நுனிக்குருத்தை கபளீகரம் செய்துவிடும். அப்புறம் அந்தச் செடி வளராது, பூக்காது. பூச்சி மருந்துகளை மாதத்துக்கு மூன்று முறை வீதம் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அடிக்க வேண்டும்.ஆவணிமாத இறுதியில் விதைப்பைத் தொடங்கலாம். கார்த்திகை மாதத்தில் பூ பூக்கும். அதனாலயேதான் இதற்கு கார்த்திகை பூ என்ற பெயரும் இருக்கிறது. ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். புதிதாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய சுமார் 500 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். இத்துடன் கம்பு, கயிறு, ஆள் செலவு, உரம், மருந்து எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வரை செலவாகும். ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை விதைகள் மகசூலாகக் கிடைக்கும். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டால் இந்த அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது. விதைக்கிழங்கு மூலமாகவும் உபரி வருமானம் கிடைக்கும். ஆகக்கூடி மூன்று முதல் நான்கு லட்சம் வரை லாபம் பார்க்கலாம்’’ என்றார்.செம்போடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், விதைகளை வாங்கும் முகவராகவும் இருக்கிறார். அவர், ‘‘கார்த்திகைக் கிழங்கு, கண்வலி கிழங்கு, குரங்குப்பூ என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவப் பயிர். சென்ற ஆண்டு கிலோ ஐநூறு ரூபாய்க்கு விதைகளை வாங்கினோம். இந்த ஆண்டு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு வாங்கியுள்ளோம்.அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது'' என்று சொன்னவர்,''இந்தப் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்தால் கூடுதல் லாபம் பார்க்கமுடியும். வேதாரண்யம் பகுதியில் கடற் காற்று அதிகமாக இருப்பதால் மகரந்தசேர்க்கை தானாகவே நடந்துவிடுகிறது. ஆனால், மற்ற இடங்களில் அது அவ்வளவாக நடப்பதில்லை. அதனால் ஒருசெடியிலிருக்கும் பூவிலிருந்து எடுத்து, மற்றொரு செடியிலிருக்கும் பத்து பூக்களுக்கு மகரந்த சேர்க்கை செய்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். சாகுபடியோடு தேனீ வளர்ப்பையும் மேற்கொண்டால் அயல் மகரந்த சேர்க்கைக்கு வசதியாக இருக்கும்.ஒரு முறை நடவு செய்தால், எட்டு முறை கூட மகசூல் பார்க்கலாம். ஆனால், வேதாரண்யத்தைப் பொறுத்தவரை மணற்பாங்கான பூமி என்பதால், ஒவ்வொரு முறையும் புதுக்கிழங்குதான் விதைக்கப் படுகிறது. அப்படியே விட்டுவைத்தால், வெப்பத்தின் காரணமாக கிழங்கு வீணாகிவிடும் என்பதுதான் காரணம்.ஆரம்பத்தில் சேலம் பகுதியில் அதிக அளவில் இது பயிராகி பலரையும் வாழ வைத்தது. ஒரு கட்டத்தில் திடீரென விலை வீழ்ந்துபோகவே, அதை விவசாயிகள் கைவிட்டனர். பத்து ஆண்டு களுக்குப் பிறகு தற்போதுதான் விலை உயர்ந்தி ருக்கிறது. அதனால் தற்போது சாகுபடி பரப்பும் கூடியிருக்கிறது. எனவே வரும் காலத்தில் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், மழை வெள்ளம் காரணமாக ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்பட்டால் விலை உயரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, விவசாயிகள் நாலும் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு பயிரிடுவது நல்லது'' என்று சொன்னார். (தொடர்புக்கு செல்: 94423-99141, 04369-276121).
Thursday, 23 October 2014
Thursday, 9 October 2014
கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்: சிவகங்கை சாதனை விவசாயி
முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு "வாக்கிங்' செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, "கீரை கட்டுகளை' வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது; கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம். நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன். ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து, "கண் இமையை' பராமரிப்பது போல் முறையாக கவனித்து வரவேண்டும்.ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும். இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.மாதம் ரூ.45 ஆயிரம்: நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.ஆலோசனைக்கு- 97869 48567. என்.வெங்கடேசன், சிவகங்கை.
வறட்சியிலும் அமோக லாபம்: நெல் சாகுபடியில் சாதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், "கைகொடுத்த' சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி.கடந்த ஆண்டில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் பயிரிடப்பட்ட நெல், போதிய மழையின்றி சாவியாகி வைக்கோல் கூட தேறவில்லை.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் குமிழேந்தலை சேர்ந்த விவசாயி ராஜகோபால், முற்றிலுமாக ரசாயன உரங்களை தவிர்த்தார். அவ்வப்போது பெய்த சாரல் மழையின் உதவியோடு மண்புழு உரம், மாட்டுச்சாணம், ஆட்டு புழுக்கைகளை உரமாக இட்டார்.வறட்சி நிலவிய நேரத்திலும் இவரது வயலில் உள்ள நெல் பயிர்கள் கருகாமல் மகசூலை எட்டியது. நான்கு ஏக்கரில் 50 மூடைகள்(ஒரு மூடை 60 கிலோ) நெல் கிடைத்தது.இவர் கூறியதாவது: எப்போதுமே விதைப்பிற்கு முன், மூன்று முதல் ஐந்து முறை நன்கு ஆழமாக நிலத்தை உழுதுவிட்டு, நெல்லை(டீலக்ஸ் பொன்னி ரகம்) மேலோட்டமாக விதைப்பேன். இயற்கை உரங்களோடு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாக்டிரியாபேஜ் ஆகியவை இட்டதால் நெல் கருகவில்லை.ஒரு மூடை ரூ.1650 வீதம், 50 மூடை நெல்லை 82 ஆயிரத்து 500க்கு விற்றேன். மிஞ்சிய வைக்கோலையும் ரூ.20 ஆயிரத்திற்கு விற்று, இதிலேயே சாகுபடி செலவையும் ஈடுகட்டிவிட்டேன்.மகசூல் நேரத்தில் லேசான மழை பெய்திருந்தால், ஏக்கருக்கு 50 மூடை வீதம் 200 மூடைகள் கிடைத்திருக்கும். அனைத்து விவசாயிகளும் அகலமாக உழுவதை விட, ஆழமாக உழ வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தினால் லாபம் அதிகம் கிடைக்கும், என்றார்.-கார்த்திகை ராஜா,ஆர்.எஸ்.மங்கலம்.
Thursday, 2 October 2014
அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றலுக்கு கிலோவுக்கு ரூ.75 முதல் ரூ.80 வரை விலை கிடைக்கும்
அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது விதைப்பு முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.உலகளவில் இந்தியா "மசாலா கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. 2012-13ஆம் ஆண்டில் மிளகாய் 7.93 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. உலக அளவில் மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36 சதவீதம்) முதன்மை நாடாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து சீனா (11 சதவீதம்), வங்கதேசம் (8 சதவீதம்), பெரு (8 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (6 சதவீதம்) ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது.இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 85-90 சதவீதம் உள்நாட்டு உபயோகத்திற்கும் மீதமுள்ள 10-15 சதவீதம் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தியாவிலிருந்து வற்றல் மிளகாய் இலங்கை, அமெரிக்கா, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.2011-12 இல் தமிழகத்தில் மிளகாய் வற்றலானது 56,442 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 24,640 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் (முண்டு), விருதுநகர் (சம்பா), தூத்துக்குடி (முண்டு), சிவகங்கை (சம்பா) மற்றும் திருநெல்வேலி (சம்பா, முண்டு) ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக, தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை துவங்கிய பிறகே (அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் இறுதி வரை) மிளகாய் விதைக்கப்படுகிறது.இந்தியாவில் மிளகாய் வரத்தானது நவம்பரில் தொடங்கி மே இறுதி வரை நீடிக்கும். இதில் முதல்வரத்து மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் நவம்பரில் தொடங்கும். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வரத்து நீடிக்கும்.தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி மற்றும் முதுகுளத்தூர் சந்தைக்கு பிப்ரவரி முதல் மே வரை அறுவடைக்கு வரும்.அனைத்து மாநிலங்களின் உற்பத்தி, குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் உற்பத்தி, தேவை மற்றும் ஏற்றுமதியை பொருத்தே மிளகாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தமிழகத்தில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வற்றல் குவிண்டாலுக்கு ரூ.6,500 - 8000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள், நடப்பு பருவத்தில் மிளகாய் பயிரிடலாமா அல்லது வேறு பயிர்கள் பயிரிடலாமா என்ற முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம், 18 ஆண்டுகளாக விருதுநகர் சந்தையில் நிலவிய விலையை ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில், 2015 பிப்ரவரி, மே மாதங்களில் அறுவடை செய்து சந்தைக்குப் புதிதாக வரும் மிளகாய் வற்றல் கிலோவிற்கு ரூ.75-80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மிளகாய் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003. தொலைபேசி- 0422-243 1405.தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ள பேராசிரியர் மற்றும் தலைவர், வாசனை மற்றும் நறுமணப் பொருட்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641 003. தொலைபேசி- 0422-661 1284.
இயற்கை விவசாயத்தின் முதல்படி: மண்புழு உரம்
பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:மண்புழு உரத்தின் பயன்கள்: நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி: உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும்.அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும்.60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்: பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.மண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.இதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.50 - 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 - 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.பொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.
மண்புழு உரம் - பரிந்துரைகள்
நெல், கரும்பு, வாழை - 2000 கிலோ ஏக்கர்மிளகாய், கத்தரி, தக்காளி - 1000 கிலோ ஏக்கர்நிலக்கடலை, பயறுவகைகள் - 600 கிலோ ஏக்கர்மக்காச்சோளம், சூரியகாந்தி - 1000 கிலோ ஏக்கர்தென்னைமரம், பழமரங்கள் - ஒரு மரத்துக்கு 10 கிலோமரங்கள் - 5 கிலோ மரம் ஒன்றுக்குமாடித் தோட்டம் - 2 கிலோ செடிக்குமல்லிகை, முல்லை, ரோஜா - 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள் (3 மாதங்களுக்கு ஒரு முறை)
மண்புழு உரம் - பரிந்துரைகள்
நெல், கரும்பு, வாழை - 2000 கிலோ ஏக்கர்மிளகாய், கத்தரி, தக்காளி - 1000 கிலோ ஏக்கர்நிலக்கடலை, பயறுவகைகள் - 600 கிலோ ஏக்கர்மக்காச்சோளம், சூரியகாந்தி - 1000 கிலோ ஏக்கர்தென்னைமரம், பழமரங்கள் - ஒரு மரத்துக்கு 10 கிலோமரங்கள் - 5 கிலோ மரம் ஒன்றுக்குமாடித் தோட்டம் - 2 கிலோ செடிக்குமல்லிகை, முல்லை, ரோஜா - 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள் (3 மாதங்களுக்கு ஒரு முறை)
Subscribe to:
Comments (Atom)