Thursday, 11 February 2016

மாம்பூவே... நீ பூப்பாயோ

கடந்தாண்டின் மழையளவு, கவாத்து செய்தல், தண்டின் வளர்ச்சி, இலைகளின் பயிர் வினையியல் மாறுபாடு, வளர்ச்சி ஊக்கி அளவு, தட்பவெப்ப நிலையைப் பொறுத்து டிச., முதல் பிப்., வரை மா மரங்கள் பூக்கும் நிலை மாறும். இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் மாவிலைகளில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பூக்கும் காலம் தள்ளிப் போகலாம். இதற்கு பொட்டாசியம் நைட்ரேட் ரசாயன உப்பை மாமரங்களில் தெளிக்கலாம். ஒரு கிலோ பொட்டாசியம் நைட்ரேட், அரைகிலோ யூரியா எடுத்து 50 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அதனுடன் 50 லிட்டர் தண்ணீர், 100 மில்லி ஒட்டும் திரவத்தை சேர்க்கவேண்டும். அதிக உப்புத்தன்மையுள்ள நீரை பயன்படுத்தக்கூடாது. இலை, தளிர், மொட்டுக்கள் நன்கு நனையுமாறு மாலை வேளையில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். 5 வாரங்கள் கழித்து பூக்க ஆரம்பிக்கும்.-பாலகிருஷ்ணன், விதை அறிவியல் துறைத்தலைவர், விவசாயக் கல்லூரி, மதுரை.

Tuesday, 7 April 2015

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..!

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..!

விலையில்லா உரம்... எரிபொருளில்லா வாகனம்

!ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம்ஒருங்கிணைந்த பண்ணை'பொதுவா இயற்கை விவசாயத்துல மகசூல் குறையும்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை. ரசாயனத்துல இருந்து திடீர்னு இயற்கைக்கு மாறும்போது மகசூல் குறையலாம். ஆனா, போகப்போக இயற்கை விவசாயத்துல செலவே இல்லாம, ரசாயனத்துக்கு ஈடா கண்டிப்பா மகசூல் கிடைக்கும். இதுக்கு நானே உதாரணம்' என்று 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பற்றி சிலாகிக்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன்.சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் எல்லாம், வாகனங்கள் மூலமாக காற்று மண்டலத்தைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, சூழல் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை வண்டியில்தான் பயணம் செய்து வருகிறார், இந்த சூழலியலாளர் லோகநாதன். சின்னியம்பாளையத்தில் உள்ள அவருடைய பண்ணையில் லோகநாதனைச் சந்தித்தோம்.விட்டு விட்டுப் பெய்யும் தூறல்மழை... வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள்... தொழுவத்தில் தலைசிலிர்க்கும் நாட்டுமாடுகள்... வெதுவெதுப்பைத்தேடி அலையும் கோழிக்குஞ்சுகள்... அசைபோடும் ஆசைக் குதிரைகள்... என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய ஐந்து ஏக்கர் பண்ணை. ஒற்றைக்குதிரை வண்டியில் வலம் வந்த லோகநாதன், அதை உரிய இடம் சேர்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.''30 கிலோ மீட்டர் சுத்தளவுக்கு எந்த ஜோலியா இருந்தாலும், எரிபொருள் போடக்கூடிய வாகனங்களைப் பயன் படுத்துறதில்லீங்க. குதிரை வண்டி சவாரிதான். எங்க வீட்டு குழந்தைங்க இதுல தான் பள்ளிக்கூடம் போறாங்க. டவுன் வீதியில ஓட்டிட்டுப் போறப்போ ஆச்சர்யமா பார்ப்பாங்க. வாகனப் புகையால ஏற்படுகிற சுற்றுசூழல் மாசை இந்த குதிரை வண்டி சவாரி ஒரளவு குறைக்கிறதுங்கிறதுல எனக்கு பரமதிருப்தி' எனும் லோகநாதன், சவாரிக்கு மட்டுமல்லாது, பல்வேறு பயன்பாட்டுக்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.''காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. நெல் விவசாயம்தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில பாரம்பரிய ரகங்களைப் பயிர் பண்றேன். ஒரு காலத்துல முப்போகம் நெல்லு வெளைஞ்ச பூமி. பல வருஷமா பருவமழை பெய்யாம போச்சு. கிடைச்ச பாசன தண்ணியை வெச்சு ஒருபோக வெள்ளாமைதான் நடந்துச்சு. அதனால அஞ்சு ஏக்கர்ல மொத்தமா நெல் சாகுபடி செய்யாம, மூணு ஏக்கர்ல மரப்பயிர்களை நட்டுட்டேன். 2007ம் வருஷ கடைசியில, ஈரோட்டுல பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில கலந்துக்கிட்டு, பயிற்சி எடுத்தேன். பயிற்சி முடிஞ்ச கையோட நாலு நாட்டு மாடுகள வாங்கிட்டு வந்து தொழுவத்துல கட்டினேன். அதுல இருந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் பண்றேன்.

நாட்டு ரக நெல் வகைகள்!மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார்னு போன போகங்கள்ல மாத்தி மாத்தி நடவு செஞ்சிருந்தேன். அதை இருப்பு வெச்சு விதைநெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இந்த போகத்துல சொர்ணமசூரி ரக நெல்லை நடவு செஞ்சிருக்கேன். இதோட மொத்த வயசு 120 நாட்கள். இப்ப 70 நாள் பருவம். பூட்டை எடுத்திடுச்சு. தை மாசம் அறுவடை செய்யலாம்.

பிழையில்லா விளைச்சலுக்கு பீஜாமிர்தம்!அடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செஞ்சு சேமிச்சு வெச்சுக்குவேன். அதுக்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துறேன். வளரும் நாற்றுகள்ல வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுபடுத்த இந்த பீஜாமிர்தம் உதவியா இருக்குது. நெல்லை நாற்றங்கால்ல விதைச்ச 15ம் நாள்ல ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன தண்ணியில கலந்து விட்டா போதும். முப்பது நாள்ல இருந்து நாப்பது நாளுக்குள்ள நாத்து தயாராகிடும். ஒரு போகம் முடிஞ்சதும், வயல்ல ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போட்டுடுவோம். அதனால ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் ரெண்டும் மண்ணுல மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமா இருக்குது.அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துறது கிடையாது. கருக்கறுவாள் மூலமா அறுவடை செஞ்சு, களத்து மேட்டுல கதிரடிச்சுக்குவோம். எனக்கு ஏக்கருக்கு சராசரியா 1,700 கிலோ நெல் கிடைக்குது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதை நெல்லா, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவேன். இதன் மூலமா 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியா அரைக்கிறப்போ... 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வெச்சுக்குவேன். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில செய்றதால ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்குல ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ்' என்று புன்னகைத்த லோகநாதன், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவரித்தார்.

ஒன்றின் கழிவு.. மற்றொன்றின் உணவு!'எங்கிட்ட நாட்டுப் பசுக்கள் 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள்20, வாத்துகள்12, குதிரைகள் 4 இதெல்லாம் இருக்கு. மாடுகளோட சாணம், கோமியத்தை வெச்சு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாம தயாரிச்சுக்கிறேன். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைச்சுடுது. இந்த நாட்டு மாடுகள் மூலமா வருஷத்துக்கு 3 கன்னுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்றேன். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வருஷத்துக்கு 15 ஆட்டுக் குட்டிகளை விற்பேன். இதன் மூலமா குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஆடுகளோட புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரிச்சு... எள், தட்டைப்பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்குறேன். செம்மறி ஆடுகள், வயல்ல இருக்கற களைகளைக் கட்டுப்படுத்திடுதுங்க.. அதுகளோட புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியா பலன் கொடுக்குது. வருஷத்துக்கு அஞ்சு செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்றது மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. கோழிகள் மூலமா கிடைக்குற முட்டைகளைப் பொரிக்க வெச்சுடுவேன். இதுல கிடைக்கிற சேவல் குஞ்சுகளை மட்டும் தனியா வளர்த்து, பெரிய சேவலா விற்பனை செய்றேன். இதன் மூலமா வருசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வாத்துகள் வயல்ல மேய்ஞ்சு, புழு பூச்சிகளைத் தின்னு காலி செய்யுதுங்க. அதோட எச்சம் பயிருக்கு உரமாகுது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சின்ன வருமானமும் கிடைக்குது.5 அடி இடைவெளியில, மூணு ஏக்கர்ல 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூணு மாசம் ஆகுது. நாலு வயசுல 200 ஈட்டி மரங்களும் நம்ம பண்ணையில இருக்கு. வயல் முழுக்க வரப்புல தட்டைப்பயறை விதைச்சு இருக்கேன். அதனால வரப்புகள்ல களைகள் கட்டுப்படுறதோடு, வயல்ல இருக்கற மற்ற பயிர்களை நோக்கி வர்ற புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்குது இந்த தட்டைப்பயறு. கூடவே, இதன் மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்குது'' என்ற லோகநாதன், நிறைவாக, ஆத்மதிருப்தி போதும்!'ஜீரோ பட்ஜெட் முறையில பண்ணையம் பண்றதால, வீட்டுக்குத் தேவையான அரிசி, பயறு, பால் எல்லாம் செலவில்லாம கிடைச்சுடுது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான தீவனமும் கிடைச்சுடுது. இதுபோக ரெண்டு ஏக்கர்ல இருந்து நெல், கால்நடைகள் மூலமா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. மூணு ஏக்கர்ல இருக்கற மரப்பயிர்கள் மூலமா இன்னும் நாலஞ்சு வருசத்துல ஒரு தொகை கிடைக்கும். இப்படியெல்லாம் லாபக் கணக்குப் போட்டு நான் சொல்றதால, பணம்தான் என்னை திருப்திப்படுத்துதுனு நினைச்சுடாதீங்க. இந்த ஒருங்கிணைந்த பண்ணையில கிடைக்கிற விலைமதிப்பில்லாத ஆத்மதிருப்திக்கு இணையே இல்லீங்க.' என்று சொல்லி விடைகொடுத்தார்.


ஜீரோ பட்ஜெட் நெல் சாகுபடி!லோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுபடி செய்யும் முறை இதுதான் நன்கு உழுது தயார் செய்த வயலில், நாற்றுக்கு நாற்று 25 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பலமடங்கு பெருக்குவதுடன், ஆழத்தில் இருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.


பீஜாமிர்தம்!தண்ணீர் 10 லிட்டர், மாட்டுச் சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர்3 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு30 கிராம் இவற்றை ஒரு வாளியில் இட்டு, ஒரு கைப்பிடி அளவு வரப்பு மண்ணையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி... 24 மணிநேரம் ஊறவிட வேண்டும். இதுதான் வல்லமையுள்ள பீஜாமிர்தம். விதைக்கும் முன்னர் விதைநெல்லை இந்தக் கரைசலில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, ஈரப்பதம் போக உலரவைத்து, நாற்றங்காலில் விதைக்கலாம்.

அமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்!பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால்... பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒருமுறை தெளிக்கவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நோய்தாக்குதல் தென் பட்டால் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்கவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120ம் நாளில் அறுவடை செய்யலாம்.




செலவில்லாமல் குடற்புழு நீக்கம்!கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிப் பேசிய லோகநாதன், 'ஆடு, மாடுகளுக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும். இதுக்காக மருந்துக்கு எங்கயும் அலைய வேண்டியதில்லை. தெளிஞ்சு, கண்ணாடி மாதிரி இருக்கற சுண்ணாம்புத் தண்ணியைக் கொடுத்தாலே போதும். தன்னால குடல்ல இருக்கற புழு, பூச்சிக வெளியே வந்திடும். மாட்டுக்கு 500 மில்லி; ஆட்டுக்கு 200 மில்லி; ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி; குதிரைக்கு 500 மில்லிங்கிற அளவுல கொடுக்கணும். 50 வருஷமா இதைத்தான் கொடுத்துட்டு இருக்கேன்' என்றார்.


தொடர்புக்கு,லோகநாதன்,செல்போன்: 9865590883.

Monday, 9 March 2015

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் பதிவு: கால அவகாசம் நீட்டிப்பு

பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாதம் 24 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாகம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கணிணி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சம்மந்தப்பட்ட வட்டாச்சியரிடம் பெறப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், மின் இணைப்பு அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெற வேண்டும். ஒரு ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் பரப்பிற்கு சொட்டு நீர்ப் பாசனம்  அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு மற்றும் மோட்டார் வசதி இருக்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மண்ணைப் பொன்னாக்கும் தென்னை நார்க் கழிவு உரம்

அதிக சத்துகளுடன் கூடிய தென்னை நார்க் கழிவு உரம் மண்ணைப் பொன்னாக்கும் வரமாக விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.தென்னை நார்க் கழிவில் எளிதில் சிதைவடையாத லிக்னின், செல்லுலோஸ், கரிமம் ஆகியவை உள்ளன.தென்னை நார்க் கழிவு நிலத்தில் மக்கும்போது தழைச்சத்தின் அளவு குறைகிறது. ஆய்வுகளின் முடிவில் வீணடிக்கப்படும் தென்னைக் நார்க் கழிவை உயிரியல் முறையில் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்தைப் பயன்படுத்தி மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர்ச் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.

தென்னை நார்க் கழிவை மக்க வைக்கும் முறை:தேவையான பொருள்கள்: தென்னை நார்க் கழிவு 1 டன். புளுரோட்டஸ் வித்து 5 பாட்டில்கள், யூரியா 5 கிலோ.செயல்முறைகள்: (முதல் அடுக்கு) நிழலடியில் 5க்கு 3 சதுர மீட்டர் சமதள பரப்பில் 100 கிலோ கழிவுகளை சீராகப் பரப்பி, நன்கு நீர்த் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டஸ் வித்தை சீராக தூவவும்.(இரண்டாவது அடுக்கு) அதன் மீது மீண்டும் 100 கிலோ கழிவை சமமாக பரப்பி நன்றாக நீர்த் தெளித்து ஒரு கிலோ யூரியாவை சீராகத் தூவ வேண்டும்.இவ்வாறு இரண்டு அடுக்குகளை மாற்றி மாற்றி ஒரு மீட்டர் உயரத்துக்கு சீராக அடுக்க வேண்டும்.அதை கணிசமான ஈரத்துடன் சேர்த்து மக்க வைக்க வேண்டும். சுமார் 30 முதல் 45 நாள்கள் வரை மக்க வைத்தால் நல்ல உரமாக மாறிவிடும்.

தென்னை நார்க் கழிவு பயன்கள்: ஒரு ஏக்கருக்கு 5 டன் தென்னை நார்க் கழிவை இடுவதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.களிப்பாங்கான மண்ணின் இறுக்கத் தன்மையைக் குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரிக்கிறது.மணற்பாங்கான மண்ணிலும், மானாவரி நிலங்களிலும் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்குகிறது.களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலைக் கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தீங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.ஊட்டச் சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலைக் கூட்ட வல்லது.கழிவுப் பொருள்களை மக்கச் செய்து எருவாக்குவதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.எனவே விவசாயிகள் மேற்கண்ட முறையில் தென்னை நார்க் கழிவு உரத்தை தயாரித்து தங்களது மண்ணைப் பொன்னாக்கலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Monday, 2 March 2015

சிவகங்கையில் மணக்கும் "சம்பங்கி பூ'

வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும். பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம். பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 99766 50101.-என்.வெங்கடேசன், சிவகங்கை. 

Wednesday, 25 February 2015

வெளுக்கும் மோடி சாயம்!

வெளுக்கும் மோடி சாயம்!

உணவளித்து அனைவரையும் காக்கும் விவசாயிகளின் வாழ்வாதரமான விளை நிலங்களை, வெளிநாட்டு கம்பெனிகள் லாபத்திற்குத்  தாரை வார்க்கும்  மத்திய அரசின்  மா பாதக செயலுக்கு, நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.ஆனால் தாம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும்நடைமுறைப்படுத்துவதிலும் இருந்து பின்வாங்கும் கருத்துக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி விடாப்பிடியாக இருக்கிறார்.பாஜகவின் முதன்மை அமைச்சர்கள்,ஆர்.எஸ்.எஸ்.மற்றும் சிவசேனா ஆகிய கொள்கை சகோதரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி," இந்தச் சட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கு நன்மை தரும்.விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்.எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் அம்மாநில முதல்வர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாம் அனைவரும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தான் இங்கே இருக்கிறோம்" என்று முழங்கியிருக்கிறார்.காலம் காலமாக வேளாண்மை செய்து தங்களின் வாழ்க்கையை  நடத்தி வரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை ஒரு சட்டம் மூலம் நிர்மூலமாக்கவும் உணவு பொருட்களுக்கு அந்நிய நாடுகளை  அண்டி இருக்கவேண்டிய அவலத்திற்கு தள்ளிடவும் மோடி நினைக்கிறார் என்பதை காட்டுகிறது அவரின் பேச்சு.தொண்ணூறுகளின் மத்திய காலத்தில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் இந்திய முழுமைக்கும் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றம், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை பலப் படுத்தியது. ஆனால் வேளாண்மை அதல பாதாளத்தில் விழுந்தது.இதை பற்றி அக்கறை கொள்ளாமல் அந்நிய கம்பெனிகளின் கல்லாவை நிரப்பும் கடமையில் மட்டுமே கண்ணாக  இருந்தது நரசிம்மராவ் அரசும், மன்மோகன் அரசும். மகராஷ்டிராவிலும்,ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் ஆயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைப் பள்ளத்தாக்கில் தள்ளியது.  `கார்ப்ரேட் ` நிறுவனங்களின் பகட்டிற்காக,  வாழ வழியின்றி கடன்சுமை நெருக்க,விளை பொருட்களுக்கு உரிய விலையின்றி, மனம் நொந்து  சாவைத்  தேடிய அப்பாவி விவசாயிகள் அழிந்த கதை இந்திய வரலாற்றில் உறைந்து கிடப்பதை மறந்திட முடியாது.மீண்டும் இதே போன்ற தற்கொலை வாழ்வை நோக்கி தள்ளும் சட்டமாகத்தான், மோடியின் நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டம் காட்சியளிக்கிறது. இந்த அவசர சட்டம் என்ன திருத்தங்களைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.ஏற்கெனவே உள்ள சட்டத்தில் நிலம் கையகப் படுத்தும்போது  சில குறிப்பிட்ட விசயங்களுக்காக நிலம் கையகப் படுத்தினால்,அதற்கு நில உரிமையாளர்கள் 80 சதவீதம் பேரிடம் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்று சட்டத்தின் 10(ஏ) என்ற விதி கூறுகிறது.இதில்தான் இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.கீழ்க்கண்ட 5 பிரிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதவீதம் பேர்களின் அனுமதி தேவையில்லை.அவை:1.தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.2.ராணுவம் தொடர்பானவை.3.மின்சார திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.4.தொழில் பூங்காக்கள்.5.ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் மேலும், நிலம் கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு உரிய நிலம் தானா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தால், விளை நிலமா என்பதை பார்க்கவேண்டியதில்லை. செழிப்பான விவசாய நிலத்தைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிட முடியும்.இந்தத் திருத்தம் வருவதற்கு முன்பே மேற்கு வங்க மாநிலத்தில்  சிங்கூர் பகுதியில் கொண்டுவரப்பட்ட கார் கம்பெனிக்கு செழித்த விலை நிலங்கள் பலி கொடுக்கப் பட்டது நினைவிருக்கலாம்.அதற்கு எழுந்த எதிர்ப்பும் விவசாயிகளின் போராட்டம் இன்றும் தீர்ந்த பாடில்லை.அரசால் கையகப்படுத்தப்படும் போது அதற்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் என்பது புதியதாக ஒன்றும் கூட்டப் படவில்லை.அதே போல எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அது 5 ஆண்டுகளில் நிறைவேற்றப் படவில்லை என்றால் அந்த நிலம் திரும்ப விவசாயிகளுக்கே அளிக்கப் படவேண்டும் என்று முன்பு இருந்த சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தில் இது போன்று எதுவும் கூறப்படவில்லை.இப்படி தான் நினைப்பதுதான் சிறந்த திட்டம் என்று பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள சட்டம், நிலத்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான  ஏழை, எளிய நடுத்தர விவசாயிகளின் உயிருக்கும் உடைமைக்கும் உலை வைக்கும் திட்டம் என்பதன்றி வேறு இல்லை.வெளிநாட்டு கம்பெனிகள் மோடியின் கனவுத் திட்டமான `இந்தியாவில் தயாரிப்போம்` என்பதை  நனவாக்க இந்தியாவின் குக்கிராமங்களை நோக்கி படையெடுக்க களம் அமைத்து தரும் பணியை மத்திய அரசு தீவிரமாக்கிதான் உள்ளது. ஆனால் ஏற்கெனவே நாடு முழுவதும் சிப்காட் பேட்டைகள் அமைக்கப்பட்டு தோல்வியில் முடிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை இனம் கண்டிட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். ஏற்கெனவே ஆண்டுக்கு ஆண்டு விளை நிலங்களின் பரப்பளவு இந்தியாவை பொறுத்தவரை சுருங்கி கொண்டே வருகிறது என்று செய்திகள் அச்சப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுபோன்று சட்டப் பூர்வமான நில அபகரிப்பில் அரசு ஈடுபடுவது இந்தியாவின் வேளாண்மையை சவக் குழிக்குள் தள்ளிடும் செயலாக அமைந்துவிடும்.'எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சிகள்' என்று  ஆளும் கட்சி என்ற மிதப்பில் பாஜக கூறினாலும், இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகள் சொல்லும் உண்மையை பிரதமர் மோடி உணரவேண்டும். பாஜகவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சகோதர உறவு பாராட்டும் சிவசேனா, " விவசாயிகள் நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். விவசாயிகளின் கழுத்தை நெரித்து பாவம் செய்யக் கூடாது. நிலத்தைக் கையகப்படுத்தும் செயல் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளது. திருவள்ளுவர் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, அவரின் குறள் காட்டும் பாதையில் தானும் செல்ல முன்வரவேண்டும்." இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்  கெடுப்பா ரிலானுங் கெடும் " இதன் பொருள், கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்பதாகும்.மக்களவையில் மக்கள் வழங்கிய `பெரும்பான்மை பலம்` கொண்டு தனக்கு  மதம்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது பாஜகவின் கையில்தான் இருக்கிறது.

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்!''பசுமை விகடன்ல படிச்சுட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா போய் கன்னு வாங்கிட்டு வந்து நட்டோமுங்க... இப்போ மாசா மாசம் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்குதுங்க' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி.நுரை ததும்பும் தண்ணீர்... சலசலத்து ஓடும் அமராவதி ஆறு... அதன் கரையில் வளைந்து பிரிந்து போகும் வண்டிப்பாதை. அதில் சில நிமிடங்கள் பயணித்தால் வந்து சேர்கிறது, சுப்பிரமணியத்தின் பண்ணை. எட்டிப் பறிக்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஏழு ஏக்கர் தென்னை. அதில் ஆரஞ்சு வண்ணத்தில் அழகு காட்டித் தொங்கும் இளநீர்க்குலைகள் என்று குளுமை சாமரம் வீசும் தோப்புக்குள் இளநீர் பறிப்பில் இருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.''ஜீரோ பட்ஜெட் இளநீருங்க... குடிச்சுப் பாருங்க சும்மா ஜில்லுனு தித்திப்பா இருக்கும்'' என்று சொல்லியபடி இளநீரைச் சீவி நம் கையில் கொடுத்தபடியே பேசத்தொடங்கினார்.

நிரந்தர சாகுபடிக்கு மாற்றிய சூழல்!

''இந்த இடத்துல எனக்கு கிணத்துப் பாசனத்துல 15 ஏக்கர் நிலம் இருக்கு. வெங்காயம், மஞ்சள், குச்சிக்கிழங்கு (மரவள்ளி), கடலைனு எதைப் போட்டாலும் அமோக விளைச்சல் கொடுக்கிற செம்மண் பூமி. பக்கத்துல ஆறு ஓடுது. பருவமழை சரியா பெய்ஞ்சு ஆத்துல தண்ணி வர்றப்போ ஊத்துக்கசிவில பாசனக் கிணறு நொம்பிடும். அந்த சமயத்துல 15 ஏக்கருக்கும் பஞ்சமில்லாம, பாசனம் கிடைக்கும். ஆறு வறண்டுச்சுனா... போர்வெல் காப்பாத்திடும்.ஆள் பத்தாக்குறை, கட்டுபடியாகாத விலைனு மாத்தி மாத்தி பிரச்னை வந்ததால, நிரந்தர பயிர் சாகுபடிக்கு மாற முடிவெடுத்து... ஏழு ஏக்கர்ல அல்போன்ஸா, செந்தூரா, நீலம், பெங்களூரானு மா ரகங்களை நடவு செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். ஒரு ஏக்கர்ல களத்துமேடு, தொழுவம் இருக்கு. மீதி ஏழு ஏக்கர்ல மட்டும் வருஷ வெள்ளாமை வெச்சோம். ஆனா, வருஷ வெள்ளாமை தோதா அமையல. அதனால, இந்த ஏழு ஏக்கர்லயும் வேற ஏதாவது நிரந்தர பயிரைப் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன்ல, மாண்டியா இளநீர் பத்தி 'கலர் கலரா இளநீ... கட்டுக்கட்டா பணம்’ங்கிற தலைப்புல செய்தி வந்துச்சு. அதுல, தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவப்பிரகாசம்கிறவரைப் பத்தி எழுதியிருந்தாங்க. சிவப்பிரகாசத்துக்கிட்ட பேசின பிறகு, நாளுக்கு நாள் இளநீருக்கான தேவை அதிகரிச்சுக்கிட்டே வர்ற சூழல்ல, நாமளும் அதை சாகுபடி செய்யுறதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்து கொஞ்சம் வேலைகள் இருந்ததால உடனடியா செய்ய முடியலை. நடவுக்கு கொஞ்ச வருஷம் தள்ளிப் போயிடுச்சு' என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார்.

ஒரு கன்னு 50 ரூபாய்!

'சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப் (Chowghat Orange Dwar) என்ற ரகத்தைத்தான் சிவப்பிரகாசம் நட்டிருந்தார். சி.ஓ.டினு சொல்லப்படுற அந்த ரக கன்னு, மாண்டியாவில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்துல கிடைக்கும்கிற தகவலையும் அவரே சொன்னார். நானும் அங்க முறைப்படி பதிவு செஞ்சு 600 கன்னுகள வாங்கிட்டு வந்து நிழலான பகுதியில பதியம் போட்டு நடவு செஞ்சேன். லாரி வாடகை எல்லாம் சேர்த்து ஒரு கன்னுக்கு 50 ரூபாய் அடக்கமாச்சு. வழக்கமா தென்னங்கன்னுகளை 25 அடி இடைவெளியிலதான் நடவு செய்வாங்க. இது குட்டை ரக தென்னைங்கிறதால, மட்டையோட நீளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால 22 அடி இடைவெளியில நடவு செஞ்சேன்.

ஒரு இளநீர் 14 ரூபாய்


!நடவு செஞ்சு நாலு வருஷம் ஆச்சு. போன வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வெட்ட ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் போனாத்தான் முழுமகசூல் கிடைக்கும். இப்போதைக்கு மாசாமாசம் கிடைக்கிறதை மொத்த வியாபாரிக்கே விலை பேசிக் கொடுத்துடறேன். வெட்டுக்கூலி, வேன் வாடகை எல்லாம் அவங்க செலவு. நமக்கு ஒரு இளநீருக்கு 14 ரூபாய் கிடைக்குது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மாசம் 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வருஷத்துல மொத்தம் எனக்கு 90 ஆயிரம் ரூபாய்தான் செலவாகியிருக்கு. காய் வெட்ட ஆரம்பிச்ச ஒரு மாசத்துலயே செலவு செஞ்ச பணம் கிடைச்சுடுச்சு'' என்று பெருமிதப்பட்ட சுப்பிரமணியம்,''முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைக் குடும்பத்தோடு ஆர்வமா படிச்சுக்கிட்டு வர்றோம். அது மூலம் நாங்க கத்துகிட்ட விவசாய வழிமுறைகள் ஏராளம். ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு வந்த எங்களை ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்தி, நாட்டு மாடு வாங்க வெச்சதோட, 7 வருஷமா தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யுறதுக்கு தூண்டுகோலா இருக்கிற பசுமை விகடன், இப்ப மாசா மாசம் வருமானம் பாக்கறதுக்கும் காரணமா இருக்கு'' என்று நெகிழ்ந்து விடைகொடுத்தார்.

ஏக்கருக்கு 83 கன்றுகள்


!தென்னை சாகுபடி செய்யும் விதம் பற்றி சுப்பிரமணியம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...'தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும்.நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 5ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தென்னை விவசாயம் 100 சதவிகிதம் பொருந்தும். இல்லையேல் பெயர் அளவுக்கே மகசூல் கிடைக்கும்.


ஊட்டத்துக்கு அமிர்தம்...


வண்டுகளுக்கு அஸ்திரம்!தென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் உட்பட இடுபொருட்களையும் சரியான நேரங்களில் கொடுத்தால் மட்டும்தான் மரம் நமக்கு விளைச்சல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர் வழியே கொடுத்து வர வேண்டும். பருவமழைக் காலங்களில் (ஆண்டுக்கு இரு முறை) ஒவ்வொரு மரத்துக்கும் 15 கிலோ கோழி எரு இட வேண்டும். வளரும் பருவத்தில் உள்ள தென்னங்குருத்துகளை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு போன்றவை தாக்கும். சில நேரங்களில் மரங்களின் தண்டுப்பகுதியில் ஓட்டை போட்டு சேதப்படுத்தி அடியோடு சாய்த்து விடும். தென்னை விவசாயத்தின் பெரிய சவாலே இதுதான்.இந்தச் சிக்கலை அக்னி அஸ்திரம் மூலமாக சமாளிக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து அதில் 50 மில்லி எடுத்து வண்டு இருப்பதாக உணரும் குருத்துக்குள் ஊற்றினால் உள்ளே இருக்கும் வண்டு வெளியேறி விடும். அல்லது சலித்த மணலில் சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்துப் பிசைந்து குருத்துக்குள் தூவினால் வண்டுகள் மாண்டு விடும்.

மாதம் ஆயிரம் இளநீர்!குட்டை ரகங்களின் மட்டைகளுக்கு குலைகளைத் தாங்க வலு இருக்காது. அதனால், குலைகள் ஒடிந்து விழுந்து விடும். இதைத்தடுக்க... பாரம் தாங்காமல் கீழ் நோக்கி தொங்கும் குலைகளில் கயிறால் இழுத்து வலுவான மேல்மட்டையில் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உயரம் மரம் வளர்ந்த பிறகு குலைகளைக் கட்டத் தேவை இருக்காது. இந்த சி.ஓ.டி.ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்கலாம். 5 ஆண்டுகளில் முழு மகசூலுக்கு வரும்போது இளநீர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.''தொடர்புக்கு,ஆர்.சுப்பிரமணியம்,  செல்போன்: 9942596971 இயற்கை இளநீர் சுவை அதிகம்