Thursday, 31 July 2014

தீவனப் பயிர் விதைகள் - விலை மற்றும் கிடைக்கும் இடம்

வேலி மசால் - ரூ . 500 / கிலோ
முயல் மசால் - ரூ. 350 / கிலோ
தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ
சூபாபுல் - ரூ. 300 / கிலோ
அகத்தி - ரூ. 500 / கிலோ
Co FS 29 -  ரூ. 400 /கிலோ
கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு
கோ 4 - ரூ. 0.50 / கரணைகிடைக்கும்

இடம்வேளாண் அறிவியல் மையம்நாமக்கல் - 637 002.தொலைபேசி  04286 - 266 345DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.

கால்நடைகளுக்கு ஊறுகாய் புல் தயாரிப்பு

பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

செய்முறை 

மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.

ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.

அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.

தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும்.

அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.

பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.

மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.

குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.

இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும்.

தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.Views: 268Promoteபகிர்கட்விட்டர்
TNAU, தினமலர், தினமணி, பசுமை விகடன், தி ஹிந்து, : விவசாயம் கற்கலாம் ,விவசாய அன்பர்கள் மற்றும் விவசாய செய்திகள் அளித்த அனைவர்க்கும் நன்றிகள்

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் - பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும். இரண்டாம் ஈற்றிலிருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகி வரும் 5-ம் ஈற்று முதல் பால் அளவு குறைய தொடங்கி விடும். வால் நீண்டு இருக்க வேண்டும். கலப்பின மாடாக இருக்க வேண்டும். மிகச்சிறிய மடியாக இருந்தால் பாலின் அளவு குறைவாகவே இருக்கும். மடி தொங்கிக் கொண்டும் துருத்திக் கொண்டும் இருக்கக் கூடாது.நான்கு காம்புகளும் சீராக இருக்க வேண்டும். தெற்கும், மேற்கும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும். மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும். நன்றாக அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும். மாட்டின் தோல் மென்மையானதாக இருக்க வேண்டும். மூக்குத் தண்டு நேராக இருக்க வேண்டும். கண்கள் பிரகாசமாக துருதுருவென்று இருக்க வேண்டும்.

எருமைகள்

அதிக பால் தருபவை : 1.முர்ரா 2.நாக்பூரி 3. மெக்சேனா 4.தில்லி இவை உயர் சாதி இனங்கள். முர்ரா எருமைகளைத் தமிழ்நாட்டில் பலர் வளர்த்து வருகிறார்கள். நம்நாட்டு எருமைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால் தரும். எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகம். எருமைப்பாலுக்கு நல்ல விலை உண்டு.சந்தையில் மாடு வாங்குவதை தவிர்த்து நம்பிக்கையான பண்ணைகளில் வாங்கலாம். பக்கத்து தோட்டத்தில், பக்கத்து ஊரில் விசாரித்துப் பார்த்து வாங்க வேண்டும். மூன்று முறை பால் கறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும்.சந்தையில் வாங்கும் மாட்டில் உள்ள குறைபாடுகள் : கடைவாய்ப் பல் இல்லாமல் இருக்கும். தோட்டத்தில் வந்தவுடன் தின்ற வைக்கோலை அசை போட்டிடாமல் கட்டி கட்டியாக கக்கி வைக்கும். மடியைக் கட்டி கொண்டு வந்து தரகர்கள் பால் கறந்து காட்டு வார்கள். ஆறு, ஏழு மாதமான கறவையை வேறு மாட்டின் இனங்க ளென்று கொண்டு வந்து இளங்கன்று மாடு என்று நம்ப வைப்பார்கள். தோட்டத்திற்கு வந்தவுடன் அந்தக்கன்றுக்கு மாடு பால் தராது. சுழி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கெட்ட சுழியைச் சூடு போட்டு அழித்து விடுவார்கள். போன ஈற்றில் மதநோய் வந்த மாடாக இருக்கும். முறிந்து போன கொம்பை ஒட்டிச்சாயம் பூசிக்கொண்டு வருவார்கள். இப்படிப் பட்ட தில்லுமுல்லுகள் ஏராளமாக நடக்கும். அதனால் சந்தையில் மாடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

நாட்டுக்கோழி :

வளர்க்க ஆசைப்படுபவர்கள் கிராமத்திலேயே சில குஞ்சுகளையும், சேவலையும் வாங்கி வளர்க்கலாம். இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை. திறந்தவெளியில் சென்று மேய்ந்து வரும். தோட்டத்தில் வளர்ப்பதற்கு இது மிகவும் ஏற்றது. நாய், நரி, பூனைகள், கோழிக்கு பகைவர்கள்.நாட்டுக்கோழி தோட்டத்தில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் : பயிரைத்தாக்கும் புழுப்பூண்டுகளைத் தின்னும் கரையான் எங்கிருந்தாலும் விடாது. புழு பூச்சிகளைப் பிடித்து தின்று விடுவதால் மருந்து தெளிக்கும் செலவு மிச்சமாகும். மாலையில் கொட்டிலில் அடைப் பதற்கு முன்பு கம்பு, ராகி, மக்காச்சோள குருணை, உடைத்த நாட்டுச்சோளம் ஆகியவற்றை இறைத்து வைக்கலாம். ராணிக்கட் நோயைத் தாக்கும் தடுப்பூசியை குஞ்சுகளுக்கு ஒரு மாதம் ஆனவுடன் போட வேண்டும். மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன் 

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்!

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.
இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?:

 நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.

பூங்கா கழிவுகள்:

மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்

.ஆக்சிஜன் அவசியம்:

கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும். இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

Tuesday, 29 July 2014

பச்சைக்காய் பயிரிட்டால் பண அறுவடை அமோகம்!

பச்சைக்காய் பயிரிட்டால் பண அறுவடை அமோகம்!

ஜனாதிபதி விருது வென்று பொம்மராஜபுரம் முருகன் அசத்தல்!

ஒரு ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் லாபம் தரக்கூடிய பச்சைக்காய் என்கிற புது ஏலக்காய் ரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் தேனி மாவட்டம், பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த முருகன். சாகுபடியும் சக்கைப்போடு போடுகிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய இந்தப் புதிய ரக ஏலக்காய் கண்டறிந்ததற்காக, கடந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் சிறந்த கண்டுபிடிப்பு விருதோடு, ஒரு லட்ச ரூபாய் பரிசுப் பணத்தையும் பெற்றார்.மேகமலைக்கு வெகு அருகில் இருக்கிறது இவரது ஊர். இங்குதான் இந்தியாவிலேயே ஏலக்காய் அதிகம் பயிரிடப்படுவதாக சொல்கிறார்கள். இவருக்கு சொந்தமாக பன்னிரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. நாற்பது வருடங்களாக காஃபியும், ஏலக்காயும் பயிரிட்டு வருகிறார்கள். ஏலக்காய் சாகுபடியில் நல்ல அனுபவம்.ஆரம்பத்தில் மலபார் என்கிற ஏலக்காய் ரகத்தை அதிகமாக பயிரிட்டு வந்தோம். ஒரு முறை அறுவடை செய்யும்போது, அதில் ஒரு செடியின் காய்கள் மட்டும் மற்ற காய்களை விட பெரியதாகவும், கரும்பச்சை நிறத்திலும் இருந்தன. இந்தச் செடியில்தான் அதிகம் காய்களும் காய்த்திருந்ததைக் கவனித்தேன். மலபார் ரகத்தில் ஒரு செடிக்கு ஒரு கிலோதான் ஏலக்காய் கிடைக்கும். ஆனால் இதில் மட்டும் மூன்று கிலோ காய்த்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இது ஏதோ புது ரகம் என்று தோன்றியதால் அந்தச் செடியிலிருந்து நாற்றுகளை எடுத்து தனியாக நட்டு பராமரிக்க ஆரம்பித்தேன். நான் நினைத்தது நடந்தது. அந்தச் செடிகளில் நல்ல மகசூல். காய்களும் கனமாக நல்ல தரத்தோடு காய்த்தன. கரும்பச்சை நிறத்தில் காண்பதற்கு களிப்பாக இருந்ததால் நானே பச்சைக்காய் என்று பெயர் வைத்தேன்" என்று, தான் கண்டுபிடித்த கதையை சொல்கிறார் முருகன்.ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் அளவுக்குதான் பச்சைக்காய் பயிரிட்டிருக்கிறார். நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கியதால், இப்போது மொத்தமாகவே பச்சை ஏலக்காய் பயிர்தான். தரமான ஏலக்காய் என்பதால் நல்ல விலைக்குப் போகிறது. கேரளாவின் விவசாயத்துறை அதிகாரிகள் இவரது தோட்டத்துக்கு வந்து ஆய்வுசெய்து பாராட்டியதோடு, மற்ற விவசாயிகளுக்கும் இந்த ரகத்தைப் பரிந்துரை செய்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநில விவசாயிகள் முருகனிடம் வந்து நாற்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.பயிரிடத் தொடங்கி பத்தாவது மாதம் ஏலக்காய் காய்க்கும். மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம். நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒருமுறை அதே செடியில் மீண்டும் காய்க்கும். ஆரம்பத்தில் நட்ட செடிகள்தான் இன்னமும் முருகனுக்கு மகசூல் தந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு புதிய நாற்றுகளை நடவேண்டிய அவசியமே இதுவரை இல்லை. இந்தப் பச்சை ஏலக்காய் ரகத்தைப் பொறுத்தவரை விதை போட்டு பயிர் செய்யாமல், நாற்று எடுத்து நட்டால்தான் அதன் இயல்பான வண்ணமும், தன்மையும் கிடைக்கின்றன. ஈரான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பச்சை ஏலக்காய்க்கு நல்ல டிமாண்ட்.இவரது கண்டுபிடிப்பை மத்திய அரசு ஊக்குவித்து மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. கேரளாவைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், புதிய ரகத்தில் அதிக உற்பத்தி செய்பவருக்கான பிரிவில் விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது.என்னுடைய தொலைபேசி எண் 04554-293849. சக விவசாயிகள் இது தொடர்பாக சந்தேகம் ஏதேனும் கேட்க விரும்பினாலோ, உதவிக்கு அழைத்தாலோ உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்கிறார் முருகன். உபயோகப்படுத்திக்கங்க உழவர்களே! பச்சைக்காய் : பக்கா டிப்ஸ்!பச்சைக்காய் ரகத்தில் ஒரு செடிக்கு நாலு கிலோ வரை காய்ப்பதோடு, ஏக்கருக்கு ஆயிரத்து இருநூறு கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதுவே சாதாரண ரகத்தில் ஒரு செடிக்கு  ஒரு கிலோ ஏலக்காயும் , ஏக்கருக்கு ஐநூறு கிலோ மகசூலும் மட்டுமே கிடைக்கும்.ஏலக்காயைப் பொறுத்தவரை எடைதான் முக்கியம். ஏலக்காய்க்குள் இருக்கும் அதிகப்படியான விதைகள்தான் எடை கொடுக்கும். பச்சைக்காய் ரகத்தில் ஒரு காயில் இருபத்தெட்டு விதைகள் இருக்கும். இதுவே சாதாரண ஏலக்காயில் பதினைந்திலிருந்து இருபது விதைகள்தான் இருக்கும். சாதாரண ரகத்தில் ஒரு கிலோவுக்கு எட்டாயிரம் காய்கள் காய்க்கும். பச்சைக்காய் ரகத்தில் ஐயாயிரம் காய் இருந்தாலே இந்த எடை கிடைக்கும்.பச்சைக்காய் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது. சாதாரண ரக ஏலக்காய் அறுநூறு ரூபாய்தான்.ஏலக்காய் செடி பதினைந்து முதல் பதினெட்டு அடி வரை வளரும். செடியின் அடிப்பகுதியில சரம் சரமாக தட்டை வரும். அந்தச் சரத்திலருந்து சின்னச் சின்ன காம்பில் ஏலக்காய் காய்க்கும். விதைக்காக என்றால் ஏலக்காயை அப்படியே பழுக்க விட்டுவிட வேண்டும்.  ஏலக்காய் பழ விதை கிலோ ஆயிரம் ரூபாய். இந்த விதையை ரெண்டு ஏக்கருக்கு சாகுபடி செய்யலாம்.ஒரு ஏலக்காய் செடியின் நாற்று  நூறு ரூபாய்.

வெங்காயம் நட்டு... வெற்றிக்கொடி கட்டு.

வெங்காயம் நட்டு... வெற்றிக்கொடி கட்டு..!

எம்.செந்தில்குமார்
உலக அளவில் அதிகம் வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்த இடம் இந்தியாவிற்குதான். மாறும் தட்பவெட்ப நிலை, காலம் மாறிப் பெய்யும் மழை ஆகியவற்றால் இந்தியாவில் வெங்காய உற்பத்தி சமீபகாலமாக குறைந்து வருகிறது. இதனால் வெங்காயத்தைப் பயிரிட்டு நஷ்டத்தைச் சந்தித்த விவசாயிகள் பலர் வேறு பயிர்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி 20 வருடங்களாக சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார் தேனி மாவட்டம் பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த வேல்ஆண்டவர். சின்ன வெங்காய சாகுபடி குறித்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வேல் ஆண்டவர்:வெங்காய சாகுபடியில் இயற்கையின் ஒத்துழைப்பு அவசியம் என்றாலும் நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் மூலம் குறைந்த காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். பழைமையான நடைமுறைகளுடன்  தற்காலத் தொழில்நுட்பங்களையும் இணைத்து பயன்படுத்தினால் வெங்காய சாகுபடியில் வெற்றி உறுதி. நடவு முறை மற்றும் மண்:வெங்காயத்தை நடவு செய்வதற்குமுன் நிலத்தை நன்றாக உழுது மண்ணை பொலபொலவென இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். உழுவதை ஏப்ரல், மே மாதங்களில் செய்து இரண்டு மாதங்களுக்கு நிலத்தை ஆற விடுவது  நல்லது. மாட்டு எரு அல்லது ஆட்டுக்கிடை போட்டால் மண் வளம் பெருகும். சின்ன வெங்காயத்தை மேட்டுப்பாத்தி மற்றும் கிடைப்பாத்தி என இருவகையிலும் நடலாம். மேட்டுப்பாத்தி அமைத்தால் அதிக மழை பெய்தாலும் நிலத்தில் நீர் தங்காது. இதனால் வெங்காயச் செடிகள் அழுகுவது தவிர்க்கப்படும் என்பதால் நான் மேட்டுப்பாத்தியையே தேர்ந்தெடுத்தேன். நான்கு அடி அகலப் பாத்தியில் முக்கால் அடிக்கு ஒரு வரிசை என நான்கு வரிசைகளும், ஒவ்வொரு வரிசையிலும் 4 விரல்கள் பக்கவாட்டு இடைவெளியில் ஒரு நாற்று என நட வேண்டும்.பாத்திக்கு நடுவில் 12 ட்ட் அளவிலான  சொட்டுநீர்ப் பாசனக் குழாயை அமைத்துள்ளேன்.நான் செம்மண்ணில் வெங்காயம் பயிரிட்டுள்ளேன். கரிசல் மண்ணிலும் வெங்காயம் நடலாம். வடிகால் வசதி மிகவும் முக்கியம். கரிசல் மண் நீரை அதிகம் ஈர்த்துக் கொள்ளும் என்பதால் கரிசல் மண்ணில் வெங்காயம் நடும்போது குறைந்த அளவே நீரைப் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர்:வெங்காயத்தில் நீர் மேலாண்மை மிகவும் முக்கியம்.செடிகளின் வேர் நனையும் அளவிற்கு தண்ணீர் அளித்தால் மட்டும் போதும். சில விவசாயிகள் அளவு தெரியாமல் தண்ணீர் பாய்ச்சுவதால், வெங்காயச் செடிகள் அழுகி நஷ்டத்தை சந்திக்கின்றனர். நான் சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினை வருவதில்லை.நாற்று நட்ட நாற்பது நாட்கள் வரை ஐந்து நாட்களுக்கு ஒருமுறையும், நாற்பது நாட்களுக்கு மேல் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் விட வேண்டும்.அப்போதுதான் காய் பிடித்து, நல்ல நிறத்துடன் வெங்காயம் விளையும்.

காலம் மற்றும் விதைத் தேர்வு

:வெங்காய நடவுக்கு டிசம்பர், ஜனவரி மற்றும் ஜூன், ஜூலை ஆகியவை உகந்த காலமாக இருக்கும். தட்பவெட்பச் சூழல்களை ஆராய்ந்து நடவு காலத்தை அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.பொதுவாக காய் நடவு மற்றும் நாற்று நடவு என்ற இருவகைகள் வெங்காய நடவில் பின்பற்றப்படுகின்றன. நான் காய் நடவு முறையை பின்பற்றி வருகிறேன். காய் நடவு முறையில் வெங்காயம் 65 முதல் 75 நாட்களில் விளைச்சலுக்கு வரும். இந்த முறையில் ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். நல்ல விதைகள் பத்து கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விலையாகிறது. பொதுவாக பல விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வெங்காயத்தையே அடுத்த நடவிற்கு விதையாகப் பயன்படுத்திக் கொள்வர். வெளியில் விதை வாங்க விரும்பும் விவசாயிகள் நடுத்தர அளவிலான காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பழைய வெங்காயமாக இருக்க வேண்டும். நகத்தால் வெங்காயத்தின் அடிப்பகுதியைத் கீறினால் நீர்ச்சத்து குறைவாக இருக்க வேண்டும். நடவு முடிந்து 60 நாட்கள் ஆன வெங்காயம் விதைக்கு நல்லது.ஜூலை மாதத்தில் வெங்காயம் பயிரிட்டால் காய் நடவு முறையைப் பின்பற்றுவது நல்லது. டிசம்பர்,ஜனவரி கால நடவிற்கு கோ.ஆ. எண் 5 (covai onion no 5)என்ற ரகத்தைப் பயிரிடலாம்.இந்த ரகம் 100 முதல் 110 நாட்களில் விளைச்சலுக்குத் தயாராகும்

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி:

அடி உரம் டி.ஏ.பி. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அளிக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைத்ததும் அடியுரத்தை அளித்துவிட வேண்டும். நாற்று நட்ட 15 நாட்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் சல்பர் கலந்த உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை அளிக்க வேண்டும். 30 நாட்களில் அதே போல் உரம் அளிக்க வேண்டும்.45-ஆவது நாளில் தழைச்சத்து,மணிச்சத்து,சாம்பல் சத்து, சல்பருடன் அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாஷ் தலா 25 கிலோ அளிக்க வேண்டும்.பூச்சிக்கொல்லியைப் பொறுத்தவரையில் வரும்முன் காப்பதே சிறந்தது. பல விவசாயிகள் பூச்சித் தாக்குதல் தொடங்கியவுடன் மருந்து அடிக்கலாம் என நினைக்கின்றனர். அது தவறு. இப்படிச் செய்தால் பூச்சித் தாக்குதலால் விளைச்சல் குறைவதோடு இரண்டாம் தர வெங்காயமே கிடைக்கும்.பச்சைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை பொதுவாக வெங்காயத்தை தாக்கக் கூடிய பூச்சிகள். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருந்து கேனின் மூலம் எட்டு முறை அதாவது 80 லிட்டர் அளவிற்கு அடிக்க வேண்டும். ஒரு டேங்கிற்கு 20 கிராம் அசிபேட் மற்றும் 30 மி.லிட்டர் புரோனோபாஸ் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை அடித்துவிட வேண்டும்.

சந்தை வாய்ப்புகள்:

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. நேரத்திற்கு ஏற்றாற்போல் விலை அதிகரிக்கும். மழை பெய்யும் காலங்களில் வெங்காயத்திற்கு டிமாண்ட் அதிகரிக்கும். எனவே சரியான விலை கிடைக்கவில்லை என நினைக்கும் விவசாயிகள் ஸ்டாக் வைத்திருந்து விற்கலாம்.எனக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 டன் அளவிற்கு விளைச்சல் கிடைக்கிறது. ஒரு கிலோ தற்போது 15 ரூபாய் வரை விலை போகிறது. எனவே குறைந்தபட்சம் 60 நாட்களில் 70,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.டிப்ஸ்:வெங்காயத்திற்கு பராமரிப்புச் செலவு குறைவு, வேலையாட்கள் தேவையும் குறைவு. வெங்காயச் சாகுபடியில் முன்னெச்சரிக்கை உணர்வுடன் சரியான நேரத்தில் பூச்சிமருந்து அடித்து, தேவையான அளவு மட்டும் தண்ணீர் பாய்ச்சி பயிரைப் பாதுகாத்தால் குறைந்த நாட்களில் நல்ல லாபம் பார்க்க முடியும். இயற்கை ஒத்துழைத்தால் எதிர்பார்க்காத அளவு லாபம் அடையும் வாய்ப்பும் உள்ளது" என்கிறார்

.தொடர்புக்கு: 89399 90000 (இரவு 8 மணிக்கு மேல்)

Monday, 28 July 2014

தவேப வேளாண் இணைய தளம் :: கிசான் அழைப்பு மையம்(1800-180-1551)

தவேப வேளாண் இணைய தளம் :: கிசான் அழைப்பு மையம்(1800-180-1551)

விவசாயி குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம்நமது நாட்டில் தனியார் துறையிலாகட்டும், அரசுத்துறையிலாகட்டும் தொலைபேசி வழி தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதி கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு முறையை வேளாண் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்போது இத்திட்டம் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. இக்குறைதீர்க்கும் தொலைபேசி சேவை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு1800-180-1551 என்ற இலவச அழைப்பு எண்ணின் மூலம் வழங்கப்படுகிறது. இது முதன் முதலில் 21.01.2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  2004ம் ஆண்டு ஜீன் 10ம் தேதியிலிருந்து இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஞாயிறு மற்றும் முக்கிய அரசாங்க விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் ஒலி பதிவு செய்யும் கருவி மூலம் வேளாண் பெருமக்களின் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

Wednesday, 16 July 2014

ஏக்கருக்கு 40 குவிண்டால்....

பாத்தி பிடிக்க தேவையில்லை.வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா.ரசாயனத்தில் 30 குவிண்டால்.இயற்கையில் 40 குவிண்டால்.இறவைப் பாசனம் மற்றும் மானாவாரி இரண்டுக்குமே ஏற்றது; அதிக தண்ணீர் மற்றும் பராமரிப்பு தேவையே இல்லை; குறுகிய காலத்தில் மகசூல்; ஓரளவுக்குக் கட்டுபடியான விலை; வில்லங்கமில்லாத விற்பனை என்பது போன்ற பல காரணங்களால், மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமான முறையில் சாகுபடி செய்து, மகசூல் கண்டுவரும் விவசாயிகளுக்கு மத்தியில், விவசாயத்தோடு சொட்டுநீர்ப் பாசனத்தையும் இணைத்து மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் எடுத்திருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ம. கோவிந்தராசன்!மக்காச்சோள அறுவடை தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான்... கோவிந்தராசன் வயலுக்கு நாம் சென்றோம். அன்போடு வரவேற்றவர் படபடவென பேச ஆரம்பித்துவிட்டார்.''பரம்பிக்குளம்-ஆழியாறுப் பாசனத் திட்டம் (பி.ஏ.பி.) மூலமா, ஒரு போகம் விட்டு... ஒரு போகம் பாசனம் கிடைக்கற பகுதி இது. அதாவது, வருஷத்துல நாலு மாசம் மட்டும்தான் தண்ணி கிடைக்கும். அதுவும் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்தான்.  இப்படி குறைஞ்ச அளவு நீராதாரத்தை வெச்சு நெல், கரும்பு, மஞ்சள் மாதிரியான நீண்டநாள் பயிருங்கள சாகுபடி செய்ய முடியாது. நிலக்கடலை, மக்காச்சோளம்னு குறுகியகாலப் பயிருங்கதான் சரிப்பட்டு வரும். ரொம்ப காலமா இதன்படிதான் இங்க சாகுபடி நடக்குது. இடையில நல்ல விலை கிடைக்க ஆரம்பிச்சதால... மக்காச்சோளம் மட்டும் முக்கிய வெள்ளாமையா மாறிடுச்சு.உற்பத்திச் செலவு ரொம்ப குறைச்சல், அதிக உரம், பூச்சிமருந்து தேவைப்படாது, நிறைவான மகசூல், ஒரளவு கட்டுப்படியான விலையும் கிடைக்கறதால என்னை மாதிரி கிணத்துப் பாசனம் செய்ற விவசாயிகளும் இப்ப மக்காச்சோளத்தை அதிகம் பயிரிட ஆரம்பிச்சுருக்காங்க.சமச்சீர் உரமேலாண்மை முறையில (இயற்கை, ரசாயனம் இரண்டும் கலந்தது) மூணு ஏக்கரும், சொட்டுநீர்ப் பாசனத்தோட முழுக்க இயற்கை முறையில ஒரு ஏக்கரும் சாகுபடி செஞ்சிருக்கேன். வழக்கமா... கொஞ்ச இடத்துல சொட்டுநீர்ப் பாசனத்துல காய்கறி சாகுபடி செய்வேன். கடைசியா, வெங்காயம் போட்டு அறுவடையை முடிச்ச வயல்ல சொட்டுநீர்க் குழாய் அப்படியே கிடந்துச்சு. அந்த ஒரு ஏக்கர்ல மக்காச்சோளத்தை நடவு செஞ்சி பார்ப்போம்னு முயற்சி பண்ணினேன். விளைஞ்சிருக்கறத பார்த்தா... வாய்க்கால் பாசனத்தை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்னுதான் தோணுது'' என இயற்கை மற்றும் சொட்டுநீர் கூட்டணி மகிமை பேசிய கோவிந்தராசன்,''அறுவடை முடிஞ்ச பிறகு மகசூல் கணக்கைப் போட்டுச் சொல்றேன். அதுக்கு முன்ன என்னோட சாகுபடி தொழில்நுட்பங்களைச் சொல்லிடறேன்'' என்றபடி சொல்லத் தொடங்கினார், 'சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை முறையில் மக்காச்சோள சாகுபடி' எனும் பாடத்தை..!ஏக்கருக்கு 8 கிலோ விதை!மக்காச்சோளத்தின் வயது 110 நாட்கள். வடிகால் வசதி உள்ள அனைத்து வகை மண்ணிலும் இது வளரும். இறவையில் வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து, 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து, மீண்டும் ஒரு உழவு செய்து, நிலத்தை நன்றாக ஆறபோட வேண்டும்.சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கத் தேவையில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்குச் செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி  லேடரல் குழாய்களை (ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கப்பட்ட குழாய்) அமைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.அடிச்சாம்பலை விரட்டும் பஞ்சகவ்யா!நடவு செய்த பிறகு, ஈரத்தைப் பொறுத்து வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். மொத்த சாகுபடி காலத்தில் அதிகபட்சம் 40 முறை பாசனம் செய்யலாம். விதைத்த 6-ம் நாள் முளை விடும். வழக்கமான முறையில் 15-ம் நாளில் களை எடுக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசன முறையில் பயிருக்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதால், மற்ற இடங்களில் களை வரும் வாய்ப்பு குறைவு. 15-ம் நாளில், வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசனநீர் வழியாக கொடுக்க வேண்டும். ஏற்கெனவே வயலில் கொட்டிய கோழி எருவின் சத்துக்களை எடுத்து செடிகளுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்வதுடன், பயிர் வளர்வதற்குத் தேவையான கூடுதல் தழைச்சத்தையும் பஞ்சகவ்யா கொடுக்கும். 40-ம் நாளில் ஆள் உயரத்துக்கு வளர்ந்து பூக்களோடு பயிர் நிற்கும். அந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லிட்டர் பஞ்சகவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால், பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள், விரைவான வளர்ச்சி அடைவதுடன், அடிச் சாம்பல் நோயும் தாக்காது!110 நாளில் அறுவடை!60 மற்றும் 70-ம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100-ம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால், சிவப்பு நிறத்தில், வரிசை கட்டிய தங்கப் பற்கள் போன்று மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்தி விடவேண்டும். 110-ம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். ஆட்களை விட்டு, கதிர்களை மட்டும் ஒடித்து எடுக்க வேண்டும். களத்துமேட்டில் குவித்து, கதிரடிக்கும் இயந்திரம் மூலமாக மணிகளைப் பிரித்துக் கொள்ளலாம்.சொட்டுநீர் 8 லட்சம்...வாய்க்கால் பாசனம் 18 லட்சம்!ஒரு ஏக்கருக்கு, சொட்டுநீர்ப் பாசனத்தில் ஒரு முறை பாசனம் செய்ய, 20 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும். மொத்த சாகுபடி காலமான 110 நாட்களுக்கும் கணக்கிட்டால்... 8 லட்சம் லிட்டர். ஆனால், வாய்க்கால் பாசனத்தில் 18 லட்சம் லிட்டர் வரை நீர் கொடுக்கப்படுகிறது. எனவே, நீர்ப் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் ஒரு வரப்பிரசாதமே! அறுவடை முடிந்த சோளத்தட்டைகளை வெட்டி எடுத்து, மாட்டுத் தீவனத்துக்காகச் சேமித்துக் கொள்ளலாம்'சாகுபடி பாடம் முடித்த கோவிந்தராசன், ''அறுவடையான மக்காச்சோளத்தை வயலுக்கே வந்து எடை போட்டு வாங்கிக்க நிறைய வியாபாரி கள் இருக்கறாங்க. ஆனாலும், பக்கத்துல இருக்கற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு போறதுதான் நல்லது.கட்டுப்படியான விலை கிடைக்கிற வரைக்கும் அங்கேயே இருப்பு வெச்சுக்கலாம். அதோட மதிப்புக்கு ஏத்த மாதிரி, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பொருளீட்டுக் கடன் கொடுக்கறாங்க. அதை வாங்கி, அடுத்தக் கட்ட சாகுபடி உள்ளிட்ட எல்லாச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கலாம். இருப்பு வெச்சுருக்கற மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்குறப்ப வித்துட்டு, கடனை அடைச்சுடலாம்.இப்ப, ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகுது. இது ஓரளவு கட்டுபடியாகுற விலைதான். இதே விலை தொடர்ந்து கிடைச்சா, குறைந்த செலவுல, நிறைஞ்ச லாபம் கொடுக்குற மக்காச்சோளத்துக்கு மகுடம் சூட்டி கொண்டாடுவாங்க விவசாயிங்க'' என்று மலர்ந்த முகத்துடன் சொன்னவர், மகசூல் கணக்கை நாலு நாள் கழிச்சி சொல்றேன்'' என்றபடியே விடை கொடுத்தார்.அதன்படியே தொடர்பு கொண்டவர், ''ஒரு ஏக்கர்ல 40 குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கு.  வழக்கமான முறையில் சாகுபடி செய்தா 30 குவிண்டால்தான் கிடைக்கும். இயற்கை முறை, சொட்டுநீர்ப் பாசனம் அப்புறம் பாத்தி, வாய்க்கால் எதுவும் இல்லாததுனு நிறைய அனுகூலங்கள் இருந்ததால, 10 குவிண்டால் வரை கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கு. அதேசமயம், செலவோ குறைஞ்சிருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்!கூடும் செலவு, குறையும் குவிண்டால்!இயற்கை உரம் மற்றும் ரசாயன உரம் இரண்டையும் கலந்து செய்யப்படும் சமச்சீர் உரமேலாண்மை முறைப்படி, வாய்க்கால் பாசனத்தில் 3 ஏக்கர் மக்காச்சோளம் தனியாக சாகுபடி செய்துள்ளார் கோவிந்தராஜன். அதன் தொழில்நுட்பங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன-'உழவு செய்து, பார் கலப்பை மூலம் பார் பாத்தி அமைத்து, விதைகளை நடவு செய்யவேண்டும். பாத்தியில் உள்ள பாரின் அளவு ஒன்றே கால் அடி இருக்க வேண்டும். ஏக்கருக்கு 7 கிலோ விதைகள் தேவைப்படும்.பாரின் இரு சரிவிலும் ஒரு அடி இடைவெளியில் விதையை ஊன்ற வேண்டும். பின்னர், பார் வரப்பு முழுவதும் நனையும்படி தண்ணீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதும். 15-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ தழைச்சத்து உரமான யூரியாவை ஏகமாக வயல் முழுவதும் இறைத்துவிட வேண்டும். இந்த யூரியா கோழி எருவில் உள்ள சத்துக்களை விரைவாக செடிகளுக்கு எடுத்துக் கொடுக்க உதவும்..  40-நாளில் 50 கிலோ யூரியாவை  கொடுக்க வேண்டும். 110-ம் நாள்... அறுவடைதான்


!ரசாயன முறையில் ஏக்கருக்கு 19 ஆயிரம் செலவு செய்து

,30 குவிண்டால் மகசூல் கிடைத்தது. அதேசமயம், சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்தபோது, ஏக்கருக்கு 14 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. மகசூலோ... 40 குவிண்டால் கிடைத்தது.வாய்க்கால் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனத்தில் வேலையும் குறைவு. ஆக, குறைந்த செலவு மற்றும் உழைப்பிலேயே பலமான வருமானம் என்பது என் அனுபவ உண்மை! வரும் காலத்தில் அனைத்து இடத்திலும் சொட்டுநீர்ப் பாசனத்தில் முழுக்க இயற்கை விவசாயம் தான்'' என்றார் மகிழ்ச்சியாக.  படங்கள்:தி. விஜய்தொடர்புக்கு, ம.கோவிந்தராசன், அலைபேசி: 94438-90

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

''மனசும் உடம்பும் திடமா இருக்கணும்னா... எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதைவிட சிறந்த மருந்தோ, யோகாவோ கிடையாது. இது பயிருங்களுக்கும்கூட பொருந்தும். அதனாலதான், மனசுக்கு நிறைவான இயற்கை வழி விவசாயம் செய்துகிட்டிருக்கேன். அதனாலதான் என் பயிர்கள் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்குது. ரசாயனம் பயன்படுத்துனா... பயிர்கள் கண்டிப்பா அழத்தான் செய்யும்''-அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்டே சொல்கிறார், பல்லடம் அருகே உள்ள கல்லம்பாளையத்தைச் சேர்ந்த வாழை இலை விவசாயி 'ஓஷோ' பழனிச்சாமி. 'வர்றாரு வல்லுநர்' பகுதியில் ஏற்கெனவே இடம்பிடித்ததன் மூலம் நமது வாசகர்களுக்கு அறிமுகமான இந்த 62 வயது இளைஞர், தனக்கு மட்டுமல்ல... எதிரிலிருப்பவர்களும் உற்சாகம் குறைந்துவிடாமல் குஷியோடு இருக்கும் வகையிலேயே தன்னுடைய பேச்சை அமைத்துக் கொண்டிருப்பது சிறப்பு.''பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த ஊர்லதான். படிக்கற காலத்தில இருந்தே எனக்கு இயற்கை மேல ஆர்வம் அதிகம். திண்டுக்கல் பக்கத்துல இருக்குற சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்துல இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். கொஞ்சநாள் 'ஓஷோ' இயக்கத்துல இருந்தேன். அதிலிருந்து 'ஓஷோ பழனிச்சாமி'னு கூப்பிடுறாங்க. தொடர்ந்து நம்மாழ்வார் மாதிரியான இயற்கை வல்லுநர்களோட பழக்கம் வெச்சுக்கிட்டு, பதினஞ்சு வருஷமா தென்னை, வாழை, சவுக்கு, சப்போட்டா, பசுந்தீவனப் பயிர்னு இயற்கை வழி விவசாயம் பாத்துக்கிட்டிருக்கேன்.வாழ வைக்கும் வாழை...!முழுக்கமுழுக்க மண்புழு உரம், தொழுவுரம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூடாக்கு, இயற்கைப் பூச்சிவிரட்டினு மட்டுமே பயன்படுத்துறதால, என் பூமியில் துளிகூட நஞ்சு கிடையாது. '100% இயற்கைத் தன்மை கொண்ட மண்வளம்'னு அடிச்சுச் சொல்வேன். தக்காளி, வெண்டை, கத்திரி, மிளகாய்னு காய்கறி விவசாயத்தையும் இயற்கை வழியில செஞ்சுருக்கேன். எதைப் போட்டாலும் கப்புனு விளையுற செம்மண். பன்னீர் மாதிரி நல்ல தண்ணி, கூடவே இயற்கை இடுபொருள்... மகசூலைப் பத்தி சொல்லவா வேணும்..? இப்ப காய்கறி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையால, வாழை, தென்னைனு பண்ணிக்கிட்டுருக்கேன். ஒரு ஏக்கர்ல நடக்கும் இலைவாழை விவசாயம்தான் எனக்கு எப்போதும் கை கொடுத்துட்டிருக்கு'' என்று நீண்ட முன்னுரை கொடுத்த பழனிச்சாமி, ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தைத் தொடங்கினார்.வாடல்நோயை வர விடாத அக்னி அஸ்திரம்...!நிலத்தைப் புழுதி பறக்க ஒருமுறை உழுது 5 டிராக்டர் தொழுவுரம், 5 டிராக்டர் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, மீண்டும் இரண்டு முறை டிராக்டர் மூலம் உழவு செய்து, மண்ணை திருநீறு போல பொலபொலப்பாக்க வேண்டும். பின் வாய்க்கால் அமைத்து, நாலரை அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நாட்டுவாழைக் கன்று நடவு செய்ய வேண்டும். கன்றைச் சுற்றி வட்டப் பாத்தி எடுக்க வேண்டும். இலை வாழை என்பதால், கன்றுகளுக்கிடையில் அதிக இடைவெளி தேவையில்லை. இதற்கு காரணம், வாழை இலைகளைத் தொடர்ந்து, அறுவடை செய்வதால் மரங்களுக்குத் தேவையான சூரிய வெளிச்சமும், காற்றும் போதிய அளவுக்கு கிடைத்துவிடும்.ஒரு ஏக்கரில் 2,000 கன்றுகளை நடவு செய்யலாம். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 2 மற்றும் 4ம் மாதங்களில் மண்வெட்டி மூலம் களை எடுத்து, மண் அணைப்பு செய்து, ஒவ்வொரு கன்றுக்கும் இரண்டு கையளவு (500 கிராம்) மண்புழு உரம் இட வேண்டும். 3ம் மாதத்தில் ஒவ்வொரு மரத்தின் வேர்ப்பகுதியில் தலா 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைத்து மூட வேண்டும். இது நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நடவிலிருந்து நான்கு மாதங்கள் வரை மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமூத்திரம் கலந்து தெளிக்க வேண்டும். இது வாடல்நோயைக் கட்டுப்படுத்தும்.வாழை தரும் வருமானம்.. மாதம் ரூபாய் 7,500!ஐந்தாவது மாதத்தில் இருந்து தொடர்ந்து எட்டு மாதங்கள் வரை இலைகளை அறுக்கலாம். அதற்குள் பக்கக் கன்றுகளும் நன்கு வளர்ந்து விடும். அதில் மூன்றை மட்டும் நிறுத்திவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். தொடர்ந்து பக்கக் கன்றுகளில் இருந்தும் இலை அறுக்கலாம். இதுபோல மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இலையை அறுவடை செய்யலாம். பக்கக் கன்று பெரிதாக வளர்ந்த பிறகு, தாய் மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி தோப்பினுள் போட்டு விட்டால், அவை மட்கி நிலத்துக்கு உரமாகி விடும்'சாகுபடிப் பாடத்தை முடித்த பழனிச்சாமி வருமானம் பற்றி பேசத் தொடங்கினார்.''தலைவாழை இலை, நடு இலை, பக்கக் கன்னுல வர்ற இலைனு ஒரு நாளைக்கு 500 இலை வரைக்கும் அறுக்கலாம். ஒவ்வொண்ணையும் தனித்தனியா தரம் பிரிச்சு அன்னன்னிக்கு உள்ள விலைக்கு கொடுக்கலாம். நாமளே அறுத்து தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டு போனா, கல்யாண சீசன் சமயத்துல மாசம் இருபதாயிரம் ரூபா வரைக்கும் கிடைக்கும். மத்த மாசத்துல பத்தாயிரம் ரூபா வரை கிடைக்கும். அறுக்குறதுக்கு ஆள் இல்லாததால, மொத்தமா மாசத்துக்கு 7,500 ரூபாய்னு வியாபாரிகிட்ட பேசி விட்டுட்டேன். அவரே அறுத்து எடுத்துக்கிட்டு போயிடுவார்'' என்று சிரித்த முகம் மாறாமல் விடை கொடுத்தார் பழனிச்சாமி.படங்கள் தி. விஜய்

Sunday, 13 July 2014

பாரம்பரிய நெல் - ஒரு பணப்பயிரே!



(அறிமுகம்: ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வேளாண் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்துச் சென்னையில் ஒரு பள்ளியில் வேளாண் நிர்வாகியாக இருந்தவர் ஜெயக்குமார். 33 வயதே ஆன இவரும், இவரின் மனைவியும் சென்னையில் பணி புரிந்து கொண்டு , சொந்த வீடும், ஒரு பெண் குழந்தையுமாக கிராமத்து மக்கள் அனைவரும் கனவு காணும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். மாதம் 30,000 வருமானத்தைத் துறந்து தன் சொந்த ஊரான மேலாநல்லூரில் தன் தந்தை நிர்வாகம் செய்து வரும் 20 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதாக ஒரு அதிரடி முடிவெடுத்து இருவரும் வேலையை விட்டு விட்டு வந்துள்ளனர்! 'கெடு முன் கிராமம் சேர்' என்ற நம் கொள்கையை வாழ்ந்து காட்டுபவர் இந்த இளம் விவசாயி. இவர் பரிசோதனை முயற்சியாக முதலில் 3 ஏக்கரில் நம் பரிந்துரைகளை ஏற்றுக் கிச்சடி சம்பா நெல்லைப் பயிரிட்டார். உழவன் விடுதலைக்காகப் பாடுபடும் தற்சார்பு இயக்கம் அதனை கிலோ ரூ.25 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளது. இந்த நெல்லைத் தூற்றிக் காயவைத்து அரிசியாக்கி பச்சரிசி கிலோ ரூ.60 என்ற விலையில் விற்கிறோம். அவரின் இயற்கை விவசாய அனுபவங்கள் கட்டுரையாகத் தந்துள்ளார். - ஆசிரியர் )எனது பண்ணையில் கடந்த 35 ஆண்டுகளாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து பல இன்னல்களை அனுபவித்தும், மகசூல் குறைந்தும், கிடைத்த மகசூலுக்கான விலை இல்லாததாலும் எதிர்கால விவசாயம் கேள்விக்குறி ஆகும் நேரம் வந்துவிட்டதென நினைக்கும் போதெல்லாம் தூக்கம் இழக்க நேரிடும். 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி வேலையை துறந்து சொந்த கிராமத்திற்கு வந்து பண்ணையில் இயற்கை விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற வேண்டும்(integrated farming) என நினைத்து மூன்று ஏக்கரில் கால்நடை வளர்ப்புக்கான பசுந்தீவனம் மற்றும் கொட்டகை அமைத்து 20 ஆடுகளையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். 15 ஏக்கரில் நெல் பயிர் செய்து கொண்டிருக்கிறேன்.2013ம் வருடம் சம்பா பருவத்தில் முதல் முறையாக 3 ஏக்கரில் கிச்சிலி சம்பா நெல் இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். 2013ம் வருடத்திற்கு முன்பு வரை ADT 44 என்ற ரகத்தை சாகுபடி செய்தேன்.

சாகுபடி முறைகள்:

மூன்று ஏக்கருக்கு 50 கிலோ விதை நெல்லை பாய் நாற்றங்கால் மூலம் விதை விட்டோம். 14ம் நாள் நாற்று பறித்து (SRI) ஒற்றை நாற்று முறையில் நடவு நட முயற்சித்தோம். ஆனால் 100 குழி (33 சென்ட்) நடவிற்கே ஒரு ஏக்கருக்குத் திட்டமிட்டிருந்த‌ நாற்றை நட்டுவிட்டார்கள். காரணம் இளம் நாற்றாக இருந்ததால், நடவாள் நாற்றை அதிகமாக வைத்து நட்டுவிட்டார்கள்.(நடவு வயலில் தக்கைப்பூண்டு விதைத்து 50ம் நாள் மடக்கி உழவு செய்திருந்தோம்). உடனே நடவை நிறுத்தி ஒரு வாரம் கழித்து 22ம் நாள் நட்டோம். 14ம் நாள் பாயிலிருந்து நாற்றை சேற்றில் எடுத்து போட்டதால் ஒரு வாரத்தில் நாற்று நன்றாக வளர்ந்து விட்டது.நடவு நடுவதற்கு முன் சேற்றில் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுத கரைசல் இட்டு நடவு செய்தோம். நடவு வரிப்பட்டம் போட்டு நட்டோம். வரிசைக்கு வரிசை 30செ.மீ பயிர் இடைவெளி 20 செ.மீ என்ற கணக்கில் நட்டோம். நாற்றை ஒது குத்துக்கு 3 முதல் 5 வரை வைத்து நட்டு, நட்ட 20ம் நாள் களை எடுக்க ஆரம்பித்தோம் அப்பொழுது கோனோவீடர் மூலம் களை உருட்டலாம் என நினைத்து நான்கு நாள் மூலம் வீடர் உருட்டும் போது பயிர் நன்றாக பனைத்தும் மண்ணில் ஏராளமாக மண்புழு துளைகளும் இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். கோனோவீடர் உருட்டும் போது மண்புழுதுளை மூடிவிடும் என்று வீடர் உருட்டுவதை உடனே நிறுத்திவிட்டோம். பிறகு ஒரு வாரம் கழித்து 27ம் நாள் ஆள் மூலம் களை எடுக்க ஆரம்பித்தோம்.முதல்களை ஏக்கருக்கு 10 பெண் ஆட்களும், இரண்டாம் களை ஏக்கருக்கு 3 ஆட்களும் ஆனது.

பூச்சிக் கட்டுப்பாடு:

நடவு வயலில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் நடவு நட்ட 60ம் நாள் முதல் தென்பட்டது. அதற்காகவே மூலிகை பூச்சி விரட்டி அடிக்கலாம் என நினைத்து கைத்தெளிப்பாந் மூலம் அடிக்கும் பொழுதுதான் தெரிந்தது : அடர்ந்த நெல் பயிருக்கு இடையில் நடமாட முடியவில்லை. மீறி நடந்தால் பயிரின் மீது கால்பட்டு பயிர் மிதிப்பட்டது. இரண்டு தெளிப்பான் மட்டும்(50 குழிக்கு) தெளித்துவிட்டு நிறுத்திவிட்டோம். பின்பு தானாகவே இலை சுருட்டு புழு குறைந்தது. நோய் தாக்குதலோ வேறு பூச்சி தாக்குதலோ இந்த ரகத்தில் அறவே இல்லை என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.

பயிரின் வளர்ச்சி:

நட்ட 40ம் நாள் பார்க்கும் பொழுது ஒரு குத்துக்கு 35 முதல் 40 தூர்க்கட்டி இருந்தது. இலையின் நீளம் 40 செ.மீ இருந்தது (நட்ட 85ம் நாள் முதல் கதிர்வர தொடங்கியது). ஒரு கதிரில் 300 முதல் 350 நெல் மணியும் இருந்தது வியப்பாக இருந்தது. பயிர் செய்த மூன்று ஏக்கரில் ஒரு ஏக்கர் மட்டும 50ம் நாள் பழம் சேறு, அதாவது உழவு ஒட்டி 50 நாள் ஆகியிருந்தது. அந்த சேற்றில் நட்ட கிச்சிலிசம்பா நெல் பயிர் 100 முதல் 135 நாள் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்துவிட்டது. காரணம் பயிரின் உயரம் 110 செ.மீ முதல் 120செ.மீ இருந்தது

விளைச்சல்:

கிச்சிலி சம்பா 3 ஏக்கரிலும் 5130 கிலோ மகசூல் கிடைத்தது. இதை கிலோ 25 ரூபாய்க்கு தற்சார்பு இயக்கம் கொள்முதல் செய்தது. மொத்த ரூபாய் 128250. ஏக்கருக்கு 42750 ரூபாய் நெல்லும் அதில் கிடைத்த வைக்கோலை மாட்டிற்கும் வைத்துள்ளோம். ஆனால் ADT44 என்ற ரகம் ஏக்கருக்கு 42 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைத்தது. ஆனால் மூட்டை 730 மட்டுமே விலை போனது. ஏக்கருக்கு ரூ.30,660 மட்டுமே வருவாயாகக் கிடைத்தது.

வரவு செலவு விவரங்கள் (இயற்கை விவசாயம்)

மூன்று ஏக்கருக்கான செலவு

* டேஞ்சா(தக்கைப்பூண்டு) = 1500விதை = 2500நாற்றாங்கால் பாய் = 2130உழவு = 6000அண்டை-சமன் = 3200நடவு = 6525களை = 5800அறுவடை = 12100மொத்தம் = 39755* 1 ஏக்கருக்கான‌ செலவு = 13252வரவு = 42750நிகரலாபம் = 29498

செயற்கை விவசாயத்திற்கு 1 ஏக்கருக்கான‌ ஆன வரவு செலவு

சாகுபடி செலவு = 16600

இயற்கை வழியில் சிறுகிழங்கு சாகுபடி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் மொழி. உழவர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்திருக்கும் தாளாண்மை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். கடந்த இரண்டு பருவங்களில் சிறுகிழங்கு பயிரிட்ட என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு வகையைச் சார்ந்தது. இதை உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகளில் எல்லாம் பயன்படுத்தலாம். இதை “சைனிஸ் பொட்டட்டோ” என்கிறார்கள். சத்து மிகுந்த இக்கிழங்கு 6 மாத காலப் பயிர்.கேரளத்தில் இதனைக் கூர்க்கன் கிழங்கு என்று அழைக்கின்றனர்.சாதாரணமாகப் பொரியல் போல் இதை உட்கொண்டால், நம் உடலுக்குத் தேவையான தினப்படி கால்சியம், வைட்டமின் ஏ ( பீட்டா கரோடின்) இரண்டும் கிட்டும் - அது மட்டுமன்றி அதிகமான இரும்புச் சத்தும் கொண்டது. உருளைக் கிழங்கில் அதன் எடையில் 5 சதம் மட்டுமே புரதம் உள்ளது, சிறு கிழங்கில் 5 முதல் 13 சதம் புரதம் உள்ளது. எனவே இயற்கையில் விளைவித்த சிறு கிழங்கு மிக ஆரோக்கியமானது.நிலக்கடலை வளரும் நிலங்களில் சிறுகிழங்கும் ந‌ன்றாக வளரும். நன்றாகப் பராமரித்தால் ஒரு ஏக்கரில் 4000 முதல் 5000 கிலோ விளைச்சல் எடுக்கலாம். கேரளத்திலும், தென்மாவட்டங்களிலும் இதற்கு நல்ல ச‌ந்தை இருக்கிறது. எனினும் இந்த வருட‌ சில்லறை விற்பனை விலையான கிலோ ரூ.50 - ரூ.60 ல் , உழவனுக்கு வியாபாரிகள் கொடுப்பது 15 முதல் 20 ருபாய் மட்டுமே. எனவே காணி நாயகர்கள், இதை இயற்கை முறையில் சிறு அளவில் (10-25 சென்ட்) சாகுபடி செய்து நேரடியாக இயற்கை அங்காடிகளுக்கு கிலோ 35 ரூபாய்க்கு அனுப்புவது நல்லது.

பயிரிடும் முறை

முதலில் நாற்றங்காலில் நாற்றுக்களை உருவாக்கிப் பின் அவற்றை வயலில் பாத்திகளில் நட வேண்டும். 40ம் நாளுக்கு மேல் நாற்று பிடுங்கி பாத்திகளில் நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்

அ.நாற்று உண்டாக்கும் முறை:

நாற்றங்கால் உழுது தயாரிக்க வேண்டும்.அகலம் 1அடி x உயரம் 1அடி அளவில் பாத்தி பிடிக்க வேண்டும்பாத்திகளுக்கு இடையில் நீர் பாய்ச்ச வசதியாக அமைக்க வேண்டும்1 கிலோ விதை கிழங்கில் வளரும் நாற்று 2 சென்ட் முதல் 3 சென்ட் வரை நட பயன்படுத்தலாம்.பாத்திகளுக்கு இடையில் உள்ள வாய்க்கால்களில் நீர் நிரப்ப வேண்டும். இது ஒவ்வொரு பாத்தியும் முழுவதுமாக நனையும் அளவுக்கு இருக்க வேண்டும்.4 - 6 அங்குலம் ஒவ்வொரு விதை கிழங்கிற்கும் இடைவெளி இருக்க வேண்டும்விதை ஊன்றியதில் இருந்து 1 நாள் விட்டு 1 நாள் 2 முறையும் அதன் பிறகு 3,4 நாட்களுக்கு 1 முறையும் தண்ணீர் பாய்ச்சினால் போதும்15 ம் நாளுக்கு மேல் களை எடுத்து உரம் வைக்க வேண்டும் (அடி/மேல் உரமாக மண்புழு உரம் பயன்படுத்தலாம்)நோய் வராமல் தடுக்க‌, ஐந்திலை கரைசல் விசைத் தெளிப்பானிலோ, கைத் தெளிப்பானிலோ தெளிக்க வேண்டும்

ஆ. நடவு செய்யும் முறை

பயிர் செய்ய வேண்டிய நிலத்தை புழுதியாக‌ உழுது பண்படுத்த வேண்டும்அடி உரமாக தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இடலாம். தொழு உரமானால் ஒரு சென்ட் பரப்பிற்கு 10 கிலோவும், மண்புழு உரமானால் ஒருசென்ட் பரப்பிற்கு 5 கிலோவும் அடி உரமாக இடலாம்.நாற்றங்காலில் செய் முறைகளை பின்பற்ற வேண்டும்விதை கிழங்கிற்கு பதிலாக நாற்று நட வேண்டும்ஒவ்வொரு நாற்றிலும் உள்ள கணுப்பகுதியை மண்ணில் ஊன்றி வைக்கவும்2 முறை களை எடுத்து மேல் உரம் வைக்கலாம்பூக்கும் வரை 3 முதல் 4 நாட்களுக்கு அல்லது தேவையை பொறுத்து நீர் பாய்ச்சினால் போதும், பாத்தியில் ஈரம் இருக்க வேண்டும். செடி வாட வாட பாய்ச்ச வேண்டும். அவ்வளவுதான்முதல் மாதம் களை, 2ம் மாதம் களை எடுத்துவிட்டு 2-ம் களை முடிந்தவுடன் மண் அணைக்க வேண்டும்.தேவையை பொறுத்து ஐந்திலை கரைசல் நோய்க்கட்டுப்பாட்டு கரைசல் பயன்படுத்த வேண்டும்கிழங்கு வீரியமாக வருவதற்காக ஊட்டச்சத்து கரைசல்களை நீரில் சேர்த்து பாய்ச்சவேண்டும்

அறுவடை

கடந்த முறை 10 சென்ட் நிலத்தில் 400 கிலோ கிழங்கு கிடைத்தது. இம் முறை 25 சென்ட் நிலத்தில் 1000 கிலோ கிழங்கு கிடைத்துள்ளது.

வரவு

1 கிலோவுக்கு 35ரூ x 1000 கிலோ = 35000/-

செலவு : 25 சென்ட்

நாற்றங்கால் உழவு : 300.00விதை (தன்) :பாத்தி பிடிக்க 1 ஆண் ஆள் : 350.00நடுவை (பெண்-1) : 150.00களை எடுக்க 2 பெண் : 300.00மண்புழு உரம் (தன்) :கரைசல் (தன்) :பராமரிப்பு நீர் (தன்) :மொத்தம் - நாற்றங்கால் செலவு : 1100.00

25 சென்டிற்கான செலவு

1. நடவு

தொழுஉரம் 1 யூனிட் : 600.00உழவு : 1200.00வரப்பு வெட்ட (3×350) : 1050.00பாத்தி பிடிக்க (4×350) : 1400.00நடவு (பெண்4×150) : 600.00மொத்தம் : 4850.00

2. பராமரிப்பு

களை 12 x 150 : 1800.002வது களை (14 x 150) : 2100.00மண் அணைக்க & வரப்புசுத்தம் செய் 4 ஆள் : 1400.00கரைசல் தயாரிக்க பொருள்கள் : 500.00மண்புழு உரம் (தன்) :பராமரிப்பு நீர்பாய்ச்சுதல்(தன்) :மொத்தம் - பராமரிப்பு செலவு : 5800.00

அறுவடை செலவு

18 பெண் x 150 : 2700.006 ஆண் x 350 : 2100.00மொத்த செலவு : 4800.00

மொத்த செலவினங்கள்

நாற்றங்கால் - 1100நடவு - 4850பராமரிப்பு - 5800அறுவடை - 4800மொத்தம் - 16550

நிகர லாபம் 25 சென்ட் நிலப் பரப்பில் : 35000 - 16550 = 18450/

இந்த செலவான 16550ல் 13150 ஆட்கூலிக்கு ஆனதே என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்கூலிக்குச் செலவான தொகையில் பெருமடங்கு கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் குறைக்கலாம். மண்புழு உரம் எங்கள் பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டோம் - அதை வெளியில் வாங்கினாலும் 1 சென்டிற்கு 10 கிலோ என்ற கணக்கில் 25 சென்டிற்கு, 250 x 7 = 1750 கூடுதல் செலவாகும். இந்த லாபம் கிடைப்பது நல்ல விலையால் மட்டுமே என்பதை விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே , இப்பயிரைச் சாகுபடி செய்யுமுன் இயற்கை அங்காடிகளில் தொடர்பு கொண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.

பரிந்துரை:

இதில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் பணப்பயிர் போன்ற இந்த சிறு கிழங்கையும் ஆண்டுக்கு 1 முறை பயிர் செய்து வெளியில் இருந்து வேலைக்கு ஆள்கூப்பிடாமல் கணவன் மனைவி குடும்பம் என வீட்டு ஆட்களே பார்த்துக்கொண்டோமானால் ஆண்டுக்கு ஒரு முறை குறைந்த செலவில் மொத்த தொகை கிடைக்கும். மேலும் இந்த கிழங்கை அறுவடை செய்த உடனே 'அவசரமாக சந்தைப்படுத்த வேண்டும், கெட்டுவிடும்' என்று கவலைப்படவும் வேண்டாம். 2 மாதத்திற்கு காற்றோட்டமாக போட்டு வைத்திருந்து தேவைக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்து கொள்ளலாம்.

இன்னொரு தகவல்:

எனது தோழி சூர்யா சொன்னது : “கடந்த முறை வீட்டுத் தேவைக்காக வாங்கிய கிழங்கில் மீதி ஒரு 20 கிழங்கு தளிர்விட தொடங்கிய நிலையில் வீட்டில் இருந்தது. எனவே அதை எடுதது ஒரு இடத்தில் ஊன்றி வைத்தேன். மேற்கண்ட முறைகளில் பராமரிப்பு செய்யவில்லை. எனினும் 20 கிலோ அறுவடை செய்தேன்”. எனவே வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்க்ள கூட தங்களின் வீட்டுக்குத் தேவையான கிழங்கை வீட்டின் அருகிலேயே பயிர்செய்து 6 மாதத்திற்கு மேலாகவே காற்றோட்டமாக வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இயற்கைமுறையில் மஞ்சள் சாகுபடி

மஞ்சளில் விதை தேர்வு

[நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.

விதை நேர்த்தி

மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.

அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி

(600-800 கிலோ விதை மஞ்சளுக்கு)ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) - 2 - 5 லிட்டர் (தயாரிப்புமுறை குறிக்கப்பட்டுள்ளது)சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் - தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நடவு முன் விதை நேர்த்தி:

ஆவூட்டம் - 2 லிட்டர்சூடோமோனஸ் - 1 கிலோதண்ணீர் - 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.

நிலத்தேர்வு மற்றும் நிலப்பராமரிப்பு

மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. இவ்வாறு பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாகப் பாதிக்கும். அதுபோல் நூற்புழு அதிகம் தாக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது. மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். ஆகவே மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட வேண்டும் அல்லது 2 டன் மண்புழு உரம் இட வேண்டும். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1 டிப்பர்) கடைசி உழவின்போது இடலாம்.

பலவகைப் பயிர்கள்

சமச்சீரான ஊட்டம் தரும்வகையில் பலபயிர் சாகுபடி செய்ய வேண்டும். மஞ்சள் நடவுக்கு 60 நாட்களுக்கு முன்பு பலவகைப் பயிர்களை விதைக்க வேண்டும். கடைசி உழவில் விதைத்து பார் கட்டி உழ வேண்டும். இதனால் நீர் பாய்ச்ச எளிதாக இருக்கும்.அ) தானியங்களில் ஏதாவது 4 வகை - சோளம், கேழ்வரகு, தினை, கம்பு போன்றவைஆ) பயிறுகளில் ஏதாவது 4 வகை - உளுந்து, தட்டை, பாசி, மொச்சை, கொண்டைக் கடலை போன்றவைஇ) எண்ணெய் வித்துகளில் ஏதாவது 4 வகை - ஆமணக்கு, எள், சூரியகாந்தி, சோயா, கடலை போன்றவைஈ) மணப்பயிர்களில் ஏதாவது 4 வகை - கடுகு, கொத்தமல்லி, மிளகாய், சோம்பு போன்றவைஉ) தழையுரப் பயிர்களில் ஏதாவது 4 வகை - சணப்பு, கொள்ளு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, கொழுஞ்சி போன்றவைமேலே கூறியவற்றில் ஒவ்வொன்றிலும் 4 வகைகளையும் கலந்து மொத்தமாக 20-25 கிலோ விதைகளை ஒரே சீராக கடைசி உழவின்போது விதைக்க வேண்டும். ஒரு மாதத்தில் இவை நன்கு வளந்துவிடும்.பின்னர் கீழ்க்கண்ட பயனுள்ள நுண்ணுயிர்களை தனியாகத் தயார் செய்ய வேண்டும்.டிரைகோடர்மாவிர்டி - 2 கிலோஅஸோஸ்பைரில்லம் - 2 கிலோபாஸ்போபாக்டிரியம் - 2 கிலோசூடாமோனஸ் - 2 கிலோபைசிலோமைசிஸ்இவற்றை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து பலவகைப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும்போது நிலத்தில் தூவிவிடவேண்டும். நுண்ணுயிர்களின் மேல் நேரடி வெயில்படக்கூடாது.பலவகைப் பயிர்கள் பயிரிட்ட இரண்டு மாதத்தில் ரோட்டோவேட்டர் கருவி மூலம் மடக்கி உழ வேண்டும். இதன்மூலம் ஏக்கருக்கு 25-35 டன் பசுந்தாழ் உரம் கிடைக்கும். எல்லாப் பயிர்களும் நிலத்தில் மக்கிவிடும். மண்புழு மற்றும் நுண்ணுயிர்கள் இவற்றை உட்கொண்டு நிலத்தின் தன்மையை வெகுவாக மாற்றும். பின்னர் நிலத்தை ஒன்றரை அடிப் பார்களாக அமைத்து மஞ்சள் நடவு செய்ய முனைய வேண்டும். நடவு: மே முதல் சூன் இரண்டாம் வாரத்திற்குள் மஞ்சள் நடவு செய்யலாம். நடவுக்கு முன்பு முன்னர் சொன்ன கரைசலில் விதையை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 1முதல் 1.5 அடி செடிக்குச் செடி 9 அங்குலம் இடைவெளியுடன் மஞ்சளை பாரின் ஓரததில் நடவு செய்ய வேண்டும். உடன் நீர் பாய்ச்சுவது அவசியம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மழை இருந்தால் பாசனம் தேவையில்லை.

பயிர் பராமரிப்பு

நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் கைகளை எடுத்து அகற்ற வேண்டும். களைக் கொல்லி போன்ற எந்தக் வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. 30 நாட்கள் கழித்து களை இருந்தால் மற்றொருமுறை களை அகற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் செடி, பாரின் நடுவில் வருமாறு மண் அணைக்க வேண்டும். முன்னர் கூறிய பலவகைப் பயிர்களை ஏக்கருக்கு 10-12 கிலோ வீதம் பாரின் நடுவே து£வி உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.நடவு செய்த ஐம்பது நாட்கள் கழித்து பாரில் தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒருபார்விட்டு ஒருபாரில் பரப்பிவிட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர். பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப் படுகிறது. மண்புழுப் பெருக்கம் அதிகமாகி விரலி ஓட்டம் அதிகரிக்கும். நிலம் பொலபொலப்பாக மாறும்.நடவிற்கு 60 நாள் கழித்து தோட்டத்தில் காணப்படும் புல், பூண்டு மற்றும் சுற்றியிருக்கும் செடி,கொடிகளை சேகரித்து பலவகைப் பயிர்கள் பரப்பிய பாரில் போட வேண்டும். அதை அறுவடை வரையில் தொடர்ந்து செய்துவரலாம். பயிர்வளர்ச்சி குன்றி இருந்தால் அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் இதில் சொல்லப்பட்ட வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம்.அமுதக் கரைசல் (உடனடி வளர்ச்சி ஊக்கி)இதை நடவு செய்த 45 ஆம் நாளிலிருந்து பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் - 1கிலாமாட்டுச் சிறுநீர் - 1 லிட்டர்பனைவெல்லம் - 250 கிராம்நீர் - 10 லிட்டர்இவற்றை நன்கு கலக்கி 24 மணி நேரம் ஊறவைத்து இதிலிருந்து 1 லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் மஞ்சள் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். நடவு செய்த 45 நாளில் 50 லிட்டர் கரைசல் போதுமானது.

ஆவூட்டம்: (ஆ - பசு, ஊட்டம் - தேவையான சத்துக்கள்)

உடனடி வளர்ச்சி ஊக்கியில் அவ்வளவு பயன் கிடைக்காவிடில் பின்வரும் ஆவூட்டம் என்ற கலவையைப் பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் - 5 கிலோமாட்டுச் சிறுநீர் - 5 லிட்டர்(இவற்றை மண்பாளை அல்லது வாளியில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இத்துடன் தனியாக 2 லிட்டர் தயிரை 15 நாள் புளிக்கவிட வேண்டும். 16 ஆம் நாளில் மேலே கூறிய இரண்டு கரைசலையும் சேர்த்து பின்வரும் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.)* பால் - 2 லிட்டர்நெய் - 1/2 முதல் 1 லிட்டர்பனைவெல்லம் - 1 கிலோ (அல்லது நாட்டுச் சர்க்கரை)இளநீர் - 3-4 எண்ணம்இவற்றை எல்லாம் நன்கு கலந்து 1 வாரம் மண்பாணையில் ஊற வைக்க வேண்டும். தினமும் மாலை 3 நிமிடங்கள் வரை கலக்கிவிட்டு வர வேண்டும். இதுவே ஆவூட்டக் கரைசல் இதை ஆறு மாதம்வரைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பயிருக்கு 1 லிட்டருடன் 10 லிட்டர் நீர் சேர்த்து இலைகளில் நன்கு படும்படியாக தெளிப்பான் மூலம் அடிக்க வேண்டும்.மஞ்சளில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் முதிர்ந்த இலைகளின் ஓரம் கருகத் தொடங்கி இருக்கும். விரலி ஓட்டத்திற்கும் நல்ல திரட்சியான மஞ்சளுக்கும் சாம்பல் சத்து மிக அவசியம். இதைச் சரிசெய்ய தோட்டத்தின் வெளியில் உள்ள களைகளைச் சேகரித்து வந்து உலர வைத்து தனியான இடத்தில் தீயிட்டுச் சாம்பல் செய்ய வேண்டும். இந்தச் சாம்பலை ஏக்கருக்கு 50-100 கிலா என்ற கணக்கில் மண் அணைக்கும்போது போட வேண்டும். அல்லது உமி சாம்பல் 500 கிலோ பயன்படுத்தலாம்வேர்மூலம் பரவும் நோய்களான கிழங்கு அழுகல்நோயைக் கட்டுப்படுத்தவும் வேரைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும் கீழ்க்கண்ட கரைசலைப் பயன்படத்தலாம்.சாணஎரிவாயுக் கிடங்கில் இருந்து கிடைத்த சாணக்கழிவு - 50 லிட்டர்ஆவூட்டம் - 5-10 லிட்டர்சூடோமோனஸ் புளோரசன்ஸ்டிவிரிடி 500 கிராம்ர்பைசிலோமைசிஸ்நீர் - 100-200 லிட்டஇவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.இவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சி விரட்டி

பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது, அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரினங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும்.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் - ஆடுதொடா, நொச்சிபோன்றவை.ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் - வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் - காட்டாமணக்கு, போன்றவை.கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் - வேப்பங்கொட்டை, எட்டிக் கொட்டைஇந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன. இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள், பூச்சிகள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.

மாதிரி அளவு:

அ) சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோஆ) 1. சீதா இலை- 3-5 கிலோ, 2. காகிதப்பூ இலை-3-5 கிலோ, 3. உண்ணிச் செடியிலை- 3-5 கிலோ, 4. பப்பாளி இலை 3-5 கிலோமேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். அதாவது 4 வகைத் தழைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ கணக்கில் 8 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவேண்டு. இவற்றுடன் மேலே சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை 100-500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை

இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முத 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். வடிகட்டி கரைசலில் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊறல் போடவும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

வேகல் முறை

இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 15 லிட்டர் நீரை ஊற்றி 2 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை வடித்து ஆறிய பின்னர் ஒரு படி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் மொத்த வடிகரைசலுடன் 100 லிட்டர் நீர் சேர்க்கலாம். கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.இலைப்புள்ளி நோய் பாதித்த இலைகளின் மேற்புறம் நீண்ட கண்வடிவ புள்ளிகள் தென்படும். பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகிவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழை 3 கிலோ, உண்ணிச் செடி இலைகள் அல்லது சீதாப்பழ இலை அல்லது பப்பாளி இலை 3 கிலோ எடுத்து இவ்விரண்டு இலைகளையும் 15 லிட்டர் நீரில் வேகவிட வேண்டும். 10 விட்டர் அளவிற்கு சுண்டிய பிறகு 1 கிலோ மஞ்சள் தூள் கலந்து ஒருநாள் ஊறவிட வேண்டும். ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் கலந்து இலைப்புள்ளி தென்படும் இலைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

அறுவடை

7 முதல் 9 மாதம் கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும். அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண்வெட்டி கொண்டு கிழங்கு மற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

திருநெல்வேலி: மஞ்சள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி  இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மஞ்சள், நம் வாழ்வின் மங்கல நிகழ்வுகளிலும், இறை வழிபாட்டிலும் இரண்டறக் கலந்த ஒன்றாகும். சமையலிலும், மருத்துவத்திலும் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 2,500 ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு, இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதத்திலும், சித்த  மருத்துவத்திலும் மகத்தான பங்கு வகிக்கிறது. "குர்குமா டொமெஸ்டிகா' என்ற  தாவரவியல் பெயரைக் கொண்ட மஞ்சளின் மருத்துவ மகிமைகள் ஏராளம்.மருத்துவ மகிமைகள்: மஞ்சள் நல்லதொரு கிருமி நாசினி என்பதால் வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் விரைவில் குணமாக உதவுகிறது. புண்களைக் குணமாக்குவதில் பக்கவிளைவின்றி செயல்படுகிறது. இயற்கையான வலி நிவாரணி. செரிமானக் குறைபாடுகளை நீக்குகிறது. கொழுப்புச் சிதைவில் உதவி சீரான எடைக் குறைப்புக்கு உறுதுணையாகிறது. இயற்கையான முறையில் கல்லீரல் நச்சை நீக்குகிறது. தோல் நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. வயது முதிர்வைத் தடுக்கிறது.மன இறுக்கத்துக்கு மருந்தாக சீன மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்கிறது. நோய் எதிர்ப்பு  சக்தியைக் கொடுக்கிறது. பல்வகைப் புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கவும், அவை  பரவுவதை தள்ளிப்போடவும் செய்கிறது. எலும்புச் சிதைவு நோய்க்கு அணை போடுகிறது. வயது முதிர்வின் காரணமாக வரும் "அல்சீமியர்' என்ற மறதி நோயைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும் உதவுகிறது.இத்தகைய மருத்துவப் பயன்கள் கொண்ட மஞ்சள் பயிர், தைப்பொங்கல் மஞ்சள்  குலைகளுக்காகவும், மஞ்சளுக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது.சாகுபடி முறைகள்: ரகங்கள் - கோ-1, பவானிசாகர்-1, 2, ரோமா, சுவர்ணா, சுதர்ஷயா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, ஐஐஎஸ்ஆர் பிரதிபா, ஐஐஎஸ்ஆர் ஆலப்பி, ஐஐஎஸ்ஆர் கெடாரம், ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள்.பருவம்: தமிழ்நாட்டில் மே-ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும்.மண் மற்றும் தட்பவெப்பம்: மஞ்சள் ஒரு வெப்பமண்டலப் பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண்பாடு நிலம் மிகவும் ஏற்றது.நிலம் தயாரித்தல்: நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது பண்படுத்தி, கடைசி உழவின்போது ஏக்கருக்கு 4 மெ.டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். நிலத்தைச் சமப்படுத்திய பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.விதையளவு: ஏக்கருக்கு 800 கிலோ விரலி மற்றும் குண்டு விதை மஞ்சள்.விதைநேர்த்தி: கிழங்கு அழுகல் நோய் வராமல் தடுக்க விதைக் கிழங்குகளை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பண்டசிம் கலந்த கரைசலில் 10 நிமிடம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி ஊன்ற வேண்டும்.விதைப்பு: நீர்ப்பாசனம் செய்து விதை மஞ்சளை பார்களின் ஓரத்தில் 15 செ.மீ. இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.ஒருங்கிணைந்த உர மேலாண்மை: அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 4 டன் தொழு  உரத்துடன், 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு அல்லது கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ தழைச்சத்து தரவல்ல 22 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ சாம்பல்சத்து தரவல்ல 14 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். விதைக்கும் முன், ஏக்கருக்கு 12 கிலோ இரும்பு சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். விதைத்த ஒரு மாதம் கழித்து ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா இடவேண்டும்.மேலுரம்: மஞ்சள் ஊன்றிய 30, 60,90,120 மற்றும் 150-ம் நாள்களில் ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 14 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இடவேண்டும்.இலைவழி நுண்ணூட்டம் அளித்தல்: கிழங்கு பெருக்கும் தருணத்தில் நுண்ணூட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை எடுத்து, 90 லிட்டர் தண்ணீர் சேர்த்து, 100 லிட்டர் கரைசலாக்கி, அக்கரைசலில் 150 கிராம் இரும்பு சல்பேட், 150 கிராம் துத்தநாக சல்பேட், 150 கிராம் போராக்ஸ், 150 கிராம் யூரியா கலந்து மாலையில் இலைவழி தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப 25 நாள்கள் இடைவெளியில் இருமுறை இவ்வாறு தெளிக்கலாம்.ஊடு பயிர்: வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை 10 செ.மீ. இடைவெளியிலும், துவரை, ஆமணக்கு போன்றவற்றை அதிக இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.களை நிர்வாகம்: விதை ஊன்றிய 30, 50, 120, 150-ஆம் நாள்களில் களையெடுக்க வேண்டும்.மண் அணைத்தல்: 2-ஆவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இட்டவுடன் அவசியம் மண் அணைக்க வேண்டும்.நீர்ப்பாசனம்: மஞ்சள் நடவுக்கு முன்பும், நட்ட 3-ஆம் நாள் உயிர் தண்ணீராகவும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர், மண்ணின் தேவைக்கேற்ப வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு1. பூச்சிகள்:அ. இலைப்பேன்- இதை கட்டுப்படுத்த 1 லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட்  அல்லது மிதைல் ஒ டெமெட்டான் கலந்து தெளிக்கவும்.ஆ. கிழங்கு செதில் பூச்சி - ஏக்கருக்கு மக்கிய ஆட்டு எரு அல்லது கோழி எரு 2 டன் அடியுரமாகவும், 2 டன் மண் அணைக்கும்போதும் இடுவதும் இதைக் கட்டுப்படுத்த உதவும். கிழங்கு ஊன்றுமுன் ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி பாசலோன் கலந்த கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து ஊன்றுவதும் இப்பூச்சி தாக்குதலைத் தடுக்க உதவும். வயலில் கிழங்கு செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட் அல்லது பாசலோனன் கலந்த கரைசலை வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவும்.இ. நூற்புழு - வயலில் நூற்புழு தாக்குதல் காணப்படுமானால் வாழை, கத்தரி குடும்பப் பயிர்களுக்குப் பின், மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கவும், செண்டுமல்லி எனப்படும் கேந்தி மலரை வயல் ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழு தாக்குதல் குறையும். நூற்புழு தாக்குதலைக் குறைக்க அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலுரமாக ஒவ்வொரு முறை யூரியா இடும்பொழுதும் ஏக்கருக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து இடவேண்டும்.2. நோய்கள்: அ. கிழங்கு அழுகல் நோய் - இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு  இரண்டரை கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்த கரைசலை வேர்ப்பகுதி நன்கு நனையும்படி ஊற்றவும்.ஆ. இலைத்தீயல் மற்றும் இலைப்புள்ளி நோய் - பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எரித்துவிட வேண்டும்.இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் கார்பண்டசிம் அல்லது 400 கிராம் மாங்கோசெப் அல்லது 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை மருந்துகளை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.அறுவடை மற்றும் மகசூல்: 9-ஆம் மாதத்தில் மஞ்சள் பயிர் சாய ஆரம்பிக்கும். இலைகள் மஞ்சளாவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். பச்சை மஞ்சள் ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை கிடைக்கும்.விவசாயிகள் இத்தகைய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து மருத்துவப் பயன் கொண்ட மஞ்சள் சாகுபடியை மேற்கொணடு உன்னத லாபம் பெறலாம் என்றார் தி.சு.பாலசுப்பிரமணியன்.

Saturday, 12 July 2014

வாங்க விவசாயம் செய்யலாம்...!

உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும் இருக்கிறது. நம்முடைய அப்பா, அம்மா எல்லாம் இந்த விவசாயத்தை வெச்சுதான் நம்மை படிக்க வெச்சாங்க. அவர்களுக்கெல்லாம் கைக்கொடுத்த விவசாயத் தொழில், இந்த தலைமுறைக்கு மட்டும் ரொம்ப தூரம் விலகியே இருக்கிறது?பெற்றோர்களுக்கு ஒரே எண்ணம் மத்த புள்ளைங்க மாதிரி நம்ம புள்ளயும் வயல்ல வேலை செய்யணுமா? என்ற கவுரத பிரச்னைதான். இதையெல்லாம் கடந்து நீங்கள் வேலை செய்து கொண்டே மாற்றுத் தொழிலாக விவசாயத்தை தேர்ந்தெடுக்க உள்ளவரோ? அல்லது முழுநேரமாக விவசாயம் செய்ய விருப்பமுள்ளவரோ எவராக இருந்தாலும் விவசாயத்தை தொழிலாக நினைத்து செய்ய நினைப்பவர்களுக்கு சில யோசனைகள்:

1. ‘விவசாயம் என்பது தொழில் அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை’ என்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயத்தில் இறங்கினால் லாப நஷ்டத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். அதிலும் இயற்கை விவசாய முறை எளிதானது. செலவில்லாததும்கூட. உண்மையாக இந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் அது இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு இறங்கினாலும் சுற்றியிருப்பவர்கள் உங்களையெல்லாம் அப்படி சும்மா விடமாட்டார்கள். ஏதோ உரக்கம்பெனியெல்லாம் இவங்களோட சொந்தகாரர்களது மாதிரிதான் ரசாயன விவசாயத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு இருப்பாங்க. காதுலே போட்டுக்காம தைரியமா இறங்குங்க. இயற்கை விவசாயத்திலேயும் அதிக மகசூல் எடுத்துட்டு லாபம் பாத்துட்டு இருக்கிற விவசாயிகள் நிறையபேர் இருக்காங்க.

2. மேட்டு நிலமோ, பாசன நிலமோ தமிழ்நாட்டில் ஒரு ஏக்கர் நிலம் 5 லட்சத்துக்கு கீழ் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி கிடைக்கிறது என்றால் கவனமாக விசாரித்து வாங்குங்கள். சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாயத்துக்கு வாங்கக்கூடிய நிலத்தின் விலை 1 ஏக்கர் 15 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 40 லட்சம் வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. தாம்பரம், கேளம்பாக்கம், செங்குன்றம், கிழக்கு கடற்கரை சாலை, ஸ்ரீபெரும்புதூர் இதில் விதிவிலக்கு. இவ்ளோ தொகை கொடுத்து நிலத்தை வாங்குணுமா? என்று கேட்காதீர்கள். உங்கள் வருங்காலத்துக்கு நீங்க செஞ்சு வைக்கிற முதலீடாகக் கூட வைத்துக் கொள்ளலாம்

.3. பாசன வசதிக்கொண்ட நிலங்களைவிட, மேட்டு நிலங்கள்தான் இப்போது விற்பனைக்கு அதிகம் கிடைக்கும் சூழல் உள்ளது. அதை வாங்கி பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், மரங்களை வளர்ப்பது என ஏதாவது ஒரு பயிரை விளைய வைக்கலாம். 5 ஆண்டுக்குள் வளரக்கூடிய மர வகைகள் கூட இப்போது இருக்கிறது. மேட்டு நிலங்களைகூட பாசன நிலங்களாக மாற்ற முடியும். அதற்கு முயற்சியும், உழைப்பும் தேவை.

 4. விவசாயத்துக்கு தண்ணீர்தான் தலையாய பிரச்னை. ‘தண்ணீர் இல்லாததனால்தான் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறிவிட்டனர்’ என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. அவர்களால் மாற்று முயற்சிகளை கையாளததே காரணம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் வளத்துக்கு நம் முன்னோர்கள் செய்துவிட்டு போன வசதிகள்தான் கைகொடுத்துட்டு இருக்கு. தண்ணீர் வளத்துக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை கேட்டு¢ப் பாருங்கள் உண்மை புரியும். இன்றும் தங்களுடைய தோட்டங்களில் தண்ணீர் வளத்தை பெருக்கியுள்ள விவசாயிகளின் நிலத்தை போய் பாருங்கள். உங்களுக்கும் புதுபுது யோசனைகள் தோன்றும். சாதாரண உடலுழைப்பை வைத்தேகூட தண்ணீர் வளத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.

5. நிலம் வாங்கிய இடத்திலுள்ள கிராமத்தினரோடு முடிந்தளவு அனுசரித்து போவதே அந்த பகுதியில் நீங்கள் நீடித்து விவசாயம் செய்ய வழிவகுக்கும். விவசாயத்தில் நீங்கள் எந்த முயற்சியை எடுத்தாலும் கிராமத்தினர் இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். அதில் சரி என்று படுபவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை தவிர்த்துவிடுங்கள். அவர்கள் பார்வையில் இயற்கை விவசாயமே நகைப்புக்கு உரியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பலன்களை எடுத்து சொன்னால் அமைதியாகி விடுவார்கள். வாங்கும் நிலத்தில் ஆட்களை அமர்த்துவதற்கு அந்த ஊர் ஆட்களை நியமிப்பதே சரியானது. ஆனால் தொடர்ந்து கண்காணிப்பும், கவனமும் தேவை.

6. பயிர் சாகுபடி சம்பந்தமான பயிற்சிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையங்கள், கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களின் வேலையே விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, பூச்சி மேலாண்மை, பண்ணை இயந்திரங்கள், ஆடு, மாடு வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதும், அதற்கான சந்தேகங்களை தீர்த்து வைப்பதுதான். நீங்களிருக்கும் மாவட்டத்தில் வேளாண் மையங்கள் சரியாக செயல்படவில்லையென்றால் சிறப்பாக செயல்படும் அருகிலுள்ள மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு கட்டணங்கள் கிடையாது. அதேமாதிரி எல்லா பயிர்களுக்கும் பயிற்சி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளின் தொடர்பு மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து பேராசிரியர்களின் அறிமுகம், நட்பு போன்றவற்றின் மூலம் இன்னும் உங்கள் விவசாயத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்.

7. கீரை வகைகள் 17 நாட்களிலிருந்தும், காய்கறிகள் 45 நாட்களிலிருந்தும் அறுவடைக்கு வந்துவிடும். கம்பு, சோளம், கேழ்வரகு, வேர்கடலை 3 மாதங்களிலும், நெல் ரகங்கள் 4லிருந்து 6 மாதத்துக்குள்ளும், வாழை, கரும்பு 1 வருடத்திற்குள்ளும் அறுவடைக்கு வரும். பொதுவாக கோடை மழைக்கு உழவு ஓட்டி, ஆடிப்பட்டத்தில்(சம்பா) விதைப்பு பணி நடக்கும். அந்தந்த பட்டங்களில் பயிர் செய்து பழகுங்கள். தண்ணீர் வசதி இருப்பவர்கள் ஆண்டுதோறும் பயிர் செய்துவரும் வழக்கமும் இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு பயிர்களை தேர்ந்தெடுத்து செய்யலாம்.

8. விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி என ஏதாவதொன்றை கூடுதல் தொழிலாக செய்து கொண்டிருங்கள். கூடுதல் வருமானமாக இருக்கும். விவசாயத்தில் வருமானம் குறையும்போது கால்நடைகள் உங்களை காப்பாற்றிவிடும்.

9. அக்கம் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ அவர்கள் வாங்கும் விலைக்கே நீங்கள் உற்பத்தி செய்யும் அரிசியோ, காய்கறி, தானியங்களை விற்க முடியும். ஆனால் எல்லாவற்றையும் அதேமாதிரியும் விற்க முடியாது. அருகிலுள்ள சந்தைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் அந்தந்த ஊர்களில் இருந்து விவசாயிகள் கூட்டாக வண்டிகளில் வெளியூர்களுக்கு விளைபொருட்களை அனுப்பும் வழக்கமும் இருந்து வருகிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  10. பணஉதவிக்கு அந்தந்த கிராமங்களில் செயல்படும் மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுவில் இணைந்து குறைந்த வட்டியில் கடன்களை பெற்று விவசாயம் செய்யலாம். வங்கிகளிலும் உங்களுக்கான உரிய ஆவணங்கள் இருந்தால் லோன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண்ணை கருவிகளும் 50% மானியத்தில் கிடைத்து வருகிறது. சொட்டு நீர் கருவிகள் 100% மானியத்திலம், மல்ஷீங் சீட் குறைந்த மானியத் தொகையிலும் கிடைக்கிறது. ஆனால் இதற்கு அரசாங்க கதவுகளை பலமாக தட்டவேண்டும். விவசாயத்தில் தொடர்ந்து ஆர்வமும், முயற்சியும் இருந்தால், மற்ற தொழில்களை போல விவசாயத்திலும் நிலைக்க முடியும். விவசாய விளைப்பொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். திட்டமிட்டு செய்தால் பலன் நிச்சயம்.


விவசாயத்தின் எதிர்காலம்

உலகிலுள்ள பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை பரவாயில்லை என்ற அற்ப சந்தோஷம் நிறைவுள்ள பேச்சு இல்லை. இந்திய விவசாயம் வழங்கக் கூடிய வாய்ப்புகளை முடிந்தவரை பயன்படுத்தினால் வர்த்தக ரீதியான வளர்ச்சியுடன் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் விவசாயத்தின் பங்களிப்பை உயர்த்த முடியும்.விவசாய உற்பத்தி மதிப்பு உயர்வதற்குத் தடையாக உள்ள பிரச்னைகள் எவை? அத்தடைகளை உடைத்தெறிய அரசுகள் செய்ய வேண்டியவை எவை? இந்த இரு வினாக்களுக்கும் நாம் பெறக்கூடிய விடைகளில்தான் இந்திய விவசாயத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிது.இந்திய விவசாயம் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளைப் பட்டியலிட்டால், முதலாவதாக, அசுரத் தனமான நகர்ப்புற வளர்ச்சி. விளைநிலங்கள் மனைக்கட்டுகளாக மாறுவதுடன் நீராதாரங்கள் குப்பைக் கிடங்காகவும், கழிவு நீர்க் குட்டைகளாகவும் மாறிவிட்டன. மனைக்கட்டு வியாபாரம் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் விதிமுறைகள் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு அங்கு மழைநீர் சேமிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நீர் நிலைகள் பாதுகாப்பதின் மூலம் ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். அசுத்தமும் குறையும். ஆனால், ஏரிகள் மீதே அடுக்குமாடிகள் கட்டினால் சோகங்கள் தொடரக்கூடிய ஆபத்தும் உள்ளது.மாறிவிட்ட உணவுப் பழக்கங்களை கருத்தில் கொண்டு நுகர்வோர்களின் புதிய தேவைப்படி புதியதோர் உணவுக் கொள்கை தேவை. ஊட்ட உணவுப் பற்றாக்குறையை மனத்தில் கொண்டு இன்று பன்னாட்டு உணவுத் திமிங்கலங்கள் இந்திய உணவுப் பொருளாதாரத்தை வேட்டையாடி வருகின்றன.வறுமைக் கோட்டில் வாழ்வதாகக் கூறப்படும் கிராமத்துக் கூலிக்காரர்கள் பிரிட்டாணியா பிஸ்கட்டுகளையும் காட்பரீஸ் சாக்லெட்டுகளையும் உண்டு "ஊட்டச்சத்து' பெறுகிறார்கள். ரேஷன் அரிசியை மாவாக்கி மாட்டுக்கு அடர்தீவனமாக வழங்கிவிட்டு, நல்ல அரிசியை வெளி அங்காடியில் அதிகவிலை கொடுத்து வாங்குகிறார்கள்.நகரத்து நடுத்தர வர்க்கம் பாஸ்தாப் பண்பாட்டுக்கு வந்துவிட்டனர். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், போர்ன்விட்டா, வகைவகையான குளூகோஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், க்விக்கர் ஓட்ஸ், பலவகையான வறுவல், முறுவல் பாக்கட்டுகள், கோக், பெப்சி என்றெல்லாம் பான வகைகள்.இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பொது வினியோகத்திற்கு நாற்றம் பிடித்த அரிசியையும் ஊத்தை கோதுமையையும் வழங்குவதைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் உணவுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஊட்ட உணவு பற்றிய புதிய சிந்தனை தேவை.விவசாயமும் உணவு உற்பத்தியும் அனைத்துலக வர்த்தகத்துடன் பிணைக்கப்பட்டுவிட்ட நிலையில் உணவு ஏற்றுமதியில் அதிக கவனமும், இறக்குமதி உணவைக் குறைப்பதில் தீவிர கவனமும் வேண்டும்.உணவுப் பொருள், காய்கறி, பழங்கள் கெடாதவாறு பாதுகாப்பதுதான் உணவுப் பாதுகாப்பு. "பசியை ஒழிப்போம்', என்ற பெயரில் வெற்று கோஷம் உணவுப் பாதுகாப்பு அல்ல. ஏழை விவசாயகளின் தேவை எளிய வட்டிக் கடன் வசதி, உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகள், வருமானத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.விவசாயத் தொழில்நுட்ப நெறிகளில் நெருக்கமான தீவிர சாகுபடி, வரம்பு மீறிய ரசாயன உரப் பயன்பாடு, சிக்கனமில்லாத பாசன நீர்ச் செலவு ஆகியவற்றால் உணவு உற்பத்தி உயர்ந்து வந்துள்ளது. இதனால் பெரிய அணைக்கட்டுகள் உள்ள ஆயக்கட்டுகள் மட்டும் வளமைத் தீவுகளாகக் காட்சி தருகின்றன.வசதி படைத்த விவசாயிகள் மட்டும் உணவு உபரிகளை விற்று உணவுப் பண வீக்கத்தால் ஏற்படும் விலை உயர்வின் பலனை அனுபவிக்கின்றனர். சிறு - குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் உரிய வருமானம் பெறவில்லை.இத்தகைய சாகுபடித் தொழில்நுட்பம், நீடித்த வேளாண்மை நெறிகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது அல்ல. மண் வளத்தைக் காப்பாற்றக் கூடிய இயற்கை விவசாய நிபுணத்துவமும் இணைந்து செயல்பட வேண்டும். சரியானபடி வெள்ள நீர்க்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு பக்கம் நீர் தேங்குவதால் உவர் - களர்ப் பிரச்னைகளும் மண் அரிப்பும் நிகழ்ந்து வருகிறது.இப்படிப்பட்ட வளமிழந்த மண்ணுக்கு வாழ்வைத்தரும் மரநடவுடன் இணைந்த மண் புழு வளர்ப்பு, மரங்களுடன் இணைந்த பயிர்சாகுபடி (அஞ்ழ்ர் - ஊர்ழ்ங்ள்ற்ழ்ஹ்) ஆகியவற்றை உகந்தவாறு பின்பற்றும் வரைவுத் திட்டத்தை உருவாக்குவது அவசியம். ஒரு பக்கம் கூடுதல் நீரால் பிரச்னை, மறுபக்கம் வறட்சியில் பிரச்னை. வறட்சியால் வளமைதரும் சிறுதானிய சாகுபடி உரிய கவனத்தைப் பெற்றாக வேண்டும்.விவசாய நிலங்களில் மழைநீர் சேமிப்பு செயலற்றுப் போனதால் சாகுபடிக்குரிய நிலங்கள் தரிசாக உள்ளன. தவறான வழியில் வனப்பகுதி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வன நிலப்பரப்பும் குறைந்துவிட்டது. இதனால் உஷ்ணம் அதிகமாகி மழைக்கவர்ச்சி இல்லாமல் வறட்சியால் தள்ளாடும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது.பிற மாநிலங்களிலும் ஏறத்தாழ இதேநிலைதான். வறண்ட பகுதிகளான தக்காண பீடபூமியில் அடங்கும் மாநிலங்களில் மானாவாரி சாகுபடிக் குறைந்துவிட்டது.இதுபோன்ற பல காரணங்களினால் விவசாய உற்பத்தித் திறனை சராசரி அளவுக்கு மேல் உயர்த்த முடியவில்லை. தக்காணத்தில் உள்ள விதர்பா கரிசல் காட்டு விவசாயிகள் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் விவசாயத்தை உதறிவிட்டு மாநகரங்களுக்குச் சென்று வேறு பிழைப்பைத் தேடுகின்றனர்.பொதுவாகப் பருத்தி சாகுபடியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம், பருத்தியில் ரசாயன விவசாயம் செய்யும்போது மிகவும் வேகமாக மண்வளம் இழக்கப்படுவதால் மாற்றுப் பயிராக நிலக்கடலை, உளுந்து, பயறு போன்ற பருப்பு வகைப் பயிர்களை (கஉஎமஙஉ) சாகுபடி செய்வது அவசியம். பருத்தியைவிட நிலக்கடலைக்கு நல்ல ஏற்றுமதிச் சந்தை உள்ளது. இந்தியா சமையல் எண்ணெய்யில் பற்றாக்குறை நாடு. பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் இறக்குமதியையும் தவிர்க்கலாம்.இந்திய விவசாயத்தில் மகசூலை உயர்த்த இரண்டு துறைகளை நாம் உகந்தவாறு பயன்படுத்தலாம். முதலாவதாக பயோடெக்னாலஜி என்ற உயிர்ப்பொருள் தொழில்நுட்பம். இரண்டாவதாக மைக்ரோ பயாலஜி என்ற நுண்ணுயிரித் தொழில்நுட்பம். உயிர்ப்பொருள் தொழில்நுட்பத்தில் சர்ச்சைக்குரிய பி.ட்டி விதை நுட்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்வு விதைகள், வீரிய ரகம், ஒட்டு, வீரிய ஒட்டு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தலாம்.நுண்ணுயிரியல் என்பது பாக்டீரியா, வைரஸ், காளான், பாசி தொடர்பான உயிரிகள் பற்றியது. மண்ணில் அவை கோடிக்கணக்கில் வாழவேண்டும். வளமான மண்ணின் அடையாளம் நுண்ணுயிரிகளின் பெருக்கமே.நுண்ணுயிரியல் பண்பாடு மருத்துவத் துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுகிறது. மருத்துவத்தில் உள்ள அளவுக்கு வேளாண்மையில் நுண்ணுயிரியல் பண்பாடுகள் பரவவில்லை. மண்ணிலிருந்து கண்டு பிடிக்க வேண்டிய நுண்ணுயிரிகள் பல்லாயிரம் வகைகள் உண்டெனினும் நாம் சிலவற்றை மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளோம்.அவ்வாறு அடையாளமாயுள்ள நுண்ணுயிரிகளையும்கூட விவசாயிகள் பயன்படுத்தவில்லை. உதாரணமாக அசோஸ்பைரிசம், அட்டோஃபாகடர், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விருடி, சூடோமோனஸ், பாசில்லஸ் சப்மலீஸ், புவேரியா பஸ்ஸினியா, வெர்ட்டி சில்லியம் லகானி, மெட்ரி சிடியம் அளிசோப்னி, பேசிலோமைசிஸ் லைலாசினல், ஈம் என்று சொல்லப்படும் திறமி நுண்ணுயிர்களின் கலவை.மேற்கூறிய பட்டியலில் உள்ளவை கண்டுபிடிக்கப்பட்டவை. இனி கண்டுபிடிக்க வேண்டியவை நிறைய உண்டெனினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரி உரங்களைக்கூட விவசாயத்தில் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.அண்மையில் வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள ஒரு செய்தி நம்மைத் துணுக்குற வைக்கிறது. இந்தியாவில் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாம். இதனால் தமிழ்நாடு மண்வளம், சுற்றுச் சூழல் பாதிப்புக்கு மேல் சாகுபடிச் செலவும் அதிகமாகும்.ரசாயன உரத்தின் மாற்றாக மக்கிய தொழு உரம், ஆட்டுப்புழுக்கை, கோழி உரம், மனிதக் கழிவின் உயிரித்திண்மம் ஆகியவற்றுடன் பக்குவமான நிலையில் மேற்கூறிய உயிர்கள் சிலவற்றைக் கலந்து பதனப்படுத்திப் பயன்படுத்தினால் பயிருக்கு வேண்டிய முழுமையான ஊட்டத்தைப் பெறலாம். ரசாயன உரம் தரும் கூடுதல் மகசூலை விடவும் அதிகமாகவே உயிரி உரப்பண்பாட்டில் பெற முடியும்.இந்திய வேளாண்மையில் சரியான செய்நேர்த்தி அவசியம். மரப்பயிர்களுக்கும் தீவனப்பயிர்களுக்கும் அதிகம் நைட்ரஜன் தழைச்சத்து வேண்டும். பழம் - காய்கறிகளுக்கு அதிகம் பாஸ்பரஸ் தேவை. சில பயிர்கள் நீரில்லாமல் வாடும்; சில பயிர்கள் அதிக நீரால் வாடும். சரியான முறையில் அளவான நீர்ப்பயன்பாடு நல்ல மகசூல் தரும்.நகர்ப்புறச்சார்புள்ள நிலங்களில் பசுமையகம் - ஹை டெக் பசுமைக் கூடார முறையைப் பயன்படுத்தலாம். இன்று விவசாயத்தில் ஆள்பற்றாக்குறை தலையாய பிரச்னை. அதை இயன்றவரைக் களையவேண்டும். உற்பத்தி உறவுகளில் பொதுத்துறை புறக்கணிக்கப்பட்டுத் தனியார் துறை தூக்கி நிறுத்தப்படும்போது, 100 நாள் வேலைத்திட்டடத்தை உற்பத்தித் தன்மையுள்ளதாக மாற்ற விவசாயகளிடம் ஒப்படைக்கலாமே. விவசாயகளுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படும்போது அரசு 100 ரூபாய் கொடுத்தால் மேலும் 100 ரூபாய் விவசாயிகளின் பங்காக ஏற்றுத் தோட்ட வேலைக்கு ஆள் வழங்கலாமே.இறுதியாக ஒன்று. விவசாயத்துறையோ, விவசாயப் பல்கலைக்கழகமோ விவசாயிகளுக்கு சரியானபடி உதவ முன்வர வேண்டும். விவசாயம் கிராமங்களில் நிகழ்கிறது. விவசாய அலுவலகங்களோ நகரங்களில் உள்ளன. விவசாய அலுவலர்கள் கோப்புகளில் சயனம் செய்கின்றனர். அரசுக்கு பதில் சொல்வது அவர்கள் கடமை. விவசாயிகளுக்கு யார் பதில் சொல்வார்?விவசாய நிபுணத்துவம் குளு குளு அறைகளில் சிறைவாசம் அனுபவிக்கிறது. அந்த நிபுணத்துவம் வயல் வாசத்திற்கும் வனவாசத்திற்கும் வருமானால் இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்!

Friday, 11 July 2014

வத்திப்பட்டி எனும் "பப்பாளி கிராமம்'

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தட்பவெட்ப நிலை, தண்ணீர் பற்றாக்குறைக்கு ஏற்ப விளைவிக்கப்படும் பயிர்களை மாற்றியமைத்து லாபம் ஈட்டி வருகின்றனர்.வத்திப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சி. ஆண்டிச்சாமி,65. இவர், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் நிதிப்பிரிவு இணை செயலராக 34 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். வத்திப்பட்டியை பப்பாளி கிராமமாக மாற்றிய பெரும்பங்கு இவருக்குண்டு


.அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சப்னா (மஞ்சள் நிறம்), ரெட் லேடி (சிவப்பு நிறம்), ரெட் ராயல் (சிவப்பு நிறம்), சிந்தா (மஞ்சள் நிறம்) என நான்கு வகையான ஒட்டுரக பப்பாளிகள் விளைவிக்கப்படுகிறது. இதன் விதை 100 கிராம் ரூ.3,500. 100 கிராம் எடைக்கு சுமார் 1000 விதைகள் இருக்கும். சப்னா, சிந்தா வகை பப்பாளிகள் எண்ணெய் நாடுகளான குவைத், துபாய் நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பப்பாளி விவசாயத்தை குழந் தையை போன்று பராமரிக்க வேண் டும். இந்த விவசாயத்தில் முறையான வகையில் ஈடுபட்டால் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.கிணற்றுப்பாசனம் மூலம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பப்பாளி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம். ஆண்டு தோறும் மாசியில் நடவு செய்ய வேண்டும். 45 நாட்களுக்கு பின் விளைச்சல் கிடைக் கும். 8 முதல் 14 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். இயற்கை உரம் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் காணலாம். மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப கிலோ ரூ.8 முதல் ரூ.9 வரை விற்கலாம். சிந்தா வகை பப்பாளியை கர்நாடக மாநில பழ வியாபாரிகள் அதிகளவு கொள்முதல் செய்கின்றனர். நான், சகோதரர்கள் உட்பட சிலர் பப்பாளி விவசாயத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறோம், என்றார்.தொடர்புக்கு சி.ஆண்டிச்சாமி, ஓய்வு பெற்ற தலைமை செயலக இணை செயலர், வத்திப்பட்டி கிராமம், நத்தம் வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம்.

Thursday, 10 July 2014

அரசின் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை

விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனை தடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒன்று தான் தேசிய நுண்நீர் பாசன இயக்க திட்டம். நீரின் அழுத்த விசையை பயன்படுத்தி பாசனம் செய்யும் அனைத்து பாசன முறைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். பொதுவாக நுண்நீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.மானியம்சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.அதிக பட்ச தொகைஇந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத மானியத் தொகையின் அளவு ஆகும். இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.தேவையான ஆவணங்கள்விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தங்களது நில ஆவணங்களுடன், அதாவது கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயியின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும். விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை நிர்மாணம் செய்யும். நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயியின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.பயன்கள்சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் விரையம் குறையும். பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது. சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும். பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும். மொத்த விளைச்சல் 50 முதல் 100 சதவீதம் அதிகரிக்கும்.தகவல்: த.காமராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர், மதுரை கிழக்கு. 98652 80167

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். தென்னையில் ரகங்கள்தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவைதாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.வயதுவிதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன. எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம். நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Thursday, 3 July 2014

"காதல் பூக்கள்' சாகுபடி

கடலோர பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, கிளாடியோலஸ் மலர் சாகுபடி குறித்து, சிறப்புப் பயிற்சி அளிக்கிறார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வேளாண் விரிவாக்கத் துறை உதவி பேராசிரியர் தி. ராஜ் ப்ரவீண்.வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த இப்பூக்கள், வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ரோஜா... என வண்ணங்களில் ஒற்றைத் தண் டில் கொத்து கொத்தாக மலர்கின்றன. இவற்றை பசுமை குடிலில் வளர்ப்பது சற்றே செலவு பிடிக்கும் விஷயம். சாதாரண விவசாய முறையில் வளர்க்க வேண்டுமெனில், சீதோஷ்ண நிலை ஓரளவு சரியாக இருக்க வேண்டும். 28 டிகிரி வெப்பநிலை முதல் 40 டிகிரி வரை தாங்கும். ஏற்கனவே மல்லிகை மற்றும் பிற மலர்கள் சாகுபடி செய்யும் இடத்தில், இவற்றை சாகுபடி செய்தால் குறுகிய காலத்தில் லாபம் பெறலாம்.இவற்றின் விதைகள் பெரிய வெங்காயம் போன்றிருக்கும். 90வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். செடிக்கு ஒருதண்டில் எட்டு முதல் 13 பூக்கள் கொத்தாக இருக்கும். அடிப்பகுதியில் முதல் பூ மலரும் போது வெட்டி எடுத்து விட வேண்டும். இவை 10 முதல் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.நவ., முதல் ஜன., வரை சீதோஷ்ணம் நன்றாக இருப்பதால், பூ உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஊடுபயிராக நூல்கோல் நடலாம். இவற்றுக்கு சந்தையில் மதிப்பு அதிகம். ஒற்றை கொத்துப் பூ எட்டு முதல் 15 வரை ரூபாய் வரை விற்பனையாகும். ஜன., முதல் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை வாங்குவோரும் அதிகம். பிப்., ல் "காதல் பூக்கள்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.பயிற்சி பெற விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 94863 85423.எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.


 நன்றி தினமலர்


ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மைய அலுவலகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப் பட்டம் முக்கியமானது. தென் மேற்குப் பருவமழை இப்பட்டத்தின் உற்பத்தியை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்புக்கு குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் இப்பட்டத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிர்கள். வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்புமைய அலுவலகம்

மக்காச்சோளம்,

சோளம், எள், நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு கீழ்க்கண்ட விலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மக்காச்சோளம்: அமெரிக்க வேளாண் துறை கணக்கின்படி 2014-15-ஆம் ஆண்டில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 979 மில்லியன் டன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அரசின் விவசாயத் துறையின் கணக்கீட்டின்படி 2014-15ஆம் ஆண்டில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 23 மில்லியன் டன்களாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகம்.தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தின் தற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ.1,480. விலை உயரும் என்ற எதிப்பார்ப்பில், தைப்பட்டத்தில் விளைந்த 15,000 டன் மக்காச்சோளம் இருப்பில் உள்ளது. கர்நாடகா அரசு விவசாயிகளிடமிருந்து 7 லட்சம் டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்துள்ளது.இதைத் தொடர்ந்து தற்போது இணைய ஒப்பந்தப்புள்ளி கோரும் எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், பீகாரிலிருந்து குவிண்டாலுக்கு ரூ.1,400 என்ற விலையில் அதிக வரத்து வந்து கொண்டிருப்பதால் விலை உயர வாய்ப்பின்றி தற்போதைய விலையே நிலவும் என்று கருதப்படுகிறது.இம் மையம் கடந்த 20 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை சந்தையில் நிலவிய விலை நிலவரத்தை ஆய்வு செய்தது. பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வின்படி ஜுன் மாதம் மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,480 ஆகவும், பின் அறுவடை காலமான நவம்பரில் குவிண்டாலுக்கு ரூ.1,400-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோளம்:

இந்தியாவில், சோளம் பயிரிடும் பரப்பு 1961 முதல் 2011 வரை 18.2 மில்லியன் எக்டரிலிருந்து 6.3 மில்லியன் எக்டராக குறைந்துள்ளது. மேலும் இதன் உற்பத்தி 8 மில்லியன் டன்களிலிருந்து 6 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. ஆனால் உற்பத்தி திறன் எக்டருக்கு 440 கிலோவிலிருந்து 961 கிலோவாக உயர்ந்துள்ளது.சோளத்தின் குறைந்த தேவை மற்றும் விலை குறைவால் கடந்த 10 ஆண்டுகளாக சோளம் பயிரிடும் பரப்பு 3 லட்சத்து 83 ஆயிரம் எக்டேரிலிருந்து 1 லட்சத்து 98 ஆயிரம் எக்டேராக குறைந்துள்ளது.திருப்பூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிய சோளத்தின் விலைகளை ஆராய்ந்தது. சோளத்தின் தற்போதைய விலை கிலோவிற்கு ரூ.18.5 முதல் ரூ.19 வரை உள்ளது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் அறுவடையின்போது கிலோவிற்கு ரூ.18-19 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எள்:

இந்தியாவில் எள் ஒரு முக்கிய எண்ணெய் வித்துப் பயிர். தமிழ்நாட்டில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் உற்பத்தி, பருவநிலையைப் பொருத்துள்ளது.இந்தியாவில் 2012-13-இல் கரீப் பருவத்தில் எள் உற்பத்தி 3.40 லட்சம் டன். இது 2013-14இல் சுமார் 3.50 லட்சம் டன். தமிழகத்தில் 2011-12-ஆம் ஆண்டு எள் 0.43 லட்சம் எக்டேரில் பயிரிடப்பட்டு 0.26 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர், சேலம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் எள் பயிரிடப்படுகிறது.கொல்கத்தா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எள்ளைக் கொள்முதல் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பொதுவாக எள், தைப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது.பொதுவாக ஜூலை, ஆகஸ்டில் விதைக்கப்படும் எள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்தைக்கு வருகிறது. தைப்பட்டத்தில் விதைக்கப்படும் எள் மார்ச்-ஏப்ரல் ஆகிய மாதங்களில் சந்தைக்கு வருகிறது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 14 ஆண்டுகள் நிலவிய சிவப்பு எள் விலைகளை ஆராய்ந்ததில் எள் அறுவடை செய்யப்படும் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,500 முதல் ரூ.8,700 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை:

உலகளவில் நிலக்கடலை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப் பயிர். சோயா, பனை எண்ணெய், சூரியகாந்தி, கடுகு போன்ற எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை வித்துக்கள் மற்றும் எண்ணெய் விலைகளைப் பாதிக்கிறது.இந்தியாவில் 2012-13ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் நிலக்கடலை உற்பத்தி 26.20 லட்சம் டன்னாகவும், 2013-14இல் சுமார் 47.15 லட்சம் டன்னாகவும் இருந்தது. குஜராத், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம்,மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் நிலக்கடலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆடிப்பட்டத்தில் மானாவாரி நிலக்கடலை 65 சதவீதம் பயிரிடப்படுகிறது.சேவூர் மற்றும் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய நிலக்கடலை விலைகளை ஆய்வு செய்ததில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் அறுவடையின்போது நிலக்கடலை காய்க்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை கிடைக்கும். திண்டிவனம் சந்தைப் பகுதியில் நிலக்கடலை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 முதல் ரூ.3,600 வரை இருக்கும்.

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயம் லாபம் தரும் முக்கியப் பயிர்களில் ஒன்றாக கருதப்படுவதால் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது.கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.45 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. ஆனால், தற்போது தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.22 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நிலவிய அதிகபட்ச விலையினால் விவசாயிகள், சின்ன வெங்காய சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர். மேலும் இந்தாண்டு ஏற்றுமதியும் குறைவாகவே உள்ளது.தற்போது தேனி, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து வரத்து உள்ளது. மேலும், கர்நாடகத்திலிருந்து துவங்கியுள்ள வரத்து செம்டம்பர் வரை நீடிக்கும். எனவே, அறுவடைக் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களி ல் பண்டிகை மற்றும் தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காய விலை உயர வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டில் கோ5 ரகத்தின் விட்டம் 27 மில்லி மீட்டருக்கு மேலேயும், வட்ட வடிவத்துடனும் மற்றும் இளஞ் சிவப்பு முதல் சிவப்பு நிறத்துடனும் உள்ளதால் இதற்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆய்வு முடிவுகளின்படி ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் சின்ன வெங்காயத்திற்கு அறுவடை சமயத்தில் அதாவது செம்டம்பர் முதல் அக்டோபர் வரை, கிலோவுக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை விலை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.