Tuesday, 29 July 2014

பச்சைக்காய் பயிரிட்டால் பண அறுவடை அமோகம்!

பச்சைக்காய் பயிரிட்டால் பண அறுவடை அமோகம்!

ஜனாதிபதி விருது வென்று பொம்மராஜபுரம் முருகன் அசத்தல்!

ஒரு ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் லாபம் தரக்கூடிய பச்சைக்காய் என்கிற புது ஏலக்காய் ரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் தேனி மாவட்டம், பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த முருகன். சாகுபடியும் சக்கைப்போடு போடுகிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய இந்தப் புதிய ரக ஏலக்காய் கண்டறிந்ததற்காக, கடந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் சிறந்த கண்டுபிடிப்பு விருதோடு, ஒரு லட்ச ரூபாய் பரிசுப் பணத்தையும் பெற்றார்.மேகமலைக்கு வெகு அருகில் இருக்கிறது இவரது ஊர். இங்குதான் இந்தியாவிலேயே ஏலக்காய் அதிகம் பயிரிடப்படுவதாக சொல்கிறார்கள். இவருக்கு சொந்தமாக பன்னிரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. நாற்பது வருடங்களாக காஃபியும், ஏலக்காயும் பயிரிட்டு வருகிறார்கள். ஏலக்காய் சாகுபடியில் நல்ல அனுபவம்.ஆரம்பத்தில் மலபார் என்கிற ஏலக்காய் ரகத்தை அதிகமாக பயிரிட்டு வந்தோம். ஒரு முறை அறுவடை செய்யும்போது, அதில் ஒரு செடியின் காய்கள் மட்டும் மற்ற காய்களை விட பெரியதாகவும், கரும்பச்சை நிறத்திலும் இருந்தன. இந்தச் செடியில்தான் அதிகம் காய்களும் காய்த்திருந்ததைக் கவனித்தேன். மலபார் ரகத்தில் ஒரு செடிக்கு ஒரு கிலோதான் ஏலக்காய் கிடைக்கும். ஆனால் இதில் மட்டும் மூன்று கிலோ காய்த்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இது ஏதோ புது ரகம் என்று தோன்றியதால் அந்தச் செடியிலிருந்து நாற்றுகளை எடுத்து தனியாக நட்டு பராமரிக்க ஆரம்பித்தேன். நான் நினைத்தது நடந்தது. அந்தச் செடிகளில் நல்ல மகசூல். காய்களும் கனமாக நல்ல தரத்தோடு காய்த்தன. கரும்பச்சை நிறத்தில் காண்பதற்கு களிப்பாக இருந்ததால் நானே பச்சைக்காய் என்று பெயர் வைத்தேன்" என்று, தான் கண்டுபிடித்த கதையை சொல்கிறார் முருகன்.ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் அளவுக்குதான் பச்சைக்காய் பயிரிட்டிருக்கிறார். நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கியதால், இப்போது மொத்தமாகவே பச்சை ஏலக்காய் பயிர்தான். தரமான ஏலக்காய் என்பதால் நல்ல விலைக்குப் போகிறது. கேரளாவின் விவசாயத்துறை அதிகாரிகள் இவரது தோட்டத்துக்கு வந்து ஆய்வுசெய்து பாராட்டியதோடு, மற்ற விவசாயிகளுக்கும் இந்த ரகத்தைப் பரிந்துரை செய்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநில விவசாயிகள் முருகனிடம் வந்து நாற்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.பயிரிடத் தொடங்கி பத்தாவது மாதம் ஏலக்காய் காய்க்கும். மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம். நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒருமுறை அதே செடியில் மீண்டும் காய்க்கும். ஆரம்பத்தில் நட்ட செடிகள்தான் இன்னமும் முருகனுக்கு மகசூல் தந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு புதிய நாற்றுகளை நடவேண்டிய அவசியமே இதுவரை இல்லை. இந்தப் பச்சை ஏலக்காய் ரகத்தைப் பொறுத்தவரை விதை போட்டு பயிர் செய்யாமல், நாற்று எடுத்து நட்டால்தான் அதன் இயல்பான வண்ணமும், தன்மையும் கிடைக்கின்றன. ஈரான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பச்சை ஏலக்காய்க்கு நல்ல டிமாண்ட்.இவரது கண்டுபிடிப்பை மத்திய அரசு ஊக்குவித்து மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. கேரளாவைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், புதிய ரகத்தில் அதிக உற்பத்தி செய்பவருக்கான பிரிவில் விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது.என்னுடைய தொலைபேசி எண் 04554-293849. சக விவசாயிகள் இது தொடர்பாக சந்தேகம் ஏதேனும் கேட்க விரும்பினாலோ, உதவிக்கு அழைத்தாலோ உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்கிறார் முருகன். உபயோகப்படுத்திக்கங்க உழவர்களே! பச்சைக்காய் : பக்கா டிப்ஸ்!பச்சைக்காய் ரகத்தில் ஒரு செடிக்கு நாலு கிலோ வரை காய்ப்பதோடு, ஏக்கருக்கு ஆயிரத்து இருநூறு கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதுவே சாதாரண ரகத்தில் ஒரு செடிக்கு  ஒரு கிலோ ஏலக்காயும் , ஏக்கருக்கு ஐநூறு கிலோ மகசூலும் மட்டுமே கிடைக்கும்.ஏலக்காயைப் பொறுத்தவரை எடைதான் முக்கியம். ஏலக்காய்க்குள் இருக்கும் அதிகப்படியான விதைகள்தான் எடை கொடுக்கும். பச்சைக்காய் ரகத்தில் ஒரு காயில் இருபத்தெட்டு விதைகள் இருக்கும். இதுவே சாதாரண ஏலக்காயில் பதினைந்திலிருந்து இருபது விதைகள்தான் இருக்கும். சாதாரண ரகத்தில் ஒரு கிலோவுக்கு எட்டாயிரம் காய்கள் காய்க்கும். பச்சைக்காய் ரகத்தில் ஐயாயிரம் காய் இருந்தாலே இந்த எடை கிடைக்கும்.பச்சைக்காய் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது. சாதாரண ரக ஏலக்காய் அறுநூறு ரூபாய்தான்.ஏலக்காய் செடி பதினைந்து முதல் பதினெட்டு அடி வரை வளரும். செடியின் அடிப்பகுதியில சரம் சரமாக தட்டை வரும். அந்தச் சரத்திலருந்து சின்னச் சின்ன காம்பில் ஏலக்காய் காய்க்கும். விதைக்காக என்றால் ஏலக்காயை அப்படியே பழுக்க விட்டுவிட வேண்டும்.  ஏலக்காய் பழ விதை கிலோ ஆயிரம் ரூபாய். இந்த விதையை ரெண்டு ஏக்கருக்கு சாகுபடி செய்யலாம்.ஒரு ஏலக்காய் செடியின் நாற்று  நூறு ரூபாய்.

No comments:

Post a Comment