Tuesday, 30 December 2014

நவீன தொழில்நுட்பம்

கழிவு நீரிலிருந்து மின் உற்பத்தி : நமது நாட்டிலுள்ள நகரங்களில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.உயர்வேக எரிவாயு நுட்பம்: இந்தியாவில் 1950 முதல் வளியற்ற நுண்ணுயிர்கள் மூலம் உயர்வேக எரிவாயு உருவாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.தொழில்நுட்பத்தின் செயல்பாடு : உயர்வேக கூட்டு கலன் என்பது மேல் செல்லும் வளியற்ற திடப்படுக்கை அடைப்புடன் நிலையினை நெகிழி கலன்களின் கூட்டு கலவையாகும். இதன் மூலம் வளியற்ற பகுதியில் வாடும் நுண்ணுயிர்கள் குறிப்பாக நுண்ணுயிர்கள், உயிர்ச்சுருள் அளவில் வரை மிகவும் ஏதுவாகின்றது. இத்தகைய வட்டு வளியற்ற திடப்படுக்கை அமைப்பு பல்வேறு தொழிற்சாலை நீர்கழிவுகள் நன்கு மாசு நீக்கு தன்மை பெற்றுள்ளன.""தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு : வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள உயிர் சக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக எளிய முறையில் அமைக்க கூடிய உயர்வேக எரிவாயு கலன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இந்த கலன் காகித ஆலைகள், சவ்வரிசி தொழிற்சாலைகள், பால்பதனிடும் பால்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிக்க மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. இந்த தொழிற்சாலைகளை சுமார் 70 - 90 சதம் வரை கழிவு நீரிலிருந்து கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதுடன் 60 -70 சதம் உள்ள மீதேன் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிற்சாலைகளில் ஆற்றல் தேவையில் 40 முதல் 100 சதம் வரை பூர்த்தி செய்கின்றன.தமிழ்நாட்டில் சுமார் 700க்கும் மேற்பட்ட சவ்வரிசி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 தொழிற்சாலைகளை மட்டும் பெரிய அளவிலான எரிவாயு கலன்களைக் கொண்டு மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் சுமார் 100 முதல் 150 தொழிற்சாலைகளில் மட்டும் திறந்தவெளி தொட்டிகளில் கழிவுநீர் சேமிக்கப்பட்டு மீத்தேன் வாயு சேகரிக்கும் கலன்கள் அமைந்துள்ளன. சில தொழிற்சாலைகள் கழிவு நீரினை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்கின்றன.இந்த கலன்களின் மூலமாக சுத்திகரிக்கும் பொழுது கிடைக்கும் கழிவுநீரின் அளவிற்கேற்ப நாள் ஒன்றுக்கு 5 முதல் 2000 கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, 1 கிலோ வாட்ஸ் முதல் 250 கிலோ வாட்ஸ் வரை மின்உற்பத்தி செய்யலாம். இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீரிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலைகளில் கழிவுநீர் வெளிப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால் இத்தொழில்நுட்பம் மூலம் நிவாரணம் பெற முடியும்.இவ்வாறு கழிவுநீரை சுத்திகரிக்கும் பொழுது, ஏற்கனவே மிகுந்த மின்சாரத்தை செலவழித்து இயக்கப்படும் சுத்திகரிப்பானின் இயக்கம் நிறுத்தப்படுவதால், அந்த மின்சாரத் தேவையும் தவிர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கலனில் தேங்கும் திடப்பொருளும் வெளியேற்றப்பட்டு சிறந்த இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.உயர்வேக எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் நகரக்கழிவு, பல்வேறு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளின் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்வதுடன் சிறந்த பலனாக எரிவாயு சக்தியைப் பெற்று மின்சாரமும் உற்பத்தி செய்ய முடிகின்றது. இத்தகைய தொழில்நுட்பம் கழிவு நீரில் மாசு நீக்கும் தொழில்நுட்பமாகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத தொழில்நுட்பமாகவும் விளைகிறது. எனவே இத்தகைய தொழில்நுட்பத்தினை எளிதில் உபயோகித்து சிறந்த பலனைப் பெற முடியும். தகவல் : முனைவர் சௌ.காமராஜ், உயிர்சக்தி துறை, வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1276.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இயற்கை வேளாண்மை ஒரு கண்ணோட்டம்

இயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம் : பூச்சி நோய்கள் தாக்காத இரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். சரியான விதைக்கும் பருவத்தில் விதைப்பதினால் பூச்சி, நோய் தாக்குதல் தவிர்க்கலாம். பயிர் சுழற்சி மற்றும் பல்வேறு மாற்றுப்பயிர்களை தேர்வு செய்வதன் மூலமும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க முடியும். இனக்கவர்ச்சி பொறி மற்றும் இதர பூச்சிப்பொறிகளை வைத்தும் பூச்சிகளை கட்டப்படுத்தலாம். இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பூச்சி, நோய் தாக்குதலை சமாளித்து வளரக்கூடியதாக உள்ளது. மேலும் மண் மூலமாக பரவும் நோய்களின் தாக்குதலும் இயற்கை வேளாண் சாகுபடி நிலங்களில் குறைவாகவே உள்ளது. இயற்கை வேளாண்மையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்: இயற்கை வேளாண்மையில் பல்வேறுவிதமான நன்மைகள் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கிறது. இயற்கை வேளாண்மை செய்யப்படும் நிலத்தில் உள்ள அங்ககப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் மண்வளம் பராமரிக்கப்பட்டு மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கும். இதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன் பயிர்ச்சத்துக்கள் நன்முறையில் பயிர்களுக்கு கிடைக்கிறது. சாதாரண சாகுபடி முறையினை விட இயற்கை வேளாண்மையில் நீர்வளம் மற்றும் நிலம் மாசுபடுதல் குறைவு. பல்வேறு விதமான பயிர்கள் , பயிர் மரபியல் வளங்கள் இயற்கை வேளாண்மையில் அதிகம் உள்ளன. இயற்கை வேளாண்மையினால் பறவைகள் மற்றும் சிறுபிராணிகளுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கிறது. இயற்கை வேளாண்மையினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் இதர உயிரினங்களின் பெருக்கம் சமநிலைப்படுகிறது. இயற்கை வேளாண்மையினால் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்பட்டு பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறைகிறது. இயற்கை வேளாண்மையில் அங்ககப் பொருட்களின் சுழற்சி மற்றும் பயிர்ச்சத்துக்களின் உபயோகம் முறைப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதில்லை. இயற்கை வேளாண்மை முறைகள் மண்ணின் வளம், மண்ணின் அமைப்பு மற்றும் நீர்பிடிப்புத்திறனை மேம்படுத்துவதினால் நிலமானது தரிசாகாமல் என்றென்றும் பசுமையாக இருந்து பலன் அளிக்க வல்லதாக இருப்பதற்கு உதவுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் ஏதேனும் ஒரு வகையில் பயிர் சாகுபடியில் இயற்கை இடுபொருட்களின் (2-ம்) பசுந்தாள் உரப்பயிர்கள், மண்புழு உரம், கம்போஸ்ட், வேளாண் தொழிற்சாலைக் கழிவுகள்) பயன்பாட்டினை அதிகரித்து மண்வளத்தைக் காத்து பயன்பெற வேண்டுகிறோம். - முனைவர் து. செந்திவேல்பேராசிரியர் (உழவியல்)காந்திகிராமம் - 624 302.திண்டுக்கல் மாவட்டம்.94435 70103

தீவன மரம் பசுந்தீவன உற்பத்தி மூலம் கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம். நல்ல லாபம் தரும் காய்கறிகள், பழங்கள் மூலம் வருமானம் பெறுவதை விட தீவன மரங்கள், பசுந்தீவன வகை தாவரங்களையும் தனியாகவோ, வரப்புப் பயிராகவோ கலப்பு பயிராகவும் வளர்க்கலாம். வேலிப் பயிராகவும் பராமரித்தால் லாபம் உண்டு. ஒரு ஏக்கர் பரப்பில் 16000 கிலோ சவுண்டல் எனும் மரப்பயிர் தீவனம் தரும் போது நிறைய ஆடுகள் வளர்க்க வாய்ப்பும் உள்ளது. இவை தவிரவும் கிளரிசிடியா, மல்பரி, பூவரசு, வாதநாராயணன், மரங்கள் பசுந்தீவனம் நிலையாக பெற உதவும்.பில்லிப்பிசரா, சணப்பை, கொள்ளு, பயறு வகைகள் எல்லாம் நிறைய தீவனம் தரும் வகைகள் தான். தீவன மரம் வளர்ப்பது எளிது. குறிப்பாக அகத்தி, செடி முருங்கை மரங்கள் கூட பல நன்மைகள் பெற உதவுபவை. வறட்சி தாங்கி வளரும் கொழுக்கட்டைப்புல், எருமைப்புல், கம்பு நேப்பியர் புல், குதிரைவாலிபுல், அருகம்புல் முதலியன மேலும் உதவுபவை. உரிய இடம் இருந்தும் முறையாக திட்டமிட்டு கால்நடைகளை சேர்க்காமல் செய்யும் விவசாயத்தால் நல்ல லாபம் வராது. கால்நடைகள் நிரந்தர வங்கிகளாக ஒருமுறை கடனாக வங்கியில்பணம் பெற்று ஆட்டுப்பட்டி கன்றுகள் பண்ணை வைத்தால் கூட ஒரே ஆண்டில் கை நிறைய காசு பார்க்கலாம்.முடிந்த அளவு முயற்சித்தாலோ போதும். ஒரு ஏக்கர் உள்ள சிறு விவசாயி கூட 50 ஆட்டுக்குட்டிகள் அல்லது 10 கன்றுகள் வளர்த்து 6 மாதம் பராமரித்து விற்றால் கூட ரூ.50,000 தாராளமாக ஆண்டு வருமானம் லாபமாக பெறலாம். தொழில் முனைவோராக இதற்கு ஒருநாள் பயிற்சி மற்றும் நேரடி செயல்விளக்கம் வந்து கூட பயிற்சி தர வாய்ப்பும் உள்ளது.கால்நடை மூலம் பெறும் கழிவுகளையும் தரமான உரமாக்கி, மண்புழு குழியில் இட்டு மதிப்புக்கூட்டில் நல்ல மண்வளம் பேணுவது தான் இயற்கை வேளாண்மை இதற்கு நிறைய அரசு உதவிகள் உள்ளன. உங்கள் நிலத்தை இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்ற உரிய தொழில்நுட்ப உதவிகள் தரப்படுகிறது. சிறப்பு பயிற்சிகள் பெற விருப்பம் உள்ளவர்கள் 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர் பா.இளங்கோவன்,உடுமலை, திருப்பூர் மாவட்டம்.

விளை நிலத்தின் சிறு பரப்பில் சிறு தானிய சாகுபடி அவசியம்

முன் மாதிரியாக வழிகாட்டுகிறார் தேனி விவசாயிவிளை நிலத்தின் சிறு பரப்பில் சிறு தானிய சாகுபடி அவசியம் என்று முன் மாதிரியாக இருந்து பிற விவசாயிகளையும் வலியுறுத்தி வருகிறார் தேனியை சேர்ந்த விவசாயி ரத்தினம்.நாட்டுத் தக்காளி, பச்சை மிளகாய் போன்றவை தற்போதைய கால கட்டத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது. உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வீரிய ஒட்டு நெல், காய்கறிகள், பழங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்நிலையில் தேனி அருகே டொம்புச்சேரி பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி ரத்தினம், சாகுபடி பரப்பில் ஒரு பகுதியை சிறு தானியங்களை பயிர் செய்து இயற்கை வேளாண்மை குறித்து பிற விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவர் கூறியதாவது: தற்போது பயன்படுத்தப்படும் வீரிய ஒட்டு ரகங்களில் பூச்சி கொல்லி மருந்து, ரசாயன உரம் பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கணக்கில் இந்த உணவு வகைகளை உண்பதால் மனிதர்களுக்கு இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட புதுப்புது நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பெரும்பாலும் கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானிய பயிர்கள் பயிரிட்டு வந்தனர். அதையே உணவாகவும் உட்கொண்டு விற்பனையும் செய்து வந்தனர். ஆனால் இன்று அதிக வருவாய் ஈட்டக்கூடிய வகையில் வீரிய ஒட்டு ரக விளைபொருட்கள் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகளும் சிறுதானிய உணவு வகைகளை மறந்து, அரிசி உள்ளிட்ட உணவு வகைகளை நாள்தோறும் உட்கொள்வதால் அவர்களும் உடல் அளவில் பலம் இழந்து காணப்படுகின்றனர்.எனவே நான் எங்களது தோட்டத்தில் உள்ள விளை நிலங்களில் மூன்றில் ஒரு பங்கில் சிறு தானிய உணவு வகைகளை பயிர்செய்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவியது. இருந்தாலும் இரண்டு ஏக்கரில் குதிரை வாலி சாகுபடி செய்திருந்தேன். போதிய மழை இல்லாததால் 3 மூடை கிடைத்தது. ஆனால் தற்போது உள்ள மில்களில் பெரும்பாலும் சிறு தானியங்களை அரைத்து கொடுப்பதற்கு போதிய வசதி இல்லாமல் உள்ளனர். இதனால் இதை அரைத்து உணவு பொருளாக மாற்றுவதற்கு பெரும்பாடு பட்டுவிட்டேன்.தற்போது இரண்டு ஏக்கரில் சாமை பயிர் சாகுபடி செய்துள்ளேன். 90 நாள் பயிர். கடந்த மாதம் மழை பெய்ததால் நன்கு வளர்ந்து வருகிறது. இனி எந்த வித பிரச்னையும் இல்லாம் இருக்கும். வரும் மார்கழி 10 ல் அறுவடை செய்வோம். தற்போதைய நிலையில் மூடை 5000 முதல் 6000 ரூபாய் வரை விலை போகிறது. இந்நிலை நீடித்தால் எங்களுக்கு லாபம் கிடைக்கும். மேலும் எங்கள் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துவோம், என்றார். இவருடன் பேச 94424 94427. கருணாகரன், தேனி. 

Wednesday, 17 December 2014

இயற்கை விவசாயத்தில் பார்த்தீனியம்

தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான பார்த்தீனியம் நம்மால் தான் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது விசித்திரமான உண்மையாகும்.அரை அடி முதல் 3 அடி வரை மண் கண்டத்துள்ளே அங்கிங்கெணாதபடி களை விதைகள் பல்கி பரவிக் கிடப்பதே அரைகுறையான மட்காத குப்பை உரத்தை இடுவதால் தான். ஆம், கால்நடை உண்ட களைச்செடி விதைகள் சாணத்துடன் வெளியே வந்து பத்திரமாக மேற்பரப்பில் பதப்படுத்தப்பட்டு பிறகு எடுத்து வீசும்போது நீரைக்கண்டதும் குப்பென்று வளர்ந்து விடுகிறது. எனவே களைகள் வரும் இந்த வழியை மாற்றி யோசித்து மண்புழு உரமாக இட்டால் நிச்சயம் களைக்கு வேலையில்லை.அப்படியே களைகள் வந்தாலும் அதனை முறையாக சேகரம் செய்து மட்கச் செய்து மகத்தான உரமாக மீளப்பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் களையானாலும் விதிவிலக்கல்ல. நல்ல இலைப்பரப்பு அதிகம் கொண்ட பசுந்தழைகள் அடங்கிய பலவித மரங்களின் இலைகளையும் சேகரம் செய்து பார்த்தீனியம் மற்றும் இதர புல்வகைச் களைகளையும் களை நீக்கும் கருவிகள் கொண்டு அறுத்து வதங்க வைத்து அப்புறப்படுத்தி பதப்படுத்தி மண்புழு உரக்குழியில் இட்டு மண்புழு உரமாக மாற்றலாம். அல்லது இதற்கு கம்போஸ்ட் குழி தயாரித்திட எல்லா இடத்திலும் வாய்ப்புள்ளது. நீளம் 15 அடி அகலம் 8 அடி மற்றும் ஆழம் 3 அடி உள்ள குழிகள் தோண்டினால் ஒரு ஏக்கருக்குத் தேவையான உரம் பெற வாய்ப்புள்ளது.திடல்கள், சேமிப்பு கூடங்கள் மற்றும் நடைபாதைகள், கல்வி சாலைகள், பூங்காக்கள் பேருந்து நிறுத்தங்கள் இங்கு வளர்ந்துள்ள பார்த்தீனியத்தை 10 லிட்டர் தண்ணீரில் 1.5 கிலோ சாப்பாட்டு உப்பு கரைத்து தெளித்து சுத்தமாக அழிக்கலாம். உயிரியல் முறைப்படி "சைக்கோகிரம்மா' எனும் புள்ளி உடைய ஈச்சங்காய் போன்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து பார்த்தீனியம் உள்ள இடத்தில் மெதுவாக அவற்றை சுத்தமாக அழிக்கலாம்.களை வரும் முன்பே முந்தி ஊடுபயிர்,மூடு பயிர், வரப்பு பயிர் மற்றும் நிலப்போர்வை அமைத்தல் மூலம் பார்த்தீனியம் தரும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம். மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர். பா.இளங்கோவன்உடுமலை, திருப்பூர்.

Tuesday, 16 December 2014

பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி

ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் வயல் காணப்படும். உள்ளே நுழைந்தால், மாப்பிள்ளை சம்பா, கருங்குருணை, அம்பாசமுத்திரம், பூங்கார் என பாரம்பரியமிக்க ரகங்களான நெல் சாகுபடியும், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், உளுந்து ஆகிய சிறுதானிய பயிர்களும் புஞ்சை நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.செடிமுருங்கை உள்ளிட்ட கீரைவகைகள், பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு, காங்கேயம் போன்ற உயர்ரக மாடுகள் வளர்ப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயி ஆர்.முருகேசன் கூறியதாவது: யோகா ஆசிரியரான, எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அழிந்துவரும் விவசாயத்திற்கு புத்துணர்வூட்டும் வகையில் பாரம்பரியமிக்க நெல், தானியங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பலமுறை எனது தோட்டத்திற்கு வந்துள்ளார்.அவரின் ஆலோசனையின் பேரில் முழுக்க...முழுக்க இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல் 2 ஏக்கரிலும், பூங்கார் 2 ஏக்கரிலும், அம்பாசமுத்திரம் 2 ஏக்கரிலும் நடவு செய்துள்ளேன். இதில், பூங்கார் வறட்சியை தாங்கி விளையும் நெல் பயிராகும். 70 முதல் 80 நாட்களில் மகசூல் கிடைக்கும்.தற்போது இந்த ரக நெல் மகசூல் பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்த நாள் முதல் "பஞ்ச கவ்யம்' எனும் உரம் போட்டு வருகிறேன். இந்த உரம், மாட்டுச்சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்டது. இதுபோன்ற இயற்கை உரமிடுவதால் பயிர் நன்றாக வளரும். பூச்சி தாக்குதல் இருக்காது.ஏக்கருக்கு 30 மூடை பூங்கார் ரக நெல் மகசூல் கிடைக்கிறது. ஒரு மூடை 1,500 ரூபாய் வரை விலை போகிறது. இதனால், 2 ஏக்கர் பூங்கார் நெல் சாகுபடி மூலம் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைத்து வருகிறது. இதுதவிர, நாவல், நெல்லி, மா, வேம்பு, புங்கன், மகோகனி உட்பட 3,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். பூசணி, வெண்டை, கத்திரி, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி செடிகளையும் நடவு செய்துள்ளேன்.பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு 4 இடங்களில் 21 அடி ஆழமுள்ள பண்ணை குட்டைகளை வெட்டியுள்ளேன். "மோட்டார் பம்பு செட்' மூலம் அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். எனது தோட்டம் மூலம் ஆண்டிற்கு 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன், என்றார்.ஆலோசனை பெற 94434 65991ல் தொடர்பு கொள்ளலாம்.- ஆர். ராஜ்குமார், 

Tuesday, 9 December 2014

34 சென்ட்...திட்டம்


ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். குறிப்பாக, சில ஏக்கர்களாவது இருந்தால்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முடியும்’ என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. இதை அடித்து நொறுக்கும் வகையில்... வெறும் 34 சென்ட் இடத்தில் ஆடு, கோழி, மீன், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மூலிகைகள் என தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஃபெலிக்ஸ். பசுமை போர்த்திய இவருடைய பண்ணையில் நுழைந்தபோது... ஆடுகளின் 'மேமே’ சத்தம், கோழி மற்றும் சேவல்களின் கூவல் என ரம்மியமாக கலந்து வந்து கொண்டிருந்தது. நாம் அதில் லயித்திருக்க, நம் தோள் தட்டி கவனத்தைத் திருப்பினார், ஃபெலிக்ஸ்.''13 வருசமா மகாராஷ்டிர மாநிலம், புனே நகரத்துல இருக்கிற சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாத்தேன். கை நிறைய சம்பளம் கிடைச்சுது. ஆனா, வேலைச்சுமை அதிகம். மெஷின் மாதிரி போயிட்டு இருந்தது வாழ்க்கை. தேவைக்கு அதிகமா பணம் இருந்தாலும் மனசு வெறுமையாத்தான் இருந்துச்சு. அதுக்காகத்தான் இயற்கைச் சூழலைத் தேடிட்டு இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் மூலமா 'சட்டையில்லா சாமியப்பன்’ ஐயாவோட அறிமுகம் கிடைச்சுது. அவர்தான் இயற்கை விவசாய முறைகளைக் கத்துக் கொடுத்தார்.ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு கடையத்துக்கே வந்து, வீட்டை ஒட்டியிருந்த 34 சென்ட் இடத்துல சின்னதா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. இங்க பெர்மா கல்ச்சர் (நிரந்தர வேளாண்மை) முறையில வேளாண்மை பண்றோம். உழைப்பையும் முதலீட்டையும் குறைச்சுக்கிட்டு மகசூலையும், வருமானத்தையும் எடுக்கிறதுதான் இந்த முறையோட குறிக்கோள். இப்ப எங்க வீட்டுத் தேவையில 80% இந்த இடத்துக்குள்ளயே கிடைச்சுடுது. இதையெல்லாம்விட, மனசுக்கு 100% நிறைவு கிடைச்சிருக்கு'' என சிலாகித்த ஃபெலிக்ஸ், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.

தண்ணீர் மேலாண்மைக்கு தாமரைக்குளம்!'

அரை வட்டமா ஒரு தாமரைக்குளம் அமைச்சு, அதுல முக்கோண வடிவத்துல கால் அடி உயரத்தில் மூணு தடுப்புகளை வெச்சு... மழைத்தண்ணி இந்தக் குளத்துக்குள்ள வர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கேன். குளம் நிறைஞ்சதும் வாய்க்கால் வழியா மீன் குளத்துக்கு தண்ணி போயிடும். வெளியில இருந்து வர்ற தண்ணி, சுத்த மானதாக இருக்காதுங்கிறதாலதான் இந்தத் தாமரைக்குளத்துல தடுப்புகள் இருக்கு. வாய்க்கால்ல கல்வாழை, மஞ்சள், இஞ்சி நட்டிருக்கேன். இது மூணும் தண்ணியை சுத்தப்படுத்தி அனுப்பும். இதில் கல்வாழைக் குத்தான் பெரும் பங்கு. இதேபோல வீட்டுக்குப் பின்பகுதியிலும் குளியலறை, சமையலறை கழிவுநீர் சேர்ற இடத்திலயும் கல்வாழை, மூலிகைகள், கீரைகளை நட்டிருக்கேன்.


பசுந்தீவனத்தில் கலப்புத்தீவனம்!

ஆடுகளுக்காக 10 அடி நீளம், 15 அடி அகலத்தில் தரையில் இருந்து 10 அடி உயரத் தில் பரண் அமைச்சிருக்கேன். பரணுக்குக் கீழே வந்து விழும் ஆடுகளோட கழிவுகள்ல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்கு உணவாகிடுது. மீதமுள்ள சிறுநீர் கலந்த புழுக்கைகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இப்ப என்கிட்ட 7 கன்னி, 4 நாடு, 2 ஜமுனாபாரினு மொத்தம் 13 ஆடுகள் இருக்கு. ஆடுகளுக்கு தீவனத்துக்காக 15 சென்ட்ல அகத்தி, சித்தகத்தி, சூபாபுல்,கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், முயல்மசால், குதிரைமசால், மல்பெரி, சங்குப்புஷ்பம், ஆமணக்கு, முருங்கை, கிளரிசீடியா, பப்பாளி, பாதாம், கப்பை, சீனிக்கிழங்குக் கொடி, கினியாபுல், தீவனத்தட்டை, கொழுக்கட்டைப்புல், எலுமிச்சைப்புல், தீவனக்கம்பு, தீவனச்சோளம், கொள்ளு... இப்படி மொத்தம் 30 வகையான தீவனங்களைக் கலந்து நடவு செய்திருக்கேன். கலப்புத் தீவனமாகக் கொடுத்தால்தான் ஆடுகளோட வளர்ச்சி நல்லா இருக்கும். காலையில 11 மணிக்கும், மாலையில 4 மணிக்கும் 20 கிலோ பசுந்தீவனத்தை அறுத்து வெச்சுடுவோம். காலை, மதியம், மாலையில் தண்ணீரை மாத்தணும். காலையில் வைத்த தீவனத்தில் மிச்சம் இருந்தா, எருக்குழியில போட்டுடுவேன். இதுல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்குத் தீவனமாயிடும்' என்று எளிய நுட்பங்களை அடுக்கிய ஃபெலிக்ஸ், அடுத்ததாக கோழிகள் மற்றும் மீன் பற்றிச் சொன்னார்.  


1,000 ரூபாய்க்கு விற்பனையாகும் வனராணி!

'சண்டைச் சேவல் 15, நாட்டுக்கோழி 5, வனராணிக் கோழி 2, குஞ்சுகள் 20 னு மொத்தம் 42 உருப்படிகள் இருக்கு. 6 அடி நீளம், 8 அடி அகலம் 5 அடி உயரத்துல கோழிக் கொட்டகை அமைச்சிருக்கேன். கொட்டகைக்குள்ள நீளமான கம்புகளை தனித்தனியாகக் கட்டி வெச்சிருக்கேன். கோழிகள் இந்தக் கம்புகள் மேல ஏறி உட்கார்ந்துக்கும். கோதுமை, கம்பு, மக்காச்சோளம் மூணையும் கலந்து தட்டுகள்ல வெச்சுடுவேன். மத்தபடி கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளக்குறேன்.


இலைதழைகளை உண்டு வளருது, மீன்

!மீன் வளக்குறதுக்காக 15 அடி நீளம், 18 அடி அகலம், 4 அடி ஆழத்துல ஹாலோபிளாக்ல தொட்டி கட்டியிருக்கேன். அடியில சிமெண்ட் போடாம களிமண்ணைக் கொட்டியிருக்கேன். களிமண்ணைப் போட்டா நுண்ணுயிர்ப் பெருக்கம் இருக்கும். ரோகு, கட்லா, மிர்கால், புல் கெண்டை, சாதா கெண்டைனு கலந்து 200 மீன்குஞ்சுகள் விட்டிருக்கேன். புல், முருங்கை, அகத்தி இலைகளை குளத்துல தூவினால் மீன்கள் சாப்பிட்டுக்குது. தவிடு, பிண்ணாக்கு கலவையெல்லாம் கொடுக்குறதில்லை. தவிடு கொடுத்தா வளர்ச்சி அதிகமாயிருக்கும். ஆனா, மீன் ருசியா இருக்காது. தவிடு கொடுக்கும்போது 6 மாசத்துல கிடைக்கிற வளர்ச்சி, இலைகளைக் கொடுக்கும்போது ஒரு வருஷம் ஆகும். அதேசமயம், இலைதழைகளைக் கொடுக்குறப்பதான் மீன் சத்தாவும் ருசியாவும் இருக்கும்.


மூலிகைகள், கீரைகள், பழங்கள்!

துளசி, தூதுவளை, சிறியாநங்கை, இன்சுலின், ஆவாரை, சித்தரத்தை, பால்பெருக்கி, அம்மான் பச்சரிசி, தும்பை, துத்தி, கண்டங்கத்தரி, யூகலிப்டஸ், ஆடாதொடை, கிரந்திநாயகம், முசுமுசுக்கை, இஞ்சி, வசம்பு, கிராம்பு, திப்பிலி, மிளகு, வெற்றிலைனு அறுபது வகையான மூலிகைகளும்; புதினா, கறிவேப்பிலை, வல்லாரை, அரைக்கீரை, மணத்தக்காளி, பசலி, பொன்னாங்கண்ணி, தண்டுக்கீரை, முளைகீரை, புளியாரைனு 30 வகையான கீரைகளும்; கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பூசணி, சுரை, புடல், பீர்க்கன், அவரை, கொத்தவரை, தடியங்காய்னு பலவகை காய்கறிகளும்; சேனை, மரவள்ளி, பால்சேம்பு, சர்க்கரைவள்ளி, சிறுகிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்குனு கிழங்கு வகைகளும்; கொய்யா, அன்னாசி, மங்குஸ்தான், பப்பாளி, மா, பலா, நெல்லி, மாதுளை, அத்தி, வாழைனு பழ வகைகளையும் மேட்டுப்பாத்தி முறையில சாகுபடி செய்திருக்கேன் என்ற ஃபெலிக்ஸ், நிறைவாக வருமானம் பற்றிய தகவல்களுக்குள் புகுந்தார்.



விற்பனை வாய்ப்பு!''

இந்தப் பண்ணையில இருந்து ஆடு, கோழி களை மட்டும்தான் விற்பனை செய்றேன். மற்றது என் வீட்டுத்தேவைக்கு மட்டும்தான். விற்பனைக்காக யாரையும் தேடிப் போற தில்லை. நேரடியாக வர்றவங்களுக்கு மட்டும் தான் விற்பனை செய்றேன். 10 ஆடுகள் இருந்தா, வருசத்துக்கு 30 குட்டிகள் கிடைக்கும். குட்டிகளை வளர்த்து சராசரியாக ஒரு குட்டி 6 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிகளைப் பொறுத்தவரை சண்டைச்சேவலை 1,500 ரூபாய்க்கும், நாட்டுக்கோழியை 350 ரூபாய்க்கும், வனராணியை 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். வருஷத்துக்கு சராசரியா 25 கோழிகள் விற்பனை செய்றேன். அது மூலமா 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தத்தில் கோழி, ஆடுகள் மூலமா வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிது.  வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறி களும் கிடைச்சுடுது. ஒரு வாரத்துக்கு காய் களுக்கு 300 ரூபாய்னு வெச்சுக்கிட்டா வருசத் துக்கு 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வரும். அது அப்படியே மிச்சம். இதே மாதிரி, பழங்கள், மீன்கள், கீரைகள், மூலிகைகள் மூலமா, 30 ஆயிரம் ரூபாய் மிச்சம். தேவையான அத்தனைக்கும் 100 சதவிகிதம் மத்தவங் களை நம்பிட்டு இருந்த நான், இப்போ, 80% தற்சார்பு அடைஞ்சுட்டேன். அடுத்து, நாய்கள், லவ் பேர்ட்ஸ், முயல், புறா, காளான், தேனீ வளர்ப்புனு இறங்கப்போறேன்' என்று எதிர்கால திட்டத்தையும் சேர்த்தே சொன்னார், ஃபெலிக்ஸ் பெருத்த எதிர்பார்ப்போடு!

Monday, 8 December 2014

நவீன கரும்பு சாகுபடி: தண்ணீர் குறைவு-மகசூல் அதிகம்

காஞ்சிபுரம்: குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறிய தகவல்கள்:

முக்கிய அம்சங்கள்: ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் தயாரித்தல் வேண்டும். இளம் (25 முதல் 30 நாள்) நாற்றுகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் உரமிடுதல், ஊடு பயிரிட்டு மண் வளம், மகசூல் அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த உரங்கள், பயிர் பாதுகாப்பு, பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.

நாற்றுகள் தயார் செய்யத் தேவையானப் பொருட்கள்:

5000 ஒரு விதைப்பரு சீவல்கள், 100 குழித்தட்டுகள் (ஒவ்வொன்றிலும் 50 குழிகள்) 150 கிலோ கோகோபிட். ஒரு விதைப்பரு சீவல்களை தெரிவு செய்தல்: ஆரோக்கியமான 7 முதல் 9 மாதங்களான கரும்பிலிருந்து, கணுக்களுக்கிடையே 7 முதல் 8 அங்குலம் இடைவெளியுள்ள விதைப் பருக்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்கிய, பழுதடைந்த விதைப் பருக்களை தவிர்ப்பது அவசியம். தேவையான அளவு கரும்பை வெட்டி எடுத்துக் கொள்ளவும், வெட்டப்பட்ட கரும்பிலிருந்து ஒரு விதைப்பரு சீவல்களை வெட்டுக்கருவி கொண்டு வெட்டி எடுக்கவும்.

 சீரான நாற்றுகளைப் பெறவழிமுறைகள்:

விதைப்பரு சீவல்களை வெட்டி எடுத்தவுடன், அவற்றில் சிலவற்றை 1 சதவீத சுண்ணாம்புக் கரைசலில் நனைத்து ஈரமான ஒரு சாக்குப்பையில் 3 முதல் 4 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். 4-வது நாளின் இறுதியில் சாக்குப்பையை திறந்து அவற்றில் நன்கு முளைவிட்ட ஆரோக்கியமான விதைப் பருக்களை தேர்வு செய்யவும். ப்ளாஸ்டிக் ட்ரேக்களில் முளைவிடாது போன விதைப்பருக்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பருக்களை எடுத்து வைக்கலாம். இந்த முறை மூலம் தரமான நாற்றுகளை பெறுவதும், சீரான வளர்ச்சியும் சாத்தியமாகிறது.

நாற்று தயார் செய்தல்:

6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து மொட்டுகளை சேகரிக்க வேண்டும். அதில் 5,000 மொட்டுகளை (ஒரு விதைப்பரு சீவல்கள்) எடுத்து டிரைக்கோடெர்மா விரிடி (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) கலந்த தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும். பின்னர் இந்த மொட்டுகளை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் 5 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குழித்தட்டுகளில் பாதியளவு கோகோ பீட் எரு கொண்டு நிரப்பி அதில் விதை மொட்டுகள் மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும். நிழல் வலை அல்லது மர நிழலில் வைத்து 25 முதல் 30 நாள்கள் வரை நீர் தெளிக்க வேண்டும். நிலம் தயார் செய்தல்: பயிர்க் கழிவுகளை நீக்கியவுடன் நிலத்தில் உள்ள மண் கட்டிகளை உடைக்க வேண்டும். டிராக்டர் உதவியுடன் ஆழமாக ஒன்று அல்லது இரண்டு உழவுகள் (30 செ.மீ.க்கு மேல்) செய்ய வேண்டும். பின்பு சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்த வேண்டும். இயற்கை உரங்களான தொழுஉரம் ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன்கள் அளிப்பததோடு அதனுடன் ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு ஒரு கிலோ கலந்து இடவேண்டும். பார்களை 5 அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.

 நாற்று நடவு செய்தல்:

25 முதல் 30 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு நாள் முன்பு நாற்றுகளுக்கு நீர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாற்றுகளை எளிதாக எடுக்கலாம். நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பொருட்டு நீர் பாய்ச்ச வேண்டும். அதே போல் நடவுக்குப் பின்பும் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 15-க்கும் மேற்பட்ட தூர்கள் 2 மாதத்திற்குள் உருவாகும். 2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும். மண் அணைத்தல், சோகை உரித்தல்: நடவு செய்த 45-வது நாள் மற்றும் 90-வது நாளில் மண் அணைப்பு செய்தல் வேண்டும். ஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8 முதல் 10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த, சில காயாத இலைகளை 5-வது, 7வது மாதத்தில் உரித்து பார் இடைவெளிகளில் இட வேண்டும். வேலையாட்கள் கொண்டோ, கருவிகள் மூலமாகவோ நடவுக்குப் பின் 30, 60, 90-வது நாள்களில் களை எடுக்க வேண்டும்.

 மூடாக்கு:

மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணிலுள்ள களைகள் கட்டுப்படுவதுடன் மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. கரும்பு சோகைகள் ஏக்கருக்கு 1.5 டன் அளவு நடவுக்கு 3 நாள்களுக்கு பின் பரப்பி விட வேண்டும். அதே போல், சோகை உரித்த பின் அவைகளை பார் இடைவெளிகளில் பரப்பி விடவேண்டும். நீர் மேலாண்மை: கரும்பு பயிருக்கு அதன் மொத்த வளர்ச்சிப் பருவத்தில் ஏக்கருக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 90 சதவீதம் வரை நீர் உபயோகிப்புத் திறனை அதிகரித்து 40 முதல் 70 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும். நடவுக்குப் பின் மண்ணின் தன்மையைப் பொறுத்தும் பயிரின் வயதைப் பொறுத்தும், மழை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்தும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். கிளை விடும் பருவத்தில் (36 முதல் 100 நாள்கள்) 10 நாள்களுக்கு ஒரு முறையும், அதிக வளர்ச்சி பருவத்தில் (101 முதல் 270 நாள்கள்) 7 நாள்களுக்கு ஒரு முறையும், முதிர்ச்சிப் பருவத்தில் (271 நாள் முதல் அறுவடை வரை) 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம்: நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. 3 நாள்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இம்முறையில் 45 சதவீதம் பாசன நீரை (1,200 மி.மீ.) சேமிக்க முடியும். இயற்கை உரம் அளித்தல்: நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை இயற்கை முறையில் உரம் அளித்தலை அதிகரிக்கிறது. இதன் மூலம் மண்ணுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் கிடைப்பதோடு, மண்ணின் உயிர்த்தன்மையும் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை உரங்களான தொ6ழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது மக்கிய ப்ரஸ் மட் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 முதல் 10 டன் என்ற அளவிற்கு கொடுப்பது நல்லது.தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 112 கிலோ கிடைக்கும் அளவிற்கு சரிபார்த்து மேற்கண்ட உரங்களை இடுவது நல்லது. இயற்கை உரங்களோடு ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் கலந்து கொடுப்பது மிகவும் நல்லது

. ஊடுபயிர்: நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளி இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களைக் கட்டுப்பாடு, மண்வளத்தைப் பெருக்க முடியும். மகசூல்: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் சரியாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் மொட்டுக்கள் எனக் கணக்கிடும் போது 150 டன்கள் வரை மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.

Tuesday, 2 December 2014

"துவரை இருந்தால் கவலை இல்லை'

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துவரைப் பயிர் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலும், நிரந்தர வருமானமும் பெற்று விவசாயிகள் கவலை இன்றி வாழலாம் என்று வேளாண் அறிவியல் நிலையம் தெரிவிக்கிறது.பயறுவகை பயிர்களில் அதிகப் புரதச்சத்து இருப்பதால் துவரைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் உண்டு. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இது வரப் பிரசாதம். இப் பயிருக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றாலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்வது வழக்கத்தில் இல்லை.ஆனால் தற்போது புதிய ரகங்களைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பமான நடவு முறையில் சாகுபடி மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெறலாம்.இதற்கான வழிமுறைகள் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன் கூறிய விவரங்கள்:தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசிப் பட்டங்கள், கோடைப் பருவகாலங்களில் துவரை பயிரிடப்பட்டாலும், ஆடிப் பட்டத்தில்தான் சாகுபடிப் பரப்பு அதிகமாக உள்ளது. இப் பயிரின் சராசரி விளைச்சல் ஹெக்டேருக்கு 763 கிலோ ஆகும்.பருவம், ரகங்கள்: ஆடிப் பட்டம்: எஸ்.ஏ.-1, கோ-5, 6, கோ.பி,எச். -1, 2, வம்பன் -1, 2புரட்டாசிப் பட்டம் : கோ-5, கோ.பி,எச். -1, 2, கோ (ஆர்.ஜி) 7, ஏ.பி.கே. 1. கோடைக்காலம்: கோ -4, 5, கோ.பி.எச்.1, 2, பி.எஸ்.ஆர்.1, வம்பன் - 1, எஸ்.ஏ.1.

நடவுமுறை சாகுபடி:துவரையில் நடவு முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவை. ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தைக் கலக்க வேண்டும். பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்கு பின் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் கலவையை 100 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 15 நிமிடம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6க்கு 4) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க நான்கு துளைகள் போடலாம். பிறகு விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 25 - 30 நாள்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்வது நல்லது.வடிகால் வசதிகொண்ட செம்மண் அல்லது வண்டல் மண் நிலங்கள் துவரை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது. பிப்ரவரி மாதத்தில் ரபி பருவப் பயிர்கள் அறுவடை முடிந்தவுடன் மார்ச் - எப்ரல் மாதங்களில் 2, 3 முறை கோடை உழவு செய்யப்பட வேண்டும். துவரை நடவு செய்வதற்கு சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் 2.5 டன் அளவில் இடலாம்.இறவை அல்லது மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ. அளவுள்ள குழிகளை 5 க்கு 3 அடி இடைவெளியிலும் (1 ஏக்கருக்கு 2904 பயிர்), 6 க்கு 3 அடி (1 ஏக்கருக்கு 2420 பயிர்) என்ற இடைவெளியிலும் குழிகள் எடுக்க வேண்டும்.நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயா, மொச்சை போன்ற பயிர்களை விதைத்து, பிறகு துவரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப 3 முதல் 4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும்.நடவு செய்த 30 முதல் 40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும். மேலும், நடவுப் பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்துப் பராமரிக்கலாம்.

பூக்கள் உதிர்தல்:பூக்கள் உதிர்வதைத் தடுப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீத விளைச்சல் இழப்பைத் தவிர்க்கலாம். நாப்தலின் அசிடிக் ஆசிட் (என்.ஏ.ஏ.) பயிர் ஊக்கியை 40 பி.பி.எம். என்ற அளவில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்க வேண்டும். இதைப் பூச்சி, பூஞ்சாண மருந்துகளுடன் கலந்தோ அல்லது உப்பு நீரில் கலந்தோ தெளிக்கக் கூடாது.கைத்தெளிப்பான் கொண்டு செடிகள் நன்கு நனையுமாறு அதிகாலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.பூக்கள் உதிர்வதைக் குறைப்பதற்கும், அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பயறு ஒண்டர் ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மானாவாரியில் 10 முதல் 15 விழுக்காடு விளைச்சலை அதிகரிக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு முறைகள்:

1. வம்பன் 1, 2 அல்லது ஏ.பி.கே. 1 அல்லது கோ (ஆர்.ஜி.7) இரகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது.

2. ஹெக்டேருக்கு 12 ஹெலிக்கோவெர்ப்பா இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் வேண்டும்.

3. ஹெக்டேருக்கு 50 பறவைத் தாங்கிகள் அமைத்து இரை விழுங்கிகளை ஊக்குவித்தல் வேண்டும்.

4. முடிந்தவரை காய்ப்புழுக்கள் மற்றும் பூ வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.

5. பச்சைக் காய்ப்புழு சேதம் மட்டும் இருப்பின் ஹெக்டேருக்கு 1.5 லிட்டர் வீதத்தில் ஹெலிக்கோவெர்ப்பா என்.பி.வி. கரைசல் தெளித்தல் வேண்டும்.

6. காய் துளைப்பானின் சேதம் பொருளாதார சேத நிலையை விட அதிகமிருப்பின் 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 1 லிட்டர் தண்ணீரில் புரோபனோபாஸ் 2.5 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடா குளோபிரைடு கலந்து தெளிக்கவும். வாடல்நோய், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் கார்பென்டசின் கரைத்து செடியின் வேர் பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும்.

7. மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 5, 6 ரகங்களைப் பயிரிடவும், நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடாகுளோபிரைடு 0.4 மி.லி கலந்து தெளிக்கலாம்.அறுவடை:விதைத்த 150 முதல் 180 நாள்களில் பச்சைக் காய்கள் முதல் அறுவடைக்கு வரும் 55 முதல் 60 நாள்கள் சென்று மறுமுறை அறுவடை செய்யலாம். 210 நாள்களில் காய்ந்த காய்களை முதல் முறையும், 30 நாள்கள் சென்று மறுமுறையும் அறுவடை செய்யலாம்.

சேமிப்பு: அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சதவீத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து சேமித்து வைக்கலாம்.

மகசூல்:பச்சைக் காய்கள் ஒரு செடிக்கு 1 முதல் 3 கிலோ, மணிகள் 1 ஹெக்டேருக்கு 2 ஆயிரம் கிலோ.

மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 27452371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

காக்க..காக்க... மண் வளம் காக்க....!

விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும்.பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன.இதில் சணப்பை பயிரிடுவது குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அகிலா கூறியது:பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர். தீவனப் பயிராகவும் வளர்க்கலாம்.நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும். சணப்பை இடும் முறைகள்: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம்.ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும்.இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது. 45 நாள் முதல் 60 நாள்களுக்கும் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய வேண்டும்.இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகள் முழு பலன்களை அடையாலம் என்றார்.

Friday, 7 November 2014

பால் 40 ரூபாய்… மாட்டு சிறுநீர் 60 ரூபாய்!

காஞ்சிபுரம்: பால் விலை லிட்டர் ரூ.40க்கு கிடைக்கிறது என்றும், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு விற்கிறது என்றும், வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும், விவசாயமும் செழிக்கும் என்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள புதிய இடையூர் கிராமத்தில் கரிம விவசாயிகள் தினம்  கொண்டாடப்பட்டது.மரங்கள் அடர்ந்த இயற்கைச் சூழலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு , இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் 'பண்ணை', களம் அமைத்து கொடுத்திருந்தது. கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் குமாரவேல் கூட்டத்தில் பேசியபோது, "முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்களின் வீடுகளில் பத்து மாடுகளாவது இருக்கும். ஆனால் இன்று மாடுகளே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள். இயற்கை விவசாயத்திற்கான அடிப்படையே மாடுகள்தான். சென்னைவாசிகள் வீட்டில் நடக்கும் சுபதினங்களுக்கு பசு மாட்டுச் சிறுநீர் கிடைக்காமல் மஞ்சள் நீரை தெளிக்கின்றார்கள்.பசுமாட்டு சிறுநீர் இப்போது பாட்டிலில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பால் விலை லிட்டர் ரூ.40க்கு  கிடைக்கிறது. ஆனால், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு  விற்கிறது. இதை மதிப்புக்கூட்டி 'அர்க்' என்ற மருந்து பொருளாக மாற்றலாம். இதன் விலை 500 ரூபாய்க்கு மேலே விற்பனையாகிறது. பாலை விட  நாட்டு  மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணத்தையும் விற்க முடியும். வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும் இருக்கும். விவசாயமும் செழிக்கும்" என்றார்.நீரின் அவசியம் குறித்து பேசிய பாலாறு படுகை பாதுகாப்பு இயக்க தலைவர் காஞ்சி அமுதன், "குடிநீர் ஆதாரத்திற்காக பயன்பட்ட ஏரிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் கூவத்தை விட பாலாற்றில் சயனைடு அளவு அதிகமாக இருக்கிறது. பாலாற்றை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம்.நம் நாட்டில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ரெக்சின் பொருட்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றோம். தோலின் மூலம் தயாரித்த பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதியாகின்றன. எந்த நாட்டினரோ பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்காக நம்முடைய ஆறுகளை  பணத்திற்காக பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். தேம்ஸ் நதிக்கரையில் இருந்த தோல் பதனிடும் கம்பெனிகளை எல்லாம் அகற்றி ஆற்றை தூய்மையாக்கிவிட்டார்கள்.  நம்முடைய ஆறுகளை எப்போது தூய்மையாக்கப் போகிறோம்?” என்று கேள்வியை உதிர்ந்து அமர்ந்தார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விவசாயி ராஜப்பன், "உளுந்தூர்பேட்டை பகுதியில், சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றேன். சென்னையில் ஒரு கிலோ வரகு அரிசி 120 ரூபாய்க்கு விற்பதாக இங்கே சொன்னார்கள். 100 கிலோ வரகு மூட்டையை 1100 ரூபாய்க்கு விற்றேன். இதை அரிசியாக்கினால் 50 கிலோ வரகரிசி கிடைக்கும். இடைத்தரகர்கள் எந்த அளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றார்கள் என்று இதிலிருந்தே தெரியும். குறைந்த விலையில் மக்களுக்கு சிறுதானியங்களும் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் விவசாயிகளுக்கும் நஷ்டம் வரக் கூடாது. விளைவிப்பவர்களுக்கு விலை கிடைத்தால்தான் சிறுதானியங்களை பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார் ஆதங்கமாக.கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி பேசும்போது, "எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒருத்தர் விவசாயம் செய்வதற்கு நிலம் தேடி வந்திருந்தார். நான் பண்ணையில் வைத்திருந்த ஆடு, மாடு கோழி என அனைத்தையும் வைத்து சம்பாதித்துக் கொள்ளுங்கள். ஆனால் நிலத்தை இயற்கையான முறையில்தான் பராமரிக்க வேண்டும். எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அதைப்பார்த்து 10 விவசாயிகளாவது மனம் மாறி இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால்போதும் என்றேன். மூன்று மாதம் கடந்தது, செய்ய முடியவில்லை என்று அவர், என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். இயற்கை வேளாண்மை செய்ய, இன்றைக்கும் என்னுடைய நிலத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.கரிம வேளாண் கட்டமைப்பு நிறுவனரும், மூத்த வேளாண் விஞ்ஞானியுமான அரு.சோலையப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.


தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது என்று கேள்விப்பட்டோம். எந்தெந்தப் பயிர்களுக்கு, என்னென்ன அளவில் மானியம் கொடுக்கிறார்கள்?”


எம். சுந்தரம், திருப்பூர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.‘‘தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக் காய்... போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இவை ஒரு ஹெக்ேடர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேற்கண்டவை தவிர, மண்புழு உரம் தயாரிப்பு, டிராக்டர், பவர்-டில்லர், விளக்குப்பொறி, பவர்-ஸ்பிரேயர்... போன்றவற்றுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.இதில் சிறுவிவசாயி, பெண்கள்... போன்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்த மானியங்களைப் பெற நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, 3 போட்டோ, மண் மாதிரி முடிவுகளை இணைத்து, அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
‘‘மண்புழு உரம் உற்பத்தி செய்ய விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா?”


ஆர். முருகன், செம்மேடு.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் செயல்பட்டு வரும் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலர் முனைவர் பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.‘‘இயற்கை விவசாயம்தான் இனி எதிர்காலம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், இயற்கை இடுப்பொருட்களை உற்பத்தி செய்ய, அரசும் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, மண்புழு உரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, காதி கிராமத் தொழில் ஆணையம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நேரடியாக வழங்கப்படுவதில்லை. வங்கிகள் மூலமே வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு, 25% மானியம், பெண்களுக்கு 30% மானியம் என்று வழங்கப்படுகிறது.500 கிலோ உற்பத்தித்திறன் கொண்ட மண்புழு உரக்கூடத்தை அமைக்க, சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகும். இதில் ஆண் களுக்கு ஒரு லட்சமும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமும் மானியமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுதவிர, மத்திய-மாநில அரசுகளும் அவ்வப்போது மண் புழு உர உற்பத்திக்கு மானியம் வழங்கி வருகின்றன.இந்த மானியங்களைப் பெற வேண்டும் என்றால், அடிப்படைத் தகுதிகள் அவசியம். சொந்தமான நிலம் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராக, மண்புழு உர உற்பத்திப் பற்றி முறையாகப் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கே.வி.கே என்று அழைக்கப்படும் வேளாண் அறிவியல் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்கள் விவேகானந்தா கேந்திராவிலும், மண்புழு உர உற்பத்தி பற்றிய பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறோம். இந்தப் பயிற்சியில், மண்புழு உர உற்பத்தி நுட்பங்கள்... வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுக்கிறோம். விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில், திட்ட அறிக்கையும்கூட தயார் செய்து கொடுக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளோம்.”தொடர்புக்கு, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கன்னியாகுமரி-629702. தொலைபேசி: 04652-246296, செல்போன்: 82200-22205.
‘‘விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். இதற்கு உதவி செய்யும் அமைப்புகள் பற்றி சொல்லுங்கள்?”


ஆர்.எம். சரவணன், ஈரோடு.பெங்களூருவில் உள்ள அபீடா அமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் பி.பி. வாக்மரே பதில் சொல்கிறார்.‘‘விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அமைப்பான அபீடா, (APEDA-The Agricultural and Processed Food Products Export Development Authority) 1986-ம்ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ், புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்புக்கு மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கவுகாத்தி, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா... உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ளவர்கள், பெங்களூரு மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.ஏற்றுமதி எண்ணத்தில் இருப்பவர்களுக்குத் தேவையானத் தகவல்களைக் கொடுத்தும், தேவைப்பட்டால், விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியும் செய்வதுதான், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். காய்கறி, பழங்கள், பூக்கள், பதப்படுத்தப்பட்டப் பழச் சாறுகள், அரிசி, கோதுமை, நிலக்கடலை, வெல்லம்... கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, எருமை இறைச்சி, பால் பொருட்கள், இயற்கைத் தேன்... என்று ஏற்றுமதிக்கு ஏற்றப்பொருட்களையும் அவற்றை எந்த நாடுகளுக்கு, எந்த நிறுவனத்துக்கு அனுப்பலாம் என்றும்கூட, ஆலோசனை வழங்கி வரு கிறோம்.ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை ‘இரண்டு வகையாகப் பிரித்துள்ளோம். வியாபார ரீதியில் செயல்படு பவர்களை, ‘வியாபார ஏற்றுமதியாளர்கள்’ என்றும், விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளை, ‘உற்பத்தி ஏற்றுமதியாளர்கள்’ என்றும் அழைக்கிறோம். இரு வகையினருமே, முதலில் அபீடா வில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இதற்கு ஏற்றுமதியாளர்-இறக்குமதியாளர் குறியீட்டு எண், வருமான வரி கணக்கு எண் (பான்) மற்றும் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரின் சான்று ஆகியவை இதற்குத் தேவைப்படும். குறியீட்டு எண் பெறுவதற்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தை அணுக வேண்டும். இதுகுறித்த விவரங்களை http://dgft.delhi.nic.in/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தனியார் நிதி ஆலோசகர்களை அணுகினால், வருமானவரி கணக்கு எண் பெற்றுத் தருவார்கள். முறைப்படி அபீடாவில் பதிவு செய்துகொண்ட பிறகு, ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் எங்கள் அலுவலகத்திலிருந்து, தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.தொடர்புக்கு, Regional Incharge, Agricultural and Processed Food Products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore-560 020 Telephone 080-23343425 / 23368272. Fax 080-23364560.

Tuesday, 4 November 2014

மெனக்கெட்டா..... மேலும் லாபம்!

கீரையைவிட விதையிலதான் லாபம்...தண்டுக்கீரை 90 நாளில் அறுவடை..சிறுகீரை 60 நாளில் அறுவடை..ஏக்கருக்கு 35 ஆயிரம் வருமானம்.."யானை கட்டி, மாடு கட்டி போரடிச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. கார், லாரி, பஸ்னு பறக்கிற தார் ரோட்ல விளைச்சலைக் கொட்டி போரடிக்கிற காலமுங்க இது"வெயில் தகித்துக் கொண்டிருக்கும் தார் சாலையில் காயும் தண்டுக் கீரைக் கட்டுகளை உதறியபடி, கிண்டலாகவே பேசினார் விவசாயி பாலு.இடம் விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ள மாத்தூர் கிராமம்.தண்டுக்கீரை, சிறுகீரை விதைகள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக முன்னிலையில் நிற்கிறது இப்பகுதி. முட்டத்தூர் நகர், திருவதிகுன்னம், ஒட்டம்பட்டு, நங்காத்தூர், வேட்டவலம், ஏந்தல், கீழ்நாத்தூர் உள்ளிட்ட திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதியிலிருக்கும் கிராமங்களில், பல நூறு ஏக்கர்களில் கீரை விதை உற்பத்தி ஜரூராக நடக்கிறது.மெனக்கெட்டா மேலும் லாபம்!"போட்டது விளையும் வளமான செம்மண் பூமி. போதுமான பாசன வசதி. ரெண்டும் சரியா கிடைக்கிறதாலதான், தொடர்ந்து கீரை விதையை உற்பத்தி செய்ய முடியுது" என்று சொன்ன பாலு,"காத்து மாதிரி கார், லாரி பறக்கிற ரோடு. வாங்க இப்படி ஓரமா நின்னு பேசுவோம்" என்றபடி வேப்பமர நிழலுக்கு அழைத்துச் சென்றார்."தண்டுக்கீரை, சிறுகீரை, அரைக்கீரைனு மகசூல் நல்லாவே நடக்குது. ஆனா, 'விதைச்சோமா... 25, 30 நாள்ல அறுத்து வித்தோமா'னுதான் பலரும் இருக்கறாங்க. கீரையை மட்டும் விளைவிச்சிக்கிட்டிருந்தா வருமானமும் கம்மி. வேலையும் கம்மி. ஆனா, மெனக்கெட்டு முயற்சி செஞ்சா இன்னும் லாபம் பாக்கலாம்னு நினைக்கிற ஆளுங்க நாங்க. அதனாலதான் கீரையைவிட விதை உற்பத்தியில வருமானம் அதிகம்கிறத உணர்ந்து பதினஞ்சி வருஷமா விதை உற்பத்தியில இந்தப் பகுதி விவசாயிங்க தீவிரமா ஈடுபட்டுக்கிட்டிருக்கோம். லாபம் கிடைக்கறது ஒருபக்கம் இருக்க... விவசாயத்துக்கு அடிப்படையான விதைகளை உற்பத்தி செய்ற புனிதமான வேலையைச் செய்றோமேங்கற தனி சந்தோஷம் இன்னொரு பக்கம்" என்று பெருமையாகச் சொன்னவர்,"மூணு ஏக்கர்ல தண்டுக்கீரை போட்டிருந்தேன். அதைத்தான் இப்போ காய வெச்சி உதறிக்கிட்டிருக்கேன். என்னோடது மணல் கலந்த செம்மண் நிலம். கிணத்துப் பாசனம். குடிக்கிற சுவையில தரமான தண்ணீர் இருக்கு. அதனால விளைச்சலுக்குக் குறைவில்லாம காலம் ஓடிக்கிட்டிருக்கு" என சுயவிவரங்கள் சொல்லி முடித்து, சாகுபடி விவரங்களை 'சலசல'வென கொட்டத் தொடங்கினார்.


ஏக்கருக்கு நாலு கிலோ விதை...அடர் விதைப்பு ஆகாது!கீரை விதை உற்பத்திக்கு கார்த்திகைப் பட்டம்தான் உகந்தது. டிராக்டர் உழவு ஓட்டி, ஏர்கலப்பையால் பார் உழவு ஓட்ட வேண்டும். நன்கு புழுதியாக உழவுகளை ஓட்டி, ஆறடிக்கு, எட்டடி பாத்திகளை அமைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ தண்டுக்கீரை விதைகளை, ஐந்து கிலோ மணலில் கலந்து பரவலாக பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். இந்தக் கீரை செழிப்பாக, உயரமாக வளரும் குணமுடையது. எனவே, அடர் விதைப்புக் கூடாது. மணல் கலந்து விதைத்த பின், முள் கொத்து மூலம் பாத்திகளை ஏகமாக நிரவி விடுதல் அவசியம். முள் கொத்தை இடம், வலமாக இழுத்துவிடும்போதுதான் விதை நன்றாக மண்ணில் பதியும். நாமே விதை உற்பத்தி செய்தாலும், நம் நிலத்தில் விதைக்கும்போது, வேறொரு நிலத்தில் விளைந்த விதைகளை வாங்கி விதைத்தால்தான் தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.ஏக்கருக்கு நாலு கிலோ விதை...அடர் விதைப்பு ஆகாது!கீரை விதை உற்பத்திக்கு கார்த்திகைப் பட்டம்தான் உகந்தது. டிராக்டர் உழவு ஓட்டி, ஏர்கலப்பையால் பார் உழவு ஓட்ட வேண்டும். நன்கு புழுதியாக உழவுகளை ஓட்டி, ஆறடிக்கு, எட்டடி பாத்திகளை அமைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ தண்டுக்கீரை விதைகளை, ஐந்து கிலோ மணலில் கலந்து பரவலாக பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். இந்தக் கீரை செழிப்பாக, உயரமாக வளரும் குணமுடையது. எனவே, அடர் விதைப்புக் கூடாது. மணல் கலந்து விதைத்த பின், முள் கொத்து மூலம் பாத்திகளை ஏகமாக நிரவி விடுதல் அவசியம். முள் கொத்தை இடம், வலமாக இழுத்துவிடும்போதுதான் விதை நன்றாக மண்ணில் பதியும். நாமே விதை உற்பத்தி செய்தாலும், நம் நிலத்தில் விதைக்கும்போது, வேறொரு நிலத்தில் விளைந்த விதைகளை வாங்கி விதைத்தால்தான் தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.


90 நாட்களில் 200 படி மகசூல்!விதைத்த பிறகு, பாத்தி நிறையும் அளவு உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்று நாள் கழித்து அடுத்த தண்ணீர். தொடர்ந்து வாரம் ஒரு தண்ணீர் அவசியம். மொத்தம் 90 நாட்களில் விதைக்கான சாகுபடி முடிந்துவிடும். அடியுரமாக டி.ஏ.பி. 2 மூட்டை இறைத்துவிடவேண்டும்.சாறு உறிஞ்சும்பூச்சிகள், அசுவனி மற்றும் தண்டு துளைப்பான் ஆகியவை கீரையை அதிகமாக தாக்கும். இதற்கு டைமோதேட் 250 மில்லியை 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இது முதல் தெளிப்பு. விதைத்த 20 நாட்களுக்குள் இதைத் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் மோனோகுரோட்டபாஸ் 500 மில்லியை 100 லிட்டர் நீரில் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் தெளித்தால்... பச்சைப்புழு கட்டுப்படும்.20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுப்பது அவசியம். 40-ம் நாளில் பொட்டாஷ் ஒரு மூட்டையோடு, ஒரு மூட்டை யூரியாவைக் கலந்து கொடுக்கலாம். அப்பொழுதுதான் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் சீராகக் கிடைத்து, செடிகள் 'தளதள'வென செழிப்பாக வந்து சேரும்.90 நாட்களில் கதிர்முற்றி, கேழ்வரகு கதிர் போல காய்ந்து நிற்கும். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய பத்து ஆட்கள் தேவைப்படும். அறுவடை செய்த கதிரை மூன்று நாள் நிலத்திலேயே காயவிட வேண்டும். பிறகு கத்தையாகக் கட்டி, வாகனங்கள் செல்லும் தார் ரோட்டில் பரப்பிவிட வேண்டும். வாகனங்களின் சக்கரங்கள் கீரைச் செடிகளின் மீதேறிச் செல்லும்போது, விதைகள் தனியாக பிரிந்து வந்துவிடும். காலையில் சாலையில் பரப்பினால், மாலையில் அள்ளிக் கட்டிவிட வேண்டும்.சாகுபடி தொழில்நுட்பங்களை சொல்லி முடித்த பாலு, பதர் தூற்றும் பணியைச் செய்யும்படி ஆட்களை ஏவிவிட்டார். தார்ரோட்டில் பதரும், விதையுமாகப் பரவிக்கிடந்ததை, ஆட்கள் சிலர் அள்ளிக் கொடுக்க... அதைக் கைப்பற்றி பதர் தூற்றும் பணியை ஆரம்பித்தனர் சில பெண்கள்.


படி இருநூறு ரூபாய்!நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த பாலு, ‘‘இப்படி தூற்றின பிறகு, ஒரு படுதாவை விரிச்சி, புடைச்சி, சல்லடையில போட்டு சலிச்சிட்டா... விதை தயார். சராசரியா ஒரு ஏக்கருக்கு 90 நாள்ல எப்படியும் 200 படி மகசூல் கிடைக்கும் (இவர்கள் பயன்படுத்தும் படி என்பது கிட்டத்தட்ட 2 கிலோ).இன்னிய தேதியில, 'படி 200 ரூபாய்'னு வியாபாரிங்க கொள்முதல் செய்யறாங்க.. எங்க ஊர்ல இன்னும் பழைய முறையிலதான் விற்பனை நடக்குது. தராசு வெச்சு எடை எல்லாம் போடுறது கிடையாது. ஆனா, வாங்கிட்டு போற ஏவாரிங்க கிலோவுலதான் விக்கிறாங்க. பெங்களூரு, மைசூர், சென்னை, அரக்கோணம்னு பல ஊருங்களுக்கு இந்த விதைங்க போகுது" என்றார்.சீக்கிரமா விளைஞ்சிடும் சிறுகீரை!அடுத்து, திருவதிகுன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணாவைச் சந்தித்தோம். இவர் உற்பத்தி செய்வதுசிறுகீரை விதைகள்."சிறுகீரைக்கு கார்த்திகைப் பட்டம்தான் நல்லது. ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் தொழுவுரம் போட்டு, டிராக்டர் உழவு இரண்டு முறையும், ஏர் உழவு ஒரு முறையும் ஓட்டினேன். அப்புறமா எட்டடிக்கு, எட்டடி பாத்தி அமைச்சேன். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். அதை 5 கிலோ மணல்ல கலந்து பாத்திகள்ல அடர்த்தியா தூவி விதைச்சேன். மேற்கொண்டு பராமரிப்பெல்லாம் தண்டுக்கீரைக்கு செய்றது மாதிரிதான். 55 முதல் 60 நாள்ல அறுவடை செஞ்சிடலாம். சிறுகீரை விதைக்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. அதனால விலையும் அதிகமா கிடைக்கும். ஒரு படி 300 ரூபாய்க்கும்கூட போகும். இப்போதைக்கு 240 ரூபாய்க்கு போய்க்கிட்டிருக்கு" என்றவர்,புரூடோனியாவை விரட்ட முடியலையே!"கீரையைப் பொறுத்தவரை பூச்சித் தொல்லைதான் பெருசா இருக்கு. சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ இதெல்லாம் சேர்ந்து இலையைச் சுரண்டி, செடிங்கள காலி பண்ணிடும். அதனால, 20, 40ம் நாள்ல ரெண்டு முறை பூச்சிக்கொல்லி கட்டாயம் தெளிக்கணும்.ஆனா... இந்த புரூடோனியா புழுனு ஒண்ணு இருக்குதே... அதுங்க மட்டும் எந்த பூச்சிக்கொல்லிக்கும் முழுசா அழியாம, கூட்டம் கூட்டமா உற்பத்தியாகி, செடிங்கள மேய்ஞ்சி அழிச்சிடுது. செடிங்க நல்லா வளர்ச்சியில இருக்குதேனு பார்த்தா, திடீர்னு சுத்தமா காய்ஞ்சி போயிடும். தண்டுதுளைப்பான் பண்ற வேலை இது. எந்தப் பூச்சிமருந்து தெளிச்சும் வேலைக்கு ஆகல" என்று கவலையை வெளிப் டுத்தினார் கிருஷ்ணா.


புரூடோனியா புழுவுக்கு தீர்வு!'கிருஷ்ணாவை வாட்டி எடுக்கும் புரூடோனியா புழுவுக்குத் தீர்வு சொல்லியாக வேண்டுமே..' என்றபடி, ஈரோடு மாவட்டம், கொடுமுடி, முத்தூர் கிராமத்தில் ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்தைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கும் ஈஸ்வரி முத்துச்சாமியிடம் பேசினோம். "இவ்வளவுதானே... நான் சொல்ற இயற்கை வைத்தியத்தையெல்லாம் தவறாம கடைபிடிக்கச் சொல்லுங்க. அவரோட கஷ்டம் தீர்ந்துடும். ஆனா, ஆரம்பத்துல இருந்தே எல்லாத்தையும் இயற்கை முறையில செய்யணும்கிறதுல கவனமிருக்கணும். அப்பத்தான் இயற்கை முறை விவசாயம் கைகொடுக்கும். குறிப்பா தொழுவுரத்துல இருந்து ஆரம்பிக்கணும். விதைங்களும் நேர்த்தி செய்யப்பட்டதா இருக்கணும்" என்றபடி, இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறைகளைச் சொன்னார்.அக்னி அஸ்திரம் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது, புரூடோனியா புழு, பச்சைப் புழு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.பூச்சிவிரட்டி நொச்சி, எருக்கு, ஊமத்தை, பப்பாளி, வேம்பு இது போன்ற ஆடு தின்னா தழைகள் ஏதாவது ஐந்தை தலா ஒரு கிலோ சேகரித்து, ஒன்றாக இடித்துக் கொள்ளவேண்டும். அதை, பழைய மண்பானையில் போட்டு, மூழ்கும் அளவுக்கு பசுமாட்டுச் சிறுநீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பிறகு, வேடு கட்டி வைத்து மூன்று நாள் கழித்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 முதல் 500 மில்லி கலந்து வாரம் ஒரு தடவை தெளித்தால் தண்டுதுளைப்பான், வேர்ப்புழு உள்ளிட்டவை கட்டுப்படும்.எச்சரிக்கை, மேற்சொன்ன இரண்டு பூச்சி விரட்டிகளையுமே 500 மில்லிக்கு அதிகமாக சேர்த்தால் பயிர்கள் கருகிவிடக்கூடிய வாய்ப்புள்ளது.ஈஸ்வரி முத்துச்சாமி கொடுத்த இயற்கை ஆலோசனைகளை அப்படியே, கிருஷ்ணாவின் காதுகளில் போட்டோம்."ரொம்ப ரொம்ப நன்றிங்க. ஏற்கெனவே நீங்க எங்கள பார்த்து இயற்கை முறை விவசாயத்தை முயற்சி செஞ்சி பார்க்கவேண்டியதுதானேனு கேட்டீங்க. அதைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டே இருக்கோம். அடுத்த போகத்துக்கு தொழுவுரமெல்லாம் சொல்லி வச்சிட்டேன். இப்ப நீங்க கேட்டுச் சொல்லியிருக்கற இந்த ஆலோசனைகளை அப்படியே குறிச்சி வெச்சிக்கிறேன். அடுத்தத் தடவை நீங்க இந்தப் பக்கம் வந்தா... என்னோட வயல்ல  இயற்கை முறை விவசாயம் கண்டிப்பா இருக்கும்" என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

"இயற்கை விதைக்கு இருக்கு கிராக்கி!"இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கீரை விதைகளை வாங்கி, விற்பனை செய்யும், விதை வியாபாரி கந்தனிடம் விற்பனை குறித்து கேட்டபோது, "சீசனுக்கு 25 டன் வரைக்கும் சிறுகீரை விதை இந்தப் பகுதியில உற்பத்தியாகுது. நேரடியா கொள்முதல் செஞ்சி, வேன்ல ஏத்தி பெங்களூரு, சென்னை, அரக்கோணம், ஒட்டன்சத்திரம் பகுதியில இருக்கிற சில்லறை விதை வியாபாரிங்களுக்கு அனுப்பறோம். எனக்கு தெரிஞ்சவரைக்கும் தமிழ்நாட்டுல இந்த செஞ்சி பகுதி விவசாயிங்கதான் அதிக அளவுல விதை உற்பத்தி செய்யறாங்க.மைசூரு, பெங்களூருனு விதைகளை விற்கப் போற இடத்துல, நிறைய விவசாயிங்க, 'ரசாயன பயன்பாடு இல்லாத விதை கிடைக்குமா?'னு ஆர்வத்தோட கேட்கறாங்க. நானும் தேடிகிட்டே இருக்கேன்... கிடைக்க மாட்டேங்குது. இயற்கை முறையில் தயாராகுற விதைக்கு நல்ல மார்க்கெட் இருக்கு'' என்று சொன்னார்.

பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு!

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்' என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்' என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள்.’குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது' என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்' என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்... பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய பாரம்பர்ய அறிவியல் நிலையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள். நம் மண்ணுக்கே உரிய பாரம்பர்ய அரிசி ரகங்களை உடல் ஆரோக்கியத்துக்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த அரிசி ரகங்களைப் பரிந்துரைக்கிறது... இந்த ஆராய்ச்சி முடிவுகள்.சமீபத்தில் சென்னையில் இதற்கென நடந்த பயிற்சிப் பட்டறையில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கல்லூரி மாணவிகள் என பலர் பங்கேற்றனர். இதை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பாரம்பர்ய அறிவியல் நிலையத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியம் பேசும்போது, ”உடல் ஆரோக்கியத்துக்கான நெல் ரகங்கள் பற்றி தேடியபோது, ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் சுமார் 300 வகையான ரகங்கள் பற்றிய பட்டியல் கிடைத்து ஆச்சர்யமானோம். ”வறட்சியான பகுதியில் விளையக்கூடிய நெல் ரகங்கள், எளிதாக செரிமானமாகிவிடும். அதிக நீர் தேங்கும் பகுதியில் விளையும் நெல் ரகங்கள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கினால், 6 மாதங்கள் கழித்தே பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 மாசங்கள் கழித்தாவது பயன்படுத்த வேண்டும். கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது' என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன'' என்று பெருமையோடு சொன்னார்.              அரிசி ரகங்கள் ஆய்வுகள் குறித்துப் பேசிய எத்திராஜ் மகளிர் கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியர் மேனகா, ”இந்த ஆய்வுக்கு கருங்குறுவை, நீலம்சம்பா, காலா நமக், குள்ளகார், பெருங்கார், மாப்பிள்ளைச் சம்பா, குடவாலை, கவுனி ஆகிய 8 பாரம்பர்ய ரகங்களை எடுத்துக்கொண்டோம். ஒப்பீட்டு ஆய்வுக்காக இன்று மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளைப் பொன்னி அரிசியையும் எடுத்துக்கொண்டோம். ஆய்வின் முடிவுகள், பாரம்பர்ய நெல் ரகங்களைக் கொண்டாட வைக்குமளவுக்கு இருக்கின்றன. உதாரணமாக... கருங்குறுவை ரகத்தில், வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. நீலம்சம்பா ரகத்தில் கால்சியம் கூடுதலாக உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இதற்குப் பதிலாக நீலம்சம்பா அரிசியை சாப்பிடப் பரிந்துரைக் கும் அளவுக்கு, இதில் கால்சியம் சத்து உள்ளது. எங்கள் ஆய்வின் முடிவுகள், ஆயுர்வேதம், சித்தா இரண்டிலுமே ஏற்கெனவே இருக்கும் குறிப்புகளுடன் பொருந்திப் போவது ஆச்சர்யமே! பொதுவாக வீடுகளில் நாம் பயன் படுத்தும் அரிசி வகை களில் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப் படுத்தும் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் வயிற்றில் இருக்கும் போது சராசரியாக 80 -  90 என்ற அளவில்தான் சர்க்கரை யின் அளவு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வில் பங்குபெற்ற மாணவிகளுக்கோ... 100க்கு மேல் இருந்தது'' என்றவர்,''நமது உடல், பெரும் பெரும் நோய்களுக்கு இலக்காவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவைதான் பாரம்பர்ய ரக அரிசிகள் என்று தெரிந்தபிறகு, அவற்றை நாடாமல் இருப்போமா என்ன?!''  என்கிற பாஸிட்டிவ் கேள்வியுடன் முடித்தார் மேனகா.

Sunday, 2 November 2014

தொடர் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியதாவது: பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை.ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடிப்படைத் தத்துவங்கள்: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.கோழி வளர்ப்பு: ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.மீன் குட்டையில் கோழி வளர்ப்பு: கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.சிப்பிக்காளான் வளர்ப்பு: நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர்ச்சக்கை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக உள்ளது. இதனால் குறைந்த செலவில் காளான் உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.ஆனால் உற்பத்தி செய்யும் காளான்களை அன்றன்றே விற்பனை செய்து விட வேண்டும்.கறவை மாடு வளர்ப்பு: மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கும் மணிகள், தட்டு மூலமாகவும் பசுந்தீவனங்கள் மூலமாகவும் விவசாயிகள் 2 முதல் 3 கறவை மாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் அதிக வருமானம் பெறலாம்.காடை வளர்ப்பு: 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறைக்கு 500 காடைக் குஞ்சுகள் என்ற அளவில் வளர்த்தால் மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம்.நெல் வயலில் மீன் வளர்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் நடுத்தர, அதிக வயதுடைய ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது.நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் அதிக வருமானம் பெற நெல் வயலில் மீன் வளர்ப்பு உதவிகரமாக இருக்கும்.இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்துவதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கலாம்.மீன் கழிவுகள் வயலுக்கு உரமாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். வடகிழக்கு பருவமழை காலத்துக்குப் பின் சம்பா, தாளடி பருவத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீன்வளர்ப்புக்கு வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ரகங்கள் மிகவும் ஏற்றவை.நெல் வயலின் வரப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆழமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் அமைத்து அதில் மீன்களை வளர்க்கலாம்.நெல் வயலில் கால்வாயை விட்டுவிட்டு மற்ற நடு பகுதியில் நெல்பயிர் நாற்றை வரிசைக்கு வரிசை 25 செ.மீ, செடிக்கு செடி 25 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளியில் நடவு செய்வதால் மீன்கள் வயலின் நடுபகுதிகளுக்கு சென்று இறைத் தேட வசதியாக இருக்கும். நெல் வயலில் நீர்விடும் பகுதி, நீர் வெளியேற்றம் பகுதியில் வலைகள் அமைத்து மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.நெற்பயிர் நடவு செய்தவுடன், நெல்வயலில் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. நீர் அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நெல் நடவு செய்யப்பட்டு 5 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை வயலில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் நெற்பயிறுக்கு தழைச்சத்து கிடைப்பதுடன், அது மீன்களுக்கு நல்ல உணவாகவும் இருக்கும்.நெல் நடவுக்குப் பின் 15 நாள்கள் கழித்து ரோகு, கட்லா, மிர்கால் போன்ற மீன் குஞ்சுகளை ஏக்கர் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 வரை கால்வாயில் இருப்பு செய்யலாம்.வாரம் ஒரு முறை மாட்டுச் சாணம், கிளைரிசிடியா தழைக் கட்டுகளை நெல் வயலில் உள்ள கால்வாயில் போட வேண்டும். இது மீன்களுக்கு சிறந்த உணவாகும்.மேலும் வயலில் உள்ள அசோலா, களைகள், நெற்பயிறுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் (விளக்கு பொறி வைப்பதால்) மீன்களுக்கு இறையாக கிடைக்கின்றன. நெல் வயலில் மீன்கள் வளர்க்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்க கூடாது. இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் மருந்துகளான வேப்ப எண்ணெய், பஞ்ச காவ்யா, இழைச்சாறு ஆகியவற்றை தெளிக்கலாம். நெல் முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிரின் நடுவே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கால்வாயில் மட்டுமே நீர் நிறுத்த வேண்டும். நெல் அறுவடை செய்தவுடன் கால்வாயில் உள்ள நீரை வடிகட்டி விட்டு மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம். நெல் வயலில் இருப்பு செய்யப்பட்ட மீன்கள் 5 மாதத்தில் 500 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக வளரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ முதல் 500 கிலோ வரை மீன்களைப் பெறலாம்.மேலும், விவரங்களுக்கு, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745237 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Thursday, 23 October 2014

ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!

‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’கைகொடுக்கும் கண்வலி கிழங்கு‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால்,‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும்.ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’!நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. ஆகவே, கிராமப்புறத்து காடு, மேடுகளில் எவர் இந்தச் செடியைக் கண்டாலும் ஆவேசம்கொண்டு வெட்டித்தள்ளி விடுவார்கள். இது... பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. இன்றோ, பல விவசாயிகளை தலைநிமிர்ந்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் விளைச்சல் அதிகம். வெள்ளம் மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக பிற பகுதிகளில் விளைச்சல் குறைந்துவிட, வேதாரண்யம் பகுதியில் விதைகளை வாங்க ஏக போட்டி.‘எங்களிடம் விதைகளை விற்றால் கிலோவுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும்’ என்று கவர்ச்சிகரமான நோட்டீஸ்களை விநியோகித்து, போட்டிப் போட்டு விதைகளை வாங்கியுள்ளனர் விதை முகவர்கள். புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ‘‘எனக்கு நிலம், நீச்சு ரொம்பக் கிடையாது. மேட்டுக்காடாயிருந்த கொஞ்ச நிலத்தை வெட்டி சமப்படுத்தி மூணு வருஷமா கார்த்திகை கிழங்கு பயிரிடுறேன். ரெண்டு வருஷத்துக்கு முந்தி பொண்ணைக் கட்டிக் கொடுத்த கல்யாண கடன் அப்படியே இருந்துச்சு, இந்த வருஷம் விதை நல்ல விலைக்குப் போனதால் கடனை மொத்தமா அடைச்சுட்டேன்’’ என்று நெகிழ்ந்து போனவராகச் சொன்னார்.இதே கிராமத்தின் ஜெயலட்சுமி, ‘‘என் வீட்டுக்காரர் மலேசியா போய் சரியா வேலை கிடைக்காம திண்டாடினாரு. இங்க ரெண்டு பிள்ளைகளை வெச்சுகிட்டு குடும்பம் நடத்த ரொம்பவே சிரமப்பட்டேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்களைப் பார்த்து கார்த்திகை கிழங்கு போட்டேன். முறையா கவனிச்சதால எனக்கு நல்ல லாபம். அந்த பணத்தை வெச்சி புதுசா நிலம் வாங்கியிருக்கேன்’’ என்றார் உற்சாகத்துடன்.தீவிர விவசாயியான சாமிநாதன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.‘‘கடலோர மணற்பாங்கான பகுதி என்பதால் இங்கு தென்னை, மா, முந்திரிதான் அதிகம். இப்பொழுது எல்லோரும் கார்த்திகை கிழங்கு சாகுபடியில் இறங்கிவிட்டனர். பொதுவாக மணற்பாங்கான இடங்களிலும், செம்மண் பூமியிலும் கார்த்திகை கிழங்கு நன்கு வளர்கிறது. தண்ணீர் தேங்காத, நல்ல வெயில் உள்ள மேட்டுப் பகுதியிலேயே இதைச் சாகுபடி செய்யவேண்டும். கிழங்கு விதைப்பதற்கு முன் சில ஆயத்த வேலைகள் உள்ளன. எவ்வளவு இடத்தில் சாகுபடி செய்யப்போகிறோமோ அந்த இடத்தில் முதலில் பந்தல் போடவேண்டும். கொடி படர்வதற்காக பாகல், புடலைக்கு பின்னுவதுபோல பந்தல் மீது குறுக்கு நெடுக்கில் கயிறு மூலம் பின்னல் அமைக்க வேண்டும். பிறகு 75 செ.மீ. இடைவெளியில் குச்சிகளை நட்டு, பாத்தி அமைத்து உரமிட்டு தண்ணீர் விடவேண்டும்.ஆயத்தப் பணிகள் முடிந்தபின் கிழங்கை இரண்டாக ஒடித்து ஒவ்வொரு குச்சிக்கு அருகிலும் மூன்று அங்குல ஆழத்தில் விதைக்கவேண்டும். பெரிய கிழங்கு எனில் குச்சிக்கு இரண்டும், சிறிய கிழங்கு என்றால் மூன்றும் விதைக்கலாம். தொடர்ந்து ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். விதைத்த பதினைந்தாவது நாள் முளை விடும். சில சமயம், முளை வந்த கிழங்குகளை விதைப்பதும் உண்டு. செடி வளர ஆரம்பித்ததும் குச்சியோடு சேர்த்துக்கட்டி பந்தலில் விட்டால் கொடியாகப் படரும். மூன்றாவது மாதத்தில் பூ பூக்கும். ஆறாவது மாதத்திலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். ஒன்பதாவது மாதம் வரை விளைச்சல் இருக்கும்’’ என்றார் சாமிநாதன்.தோண்டி எடுத்த கிழங்குகளை இரண்டாக ஒடித்து அடுக்கிக் கொண்டிருந்த சிவஞானம், ‘‘மலேசியாவில் வேலை பார்த்துகிட்டிருந்த நான் கார்த்திகை கிழங்குப் பற்றி கேள்விப்பட்டதும், வேலையை உதறிட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வருஷம் அமோக விளைச்சல்’’ என்றபடியே நோய்த் தாக்குதல் பற்றி சொன்னார்.‘‘பச்சைப் புழுவும், கம்பளிப் புழுவும்தான் கார்த்திகைச் செடிக்கு எமன்கள். இலைகளின் அடிப்பகுதியில் பச்சைப் புழுக்களின் முட்டைகள் இருக்கும்பொழுதே கவனித்து அழித்துவிட வேண்டும். செடி பந்தலை அடையும் வரை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். பச்சைப் புழுக்களைக் கவனிக்காமல் விட்டால், நூற்றுக்கணக்கில் பெருகி ஒரே இரவில் நுனிக்குருத்தை கபளீகரம் செய்துவிடும். அப்புறம் அந்தச் செடி வளராது, பூக்காது. பூச்சி மருந்துகளை மாதத்துக்கு மூன்று முறை வீதம் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அடிக்க வேண்டும்.ஆவணிமாத இறுதியில் விதைப்பைத் தொடங்கலாம். கார்த்திகை மாதத்தில் பூ பூக்கும். அதனாலயேதான் இதற்கு கார்த்திகை பூ என்ற பெயரும் இருக்கிறது. ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். புதிதாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய சுமார் 500 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். இத்துடன் கம்பு, கயிறு, ஆள் செலவு, உரம், மருந்து எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வரை செலவாகும். ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை விதைகள் மகசூலாகக் கிடைக்கும். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டால் இந்த அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது. விதைக்கிழங்கு மூலமாகவும் உபரி வருமானம் கிடைக்கும். ஆகக்கூடி மூன்று முதல் நான்கு லட்சம் வரை லாபம் பார்க்கலாம்’’ என்றார்.செம்போடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், விதைகளை வாங்கும் முகவராகவும் இருக்கிறார். அவர், ‘‘கார்த்திகைக் கிழங்கு, கண்வலி கிழங்கு, குரங்குப்பூ என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவப் பயிர். சென்ற ஆண்டு கிலோ ஐநூறு ரூபாய்க்கு விதைகளை வாங்கினோம். இந்த ஆண்டு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு வாங்கியுள்ளோம்.அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது'' என்று சொன்னவர்,''இந்தப் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்தால் கூடுதல் லாபம் பார்க்கமுடியும். வேதாரண்யம் பகுதியில் கடற் காற்று அதிகமாக இருப்பதால் மகரந்தசேர்க்கை தானாகவே நடந்துவிடுகிறது. ஆனால், மற்ற இடங்களில் அது அவ்வளவாக நடப்பதில்லை. அதனால் ஒருசெடியிலிருக்கும் பூவிலிருந்து எடுத்து, மற்றொரு செடியிலிருக்கும் பத்து பூக்களுக்கு மகரந்த சேர்க்கை செய்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். சாகுபடியோடு தேனீ வளர்ப்பையும் மேற்கொண்டால் அயல் மகரந்த சேர்க்கைக்கு வசதியாக இருக்கும்.ஒரு முறை நடவு செய்தால், எட்டு முறை கூட மகசூல் பார்க்கலாம். ஆனால், வேதாரண்யத்தைப் பொறுத்தவரை மணற்பாங்கான பூமி என்பதால், ஒவ்வொரு முறையும் புதுக்கிழங்குதான் விதைக்கப் படுகிறது. அப்படியே விட்டுவைத்தால், வெப்பத்தின் காரணமாக கிழங்கு வீணாகிவிடும் என்பதுதான் காரணம்.ஆரம்பத்தில் சேலம் பகுதியில் அதிக அளவில் இது பயிராகி பலரையும் வாழ வைத்தது. ஒரு கட்டத்தில் திடீரென விலை வீழ்ந்துபோகவே, அதை விவசாயிகள் கைவிட்டனர். பத்து ஆண்டு களுக்குப் பிறகு தற்போதுதான் விலை உயர்ந்தி ருக்கிறது. அதனால் தற்போது சாகுபடி பரப்பும் கூடியிருக்கிறது. எனவே வரும் காலத்தில் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், மழை வெள்ளம் காரணமாக ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்பட்டால் விலை உயரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, விவசாயிகள் நாலும் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு பயிரிடுவது நல்லது'' என்று சொன்னார். (தொடர்புக்கு செல்: 94423-99141, 04369-276121).

Thursday, 9 October 2014

கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்: சிவகங்கை சாதனை விவசாயி

முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு "வாக்கிங்' செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, "கீரை கட்டுகளை' வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது; கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம். நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன். ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து, "கண் இமையை' பராமரிப்பது போல் முறையாக கவனித்து வரவேண்டும்.ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும். இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.மாதம் ரூ.45 ஆயிரம்: நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.ஆலோசனைக்கு- 97869 48567. என்.வெங்கடேசன், சிவகங்கை. 

வறட்சியிலும் அமோக லாபம்: நெல் சாகுபடியில் சாதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், "கைகொடுத்த' சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி.கடந்த ஆண்டில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் பயிரிடப்பட்ட நெல், போதிய மழையின்றி சாவியாகி வைக்கோல் கூட தேறவில்லை.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் குமிழேந்தலை சேர்ந்த விவசாயி ராஜகோபால், முற்றிலுமாக ரசாயன உரங்களை தவிர்த்தார். அவ்வப்போது பெய்த சாரல் மழையின் உதவியோடு மண்புழு உரம், மாட்டுச்சாணம், ஆட்டு புழுக்கைகளை உரமாக இட்டார்.வறட்சி நிலவிய நேரத்திலும் இவரது வயலில் உள்ள நெல் பயிர்கள் கருகாமல் மகசூலை எட்டியது. நான்கு ஏக்கரில் 50 மூடைகள்(ஒரு மூடை 60 கிலோ) நெல் கிடைத்தது.இவர் கூறியதாவது: எப்போதுமே விதைப்பிற்கு முன், மூன்று முதல் ஐந்து முறை நன்கு ஆழமாக நிலத்தை உழுதுவிட்டு, நெல்லை(டீலக்ஸ் பொன்னி ரகம்) மேலோட்டமாக விதைப்பேன். இயற்கை உரங்களோடு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாக்டிரியாபேஜ் ஆகியவை இட்டதால் நெல் கருகவில்லை.ஒரு மூடை ரூ.1650 வீதம், 50 மூடை நெல்லை 82 ஆயிரத்து 500க்கு விற்றேன். மிஞ்சிய வைக்கோலையும் ரூ.20 ஆயிரத்திற்கு விற்று, இதிலேயே சாகுபடி செலவையும் ஈடுகட்டிவிட்டேன்.மகசூல் நேரத்தில் லேசான மழை பெய்திருந்தால், ஏக்கருக்கு 50 மூடை வீதம் 200 மூடைகள் கிடைத்திருக்கும். அனைத்து விவசாயிகளும் அகலமாக உழுவதை விட, ஆழமாக உழ வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தினால் லாபம் அதிகம் கிடைக்கும், என்றார்.-கார்த்திகை ராஜா,ஆர்.எஸ்.மங்கலம். 

Thursday, 2 October 2014

அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றலுக்கு கிலோவுக்கு ரூ.75 முதல் ரூ.80 வரை விலை கிடைக்கும்

அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது விதைப்பு முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.உலகளவில் இந்தியா "மசாலா கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. 2012-13ஆம் ஆண்டில் மிளகாய் 7.93 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. உலக அளவில் மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36 சதவீதம்) முதன்மை நாடாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து சீனா (11 சதவீதம்), வங்கதேசம் (8 சதவீதம்), பெரு (8 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (6 சதவீதம்) ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது.இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 85-90 சதவீதம் உள்நாட்டு உபயோகத்திற்கும் மீதமுள்ள 10-15 சதவீதம் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தியாவிலிருந்து வற்றல் மிளகாய் இலங்கை, அமெரிக்கா, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.2011-12 இல் தமிழகத்தில் மிளகாய் வற்றலானது 56,442 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 24,640 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் (முண்டு), விருதுநகர் (சம்பா), தூத்துக்குடி (முண்டு), சிவகங்கை (சம்பா) மற்றும் திருநெல்வேலி (சம்பா, முண்டு) ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக, தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை துவங்கிய பிறகே (அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் இறுதி வரை) மிளகாய் விதைக்கப்படுகிறது.இந்தியாவில் மிளகாய் வரத்தானது நவம்பரில் தொடங்கி மே இறுதி வரை நீடிக்கும். இதில் முதல்வரத்து மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் நவம்பரில் தொடங்கும். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வரத்து நீடிக்கும்.தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி மற்றும் முதுகுளத்தூர் சந்தைக்கு பிப்ரவரி முதல் மே வரை அறுவடைக்கு வரும்.அனைத்து மாநிலங்களின் உற்பத்தி, குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் உற்பத்தி, தேவை மற்றும் ஏற்றுமதியை பொருத்தே மிளகாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தமிழகத்தில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வற்றல் குவிண்டாலுக்கு ரூ.6,500 - 8000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள், நடப்பு பருவத்தில் மிளகாய் பயிரிடலாமா அல்லது வேறு பயிர்கள் பயிரிடலாமா என்ற முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம், 18 ஆண்டுகளாக விருதுநகர் சந்தையில் நிலவிய விலையை ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில், 2015 பிப்ரவரி, மே மாதங்களில் அறுவடை செய்து சந்தைக்குப் புதிதாக வரும் மிளகாய் வற்றல் கிலோவிற்கு ரூ.75-80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மிளகாய் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003. தொலைபேசி- 0422-243 1405.தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ள பேராசிரியர் மற்றும் தலைவர், வாசனை மற்றும் நறுமணப் பொருட்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641 003. தொலைபேசி- 0422-661 1284.

இயற்கை விவசாயத்தின் முதல்படி: மண்புழு உரம்

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:மண்புழு உரத்தின் பயன்கள்: நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி: உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும்.அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும்.60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்: பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.மண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.இதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.50 - 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 - 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.பொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

மண்புழு உரம் - பரிந்துரைகள்
நெல், கரும்பு, வாழை - 2000 கிலோ ஏக்கர்மிளகாய், கத்தரி, தக்காளி - 1000 கிலோ ஏக்கர்நிலக்கடலை, பயறுவகைகள் - 600 கிலோ ஏக்கர்மக்காச்சோளம், சூரியகாந்தி - 1000 கிலோ ஏக்கர்தென்னைமரம், பழமரங்கள் - ஒரு மரத்துக்கு 10 கிலோமரங்கள் - 5 கிலோ மரம் ஒன்றுக்குமாடித் தோட்டம் - 2 கிலோ செடிக்குமல்லிகை, முல்லை, ரோஜா - 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்  (3 மாதங்களுக்கு ஒரு முறை)

Thursday, 25 September 2014

வேலிமசால் பசுந்தீவன சாகுபடியில் இரட்டிப்பு வருவாய்

தமிழகத்தில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைக்கிறதா? என்றால் இல்லை.இதனால், பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே அண்மை காலமாக பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியது:தமிழகத்தில் உள்ள 4 கோடி கால்நடைகளுக்கு 10 கோடி டன் பசுந்தீவனம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழத்தில் 50 முதல் 60 சதவீதம் அளவுக்கு பசுந்தீவனப் பற்றாகுறை உள்ளது.பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்க, அதிக மகசூல் தரும் தீவனப் பயிர்களை இறவையில் பயிரிட்டு ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் தீவன மகசூலை உயர்த்துவதாலேயே முடியும்.மேலும் புரதச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்க பயறு வகை பசுந்தீவனப் புற்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.இப்போது உள்ள மழை அளவைப் பார்க்கும்போது நெல், உளுந்து உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்வதைக் காட்டிலும் பசுந்தீவனப் புற்களை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்யும்போது இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும்.குறிப்பாக, வேலிமசால் பசுந்தீவனப் புல்லை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்தால், 1 ஏக்கருக்கு 100 கிலோ முதல் 110 கிலோ வரை விதை உற்பத்தி செய்யலாம்.இதைச் சாகுபடி செய்வதால் மண் வளம் மேம்படுத்தப்படும். பூச்சி, நோய் ஆகியன இந்தப் பயிரைத் தாக்குவதில்லை. குறைந்த நீரிலேயே சாகுபடி செய்துவிடலாம்.குறைந்த அளவு வேலையாட்கள் போதுமானதாகும். இதில் 19.2 சதவீதம் புரதம், 27 சதவீதம் உலர்த்தீவனத் தன்மை, 55.3 சதவீதம் செரிக்கும் தன்மையும் கொண்டுள்ளதால் கால்நடைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. எனவே பால், மாமிச உற்பத்தி பெருகுகிறது.

வேலி மசால் பசுந்தீவனம் குறித்த சிறு குறிப்பு:பருவம்: ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலம்: எல்லா மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். முன்செய் நேர்த்தி: நன்கு பன்படுத்தப்பட்ட நிலத்தில் 16-20 ச.மீ. பாத்திகள் அமைக்க வேண்டும்

. விதையளவு: ஹெக்டேருக்கு 20 கிலோ இடைவெளி: வரிசைக்கு வரிசை 50 செ.மீ. இடைவெளி விட்டு நெருக்கமாக விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதைகள் நன்றாக முளைக்க, கொதிக்க வைத்த குளிர்ந்த நீரில் விதைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி விட்டு நிழலில் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.

உர அளவு: ஹெக்டேருக்கு தொழு உரம் 20 டன், தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ.

 பின்செய் நேர்த்தி: விதைத்த 30 நாள்களுக்கு பின்பு ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் களை எடுக்கவும்.

நீர்ப் பாசனம்: 10-15 நாள்களுக்கு 1 முறை. அறுவடை: விதைத்த 80 நாள்களில் முதல் அறுவடையும், பிறகு 40-45 நாள்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.

மகசூல்: ஹெக்டேருக்கு 1 ஆண்டுக்கு 80 முதல் 100 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.வேலிமசால் குறித்த மேலும் விவரங்களை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சாகுபடி தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் பெ. முருகன்.வேலிமசால் பசுந்தீவன உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும்  காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன்.வேலிமசால் பசுந்தீவனம் விளைவிக்கப்பட்டுள்ள நிலம்.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்: வேளாண் துறை தகவல்

பூந்தமல்லி: நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்கவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.நாளுக்கு நாள் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வரும் வேளையில் விவசாயத்தின் அவசியம் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சீரிய திட்டங்களை உருவாக்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்:

 இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.



"அட்மா' திட்டம்:

 அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து பூந்தமல்லி வேளாண் உதவி இயக்குநர் டி.என்.உமாதேவி தினமணி செய்தியாளரிடம் கூறியது: "பூந்தமல்லி வட்டத்தில் ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.இதில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நெல் தவிர காய்கறிப் பயிர்கள், மலர்கள், சிறிய அளவில் பயறு, நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளின் நிலத்திலும் மண் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து "ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு' வழங்கப்பட்டு வருகிறது.அரசு வழங்கும் மானியத் திட்டங்களை விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என்றார்.

Thursday, 18 September 2014

மிளகாய் சாகுபடியில் அறுவடை பின் செய்நேர்த்தி

மிளகாய் வற்றலின் கூடுதல் விலை வற்றலின் சிவப்பு நிறத்தன்மை மற்றும் காரத்தன்மையைப் பொறுத்தே அமைகிறது. வற்றல் ""சிறப்புத்தரம்'' ""நடுத்தரம்'' மற்றும் ""பொதுத்தரம்'' என மூன்று தரங்களாகப் பிரிக்கப்படுகிறது. தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள் பின்வருமாறு.மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாணக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கள், ஹீலி யாத்திஸ் மற்றும் புருடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். சிபாரிசுப்படி பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நல்ல நிறமும் காரத்தன்மையும் அதிகரிக்கிறது.மிளகாய்ச் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களைக் காம்புடன் பறிக்க வேண்டும். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல் பரப்பிய களங்களில் பழங்களைப் பரப்பி உலரவிட வேண்டும். மிளகாய் பழங்களை மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலிலிருந்து காய்ப்புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.அறையின் ஈரம் மிளகாய்ப் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதாப் போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். தவறான சேமிப்பு முறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் இவற்றை நல்ல விலைக்கு விற்க முடியாது. மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கில் அமுக்காமல் அள்ளி வைத்து வற்றல் உடைந்து விடாமல் கொண்டு செல்ல வேண்டும்.





- முனைவர்கள் கி.இராமகிருஷ்ணன், வி.கு.பால்பாண்டி, இரா.கார்த்திக்மண்டல ஆராய்ச்சி நிலையம்,கோவிலாங்குளம்,அருப்புக்கோட்டை. 

பழத்தோட்டமான செம்மண் தரிசு நிலம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை.எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலில் மாதுளை கன்றுகளை வளர்த்தார். உரமிட இப்பகுதியில் உள்ள இலை, தழைகளை மட்டும் பயன்படுத்தினார். மாடுகளின் சாணத்தை மட்டுமே உரமாக இட்டார். மாடுகளுக்கு வழங்கும் உணவில் கூட ரசாயனம் கலந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் இவரது பழ உற்பத்திக்கு உலகளவிலான "ஆர்கானிக் சான்று' எளிதாக கிடைத்து விட்டது. ஐ.எஸ்.ஓ., சான்றும் கிடைத்து விட்டது. இதனால் அடுத்து பப்பாளி, மா, பலா, திராட்சை, முருங்கை, சப்போட்டா, எலுமிச்சை, தென்னை சாகுபடி செய்தார்.குவியும் ஆர்டர்கள்: எல்லாவற்றிற்குமே சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப் பாசனம் செய்தார். அதேபோல் வளமான, மாசற்ற இயற்கை கொடுத்த வரத்தால் விளைச்சல் நன்றாக உள்ளது. பழங்களின் நிறமும் சுவையும் உலகில் முன்னணி இடத்திற்கு போட்டியிடும் திறனை பெற்று விட்டன. எனவே உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரிடம் பழங்கள் வாங்க ஆர்டர்கள் குவிந்தன.

அழகிய பண்ணை:

 வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைக்கு நேரடியாக ஆய்வாளர்கள் வரத்தொடங்கினர். இதனால் பண்ணையை அழகுற அமைத்தார். "ஹார்வஸ்ட் பிரஷ்' என்ற பெயருக்கு ஏற்ப பண்ணையில் இயற்கை உரம் தயாரிப்பது, தங்கும் குடில்கள், பணியாளர்கள் குடில்கள், விருந்தினர் குடில்கள், வாத்து, நாட்டுக்கோழி, நவீன மாட்டுப்பண்ணை, நேர்த்தியான ரோடுகள், மாட்டு வண்டி என எல்லாமே கேரள ஸ்டைலில் வடிவமைத்தார்.இன்று தென்மாநிலங்களில் முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இங்கிருந்து பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் பழங்கள் செல்கின்றன.மாதுளை தேன்: இங்கு மற்றொரு சிறப்பம்சம் மாதுளை தேன். நிலத்தில் 90 சதவீதம் மாதுளை சாகுபடி செய்திருப்பதால், நூற்றுக்கணக்கான தேன்பெட்டிகள் வைத்து மாதுளை தேன் சேகரிக்கிறார். இயற்கையாக விளைந்த மாதுளை என்பதாலும், மாதுளை தேன் என்பதாலும் உலக மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது. இதனால் அடுத்த பல ஆண்டுகளுக்கு கூட மாதுளை தேனுக்கு முன்பதிவு உள்ளது. கேட்ட பணம் கொடுத்து முன் பதிவு செய்துள்ளது எல்லாமே பன்னாட்டு நிறுவனங்கள் என்பது முக்கிய அம்சம்.
பாதுகாப்பு ஏற்பாடு

: இங்குள்ள ஒரே பிரச்னை பழங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு. அடர்ந்த மலையடிவாரம் என்பதால் காட்டு பன்றிகள், யானை, காட்டு மாடுகள் உட்பட வனவிலங்குகள் தொல்லை அதிகம். எனவே பண்ணையை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்துள்ளார்.வெளிமார்க்கெட்டில் எவ்வளவு விலை கிடைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் பழங்களை வழங்கி வருகிறார். கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்களுக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மாதுளை சில்லரை மார்க்கெட்டில் தெரு வியாபாரிகள் மூலம் கிடைத்து வருவது இதில் மிகவும் சிறப்பான அம்சம்.குரியன்ஜோசப் கூறியதாவது:""நன்மை விதைத்து, நல்லதை அறுவடை செய்'' என்று கேரளாவில் கூறுவார்கள்.நான் மண்ணை கெடுத்து அதிக லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை. மாறாக மண்ணை வளப்படுத்தி, நிறைவான விளைச்சல் எடுக்க விரும்பினேன். நமது பழங்களை தரமாக மாசற்ற வகையில் உற்பத்தி செய்து வென்றுள்ளேன்.அடுத்த கட்டமாக, இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக இந்த இடத்தில் பண்ணை சுற்றுலா அமைக்க திட்டமிட்டுள்ளேன். வருபவர்களை இங்கேயே தங்க வைத்து, பண்ணையை நேரடியாக பார்வையிட்டு, பழங்களை பறித்து சாப்பிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.தொடர்புக்கு: 91 93886 10249www.harvestfresh.in, info@harvestfresh.in-எம்.பாண்டியராஜன்

Monday, 25 August 2014

சிரோஹி ஆடுகள்...

கொட்டில் முறை வளர்ப்புக்கு ஒரு புதிய வரவு !பொதுவாக சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரத் தேவையை நிறைவேற்றி வருபவை கோழிகள் மற்றும் ஆடுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.பல்வேறு களைச் செடிகள், புற்கள், தாவரங்கள், சமயலறைக் கழிவுகள் ஆகியவற்றையே உணவாகக் உட்கொண்டு... பால் மற்றும் இறைச்சியைத் தர வல்லவை ஜமுனாபாரி, தலைச்சேரி போன்ற பொதுவான இந்திய வகை வெள்ளாடுகள். குறைந்த பரமரிப்பு மற்றும் குறைந்தத் தீவனச் செலவில் பால் மாடுகளைக் காட்டிலும், அதிக வருமானம் தருபவை இந்த வகையான ஆடுகள் என்பதால், இவற்றுக்கு விவசாயிகளிடையே நல்ல மரியாதை.அந்த வரிசையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் புது வரவுதான் சிரோஹி ஆடு. இந்த வகை ஆடுகளின் இன்னொரு தனிச்சிறப்பு, இவற்றின் இறைச்சி தமிழ்நாட்டு ஆடுகளின் இறைச்சி சுவைக்கு இணையாக இருப்பதுதான். தவிர, இந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் பழக்கம் இல்லாததால், கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக இருக்கின்றது.இரண்டு வருடங்களாக, சிரோஹி ரக ஆடுகளைக் கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெண் விவசாயி கலாமணி. அதுமட்டுமல்லாமல் சிரோஹி ரக கிடாவையும் நாட்டு ரக பெட்டை வெள்ளாடுகளையும் இணைத்து, புதிய ரகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் கலாமணி."கொட்டில் முறையில ஆடு வளக்கணும்னு ஆசைப்பட்டு, கொட்டில் தயார் பண்ணி, கோ-3, கோ-4, மல்பெரி, அகத்தி, வேலிமசால் மாதிரியான தீவனப் பயிர்களை விதைச்சுட்டு ஆடுகளுக்காக அலைஞ்சுகிட்டுருந்தப்பதான், கேரளாவிலிருக்குற ஒரு டாக்டர் மூலமா இந்த வகை ஆடுகளைப் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே, அந்த டாக்டர் மூலமாவே 6 மாச வயசுல... 4 பெட்டை, ஒரு கிடாக் குட்டியை உயிர் எடைக்கு கிலோ 240 ரூபாய்னு மொத்தம் 36,000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. சில கிடாக் குட்டிகளை வித்தது போக, 19 உருப்படி பண்ணையில இருக்கு. அம்பது ஆடாவது வைச்சுருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கறதால கிடாக்களை மட்டும்தான் விக்கிறேன். பெட்டையையெல்லாம் நானே பராமரிச்சுகிட்டுருக்கேன்.நம்ம நாட்டு ஆடுகள் மாதிரியே இதுக்கும் இரண்டு வருஷத்தில் 3 ஈத்துதான். ஒரு ஈத்துக்கு சராசரியா இரண்டு குட்டிகள் ஈனும். பெட்டைக் குட்டிகள் 6 மாசத்துல பருவத்துக்கு வந்துடும். இந்த வகை ஆடுகளுக்கு 30 பெட்டைக்கு ஒரு கிடா இருந்தா, போதும். கிடாக்களை மட்டும் ஒண்ணரை வருஷத்துக்கு ஒருமுறை மாத்திக்கிட்டோம்னா... மரபணு ரீதியா வர்ற நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லாம ஆரோக்யமான குட்டிகள் கிடைக்கும்.இந்த ஆடுகள், அடர் காபித் தூள் நிறத்துல அங்கங்க வட்ட வட்டமா கருப்புத் திட்டுக்கள், மாவிலை மாதிரியான நீளமான காதுகளோட மினுமினுனு பாக்கவே அழகா இருக்கும். தவிர, 'கொழுகொழு'னு சதைப்பிடிப்பா கம்பீரமாவும் இருக்கும். இந்த ஆடுகளுக்கு மேயத் தெரியாததால கொட்டில்லேயே தீவனம் கொடுத்து வளக்குறேன். அதனால நல்ல எடை வருது. சாதாரணமா நாட்டு ஆடு ஆறு மாசத்துல 13 கிலோ எடை வரும். ஆனா, சிரோஹி 15 முதல் 20 கிலோ வரை எடை வந்துருது. தீவன இலைகளை கயித்துல கட்டி தொங்க விட்டா போதும். அதேமாதிரி கொஞ்சம் அடர் தீவனமும் கொடுத்தா... வளர்ச்சி நல்லா இருக்கும்'' என்று தன் அனுபவத்திலிருந்து விஷயங்களை எடுத்து வைத்த கலாமணி,"புதுமுயற்சியா, நாட்டுப் பெட்டை ஆடுகளோட சிரோஹி கிடாவை சேர்த்து விட்டேன். அதுல பிறந்த கலப்புக் குட்டிங்க காது மற்றும் உடல்வாகு எல்லாம் சிரோஹி மாதிரியாவே இருக்கு. சாதாரணமா நாட்டு ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போது, ஒன்றரை கிலோவில் இருந்து 2 கிலோ வரைதான் எடை இருக்கும். ஆனா, இந்த கலப்புக் குட்டிங்க 3 கிலோ எடை இருக்கு. ஆனா, மேயத்தெரியல. இதேமாதிரி தொடர்ந்து ஏழெட்டு தடவை, கலப்புக் குட்டிகளை எடுத்தா... அது புது ரகமா இருக்கும். அதை அப்படியே தனி ரகமா பராமரிச்சு வளர்த்தெடுத்தா... நம்ம ஊர்ல இருக்கற ஆடுகளோட ரகத்துல ஒண்ணு கூடுதலாயிடும்.தமிழ்நாட்டு ஆடுகள் மாதிரியேதான் சிரோஹி ஆடுகளோட இறைச்சியும் இருக்கு. அதனால, இதுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கு. பொதுவா இந்த மாதிரி வெளி மாநில ஆட்டுக் கறியில கவுச்சி அடிக்கும். இதுல அது இல்லை. அதனால விக்கிறதுலயும் பிரச்னை இருக்கிறதில்லை" என்று காரண காரியங்களோடு சொன்னார் கலாமணி.புது முயற்சிக்கு வாழ்த்துகள்!

ஆறே மாதத்தில் அசத்தல் எடை !திருப்பூரில் இயங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். ஆர். செல்வராஜ், சிரோஹி ஆடு பராமரிப்பு பற்றி சொல்கிறார். ‘‘இந்த வகை ஆடுகளின் வளர்ச்சி துரிதமாக இருக்கும். வளர்க்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோ எடை வந்துவிடும். மேம்படுத்தப்பட்ட தரமான சிரோஹி ஆட்டுக்கிடாவை தலைச்சேரி, போயர் மற்றும் ஜமுனாபாரி ஆடுகளுடன் இணை சேர்க்கலாம். இதன் மூலம் கிடைக்கும் குட்டிகளுக்கு விற்பனை வாய்ப்பும் அதிகம். விலையும் அதிகம் கிடைக்கும். ஆனால், கிடாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.இந்த ரக ஆட்டின் இறைச்சியில் வைட்டமின்&ஏ, டி சத்துக்கள் அதிகமிருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம். இரண்டு மாதங்களுக்கொரு முறை ஆடுகளுக்குக் குடற்புழு, நாடாப்புழு, தட்டைப்புழு ஆகியவற்றை நீக்குவதற்குரிய வைத்தியத்தை செய்யவேண்டும். ஒட்டுண்ணிகளின் தொந்தரவைத் தடுக்க, ஒட்டுண்ணி நீக்கும் மருந்தை 100 மில்லி அளவு எடுத்து, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆடுகளை குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். மற்ற ரக ஆடுகள் ஓர் ஆண்டுக்குப் பிறகு எட்டக்கூடிய எடையை, ஆறே மாதங்களில் எட்டிவிடும் இந்த சிரோஹி."

Saturday, 23 August 2014

ஆண்டுக்கு இரண்டு ஈத்து...ஈத்துக்கு இரண்டு குட்டிகள்.... !

பெங்கால் பிளாக் ஆடு வளர்ப்பு...எல்லா வகையான இலைதழைங்களையும் தின்னும்...7 மாசத்துல 20 கிலோ எடை...வான்கோழி, காடை, வெண்பன்றி, முயல், கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும்... நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.தமிழ்நாட்டில் கொடி ஆடு, கன்னி ஆடு என ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும்... தட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வரவுகளான சிரோஹி, தலைச்சேரி, போயர், ஜமுனாபாரி போன்ற ஆடு வகைகளோடு கலப்பு செய்து, கலப்பினக்குட்டிகளை உருவாக்கி வளர்க்கும் பழக்கமும் நம் விவசாயிகளிடம் பெருகி வருகிறது. அந்த வகையில், ‘பெங்கால் பிளாக்’ எனும் ஆடு வகையை வளர்த்து வருகிறார்கள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள கண்ணம்மநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயத் தம்பதியர் ஆர். சுந்தரராஜன்-செண்பகவல்லி.ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம் குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் பரஸ்பரம் மாறி இருக்கின்றன.ஆடுகளைக் கொட்டிலிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்துவிட்ட சுந்தர்ராஜன், "பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் சௌகரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி, பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்" என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார்.தற்போது 57 வயதாகும் சுந்தரராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே... சட்டப் பணிக்கு மொத்தமாக முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்."அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ... அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப் போயிடுச்சு. அந்த சமயத்துல வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுகதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக் கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.அதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதுங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடுக்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச் சோளத்தைக் கொடுத்து, தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.எந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்’ன்ற மாதிரி ÔகொழுகொழுÕனு ஆயிடும். மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா... மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்" என்று சுந்தர்ராஜன் நிறுத்த, தொடர்ந்தார் செண்பகவல்லி."ஆடுகளுக்குனு எதையும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்கு களை எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக" என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய சுந்தரராஜன், "கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக் குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்" என்றார் சந்தோஷ கணக்குடன்!"விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!"இந்த வகை ஆடுகள் குறித்து விளக்குகிறார், திருப்பூர், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் செல்வராஜ். "மேற்குவங்க மாநிலத்தில் இறைச்சிக்காக இந்த ஆடுகளை வளர்க்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். நம் மாநில சீதோஷ்ண நிலைக்கு எந்த அளவுக்கு இவை சரிப்பட்டு வரும் என்பது இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த ஆடுகள் ரொம்பவும் மென்மையானவை. இறைச்சியும் ருசியாகவே இருக்கும். ஆனால், எந்த அளவுக்கு விற்பனை வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு களத்தில் இறங்குவது நல்லது.மொத்தமாக இதை வாங்காமல், ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி வாங்கி வந்து, அவற்றை வளர்த்து பெருக்குவதுதான் லாபகரமானதாக இருக்கும்எந்த ஆடாக இருந்தாலும் சரியானப் பருவத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்தெல்லாம் கொடுத்து வளர்ப்பதுதான் நல்லது. இல்லையென்றால், என்னதான் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தாலும், மற்ற கால்நடைகள் மூலமாக நோய் தொற்றும் ஆபத்து இருக்கிறது" என்றார்."விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!



ய்தொடர்புக்கு சுந்தர்ராஜன்,அலைபேசி 93675-33111