Friday, 7 November 2014

பால் 40 ரூபாய்… மாட்டு சிறுநீர் 60 ரூபாய்!

காஞ்சிபுரம்: பால் விலை லிட்டர் ரூ.40க்கு கிடைக்கிறது என்றும், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு விற்கிறது என்றும், வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும், விவசாயமும் செழிக்கும் என்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள புதிய இடையூர் கிராமத்தில் கரிம விவசாயிகள் தினம்  கொண்டாடப்பட்டது.மரங்கள் அடர்ந்த இயற்கைச் சூழலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு , இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் 'பண்ணை', களம் அமைத்து கொடுத்திருந்தது. கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் குமாரவேல் கூட்டத்தில் பேசியபோது, "முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்களின் வீடுகளில் பத்து மாடுகளாவது இருக்கும். ஆனால் இன்று மாடுகளே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள். இயற்கை விவசாயத்திற்கான அடிப்படையே மாடுகள்தான். சென்னைவாசிகள் வீட்டில் நடக்கும் சுபதினங்களுக்கு பசு மாட்டுச் சிறுநீர் கிடைக்காமல் மஞ்சள் நீரை தெளிக்கின்றார்கள்.பசுமாட்டு சிறுநீர் இப்போது பாட்டிலில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பால் விலை லிட்டர் ரூ.40க்கு  கிடைக்கிறது. ஆனால், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு  விற்கிறது. இதை மதிப்புக்கூட்டி 'அர்க்' என்ற மருந்து பொருளாக மாற்றலாம். இதன் விலை 500 ரூபாய்க்கு மேலே விற்பனையாகிறது. பாலை விட  நாட்டு  மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணத்தையும் விற்க முடியும். வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும் இருக்கும். விவசாயமும் செழிக்கும்" என்றார்.நீரின் அவசியம் குறித்து பேசிய பாலாறு படுகை பாதுகாப்பு இயக்க தலைவர் காஞ்சி அமுதன், "குடிநீர் ஆதாரத்திற்காக பயன்பட்ட ஏரிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் கூவத்தை விட பாலாற்றில் சயனைடு அளவு அதிகமாக இருக்கிறது. பாலாற்றை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம்.நம் நாட்டில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ரெக்சின் பொருட்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றோம். தோலின் மூலம் தயாரித்த பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதியாகின்றன. எந்த நாட்டினரோ பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்காக நம்முடைய ஆறுகளை  பணத்திற்காக பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். தேம்ஸ் நதிக்கரையில் இருந்த தோல் பதனிடும் கம்பெனிகளை எல்லாம் அகற்றி ஆற்றை தூய்மையாக்கிவிட்டார்கள்.  நம்முடைய ஆறுகளை எப்போது தூய்மையாக்கப் போகிறோம்?” என்று கேள்வியை உதிர்ந்து அமர்ந்தார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விவசாயி ராஜப்பன், "உளுந்தூர்பேட்டை பகுதியில், சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றேன். சென்னையில் ஒரு கிலோ வரகு அரிசி 120 ரூபாய்க்கு விற்பதாக இங்கே சொன்னார்கள். 100 கிலோ வரகு மூட்டையை 1100 ரூபாய்க்கு விற்றேன். இதை அரிசியாக்கினால் 50 கிலோ வரகரிசி கிடைக்கும். இடைத்தரகர்கள் எந்த அளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றார்கள் என்று இதிலிருந்தே தெரியும். குறைந்த விலையில் மக்களுக்கு சிறுதானியங்களும் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் விவசாயிகளுக்கும் நஷ்டம் வரக் கூடாது. விளைவிப்பவர்களுக்கு விலை கிடைத்தால்தான் சிறுதானியங்களை பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார் ஆதங்கமாக.கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி பேசும்போது, "எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒருத்தர் விவசாயம் செய்வதற்கு நிலம் தேடி வந்திருந்தார். நான் பண்ணையில் வைத்திருந்த ஆடு, மாடு கோழி என அனைத்தையும் வைத்து சம்பாதித்துக் கொள்ளுங்கள். ஆனால் நிலத்தை இயற்கையான முறையில்தான் பராமரிக்க வேண்டும். எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அதைப்பார்த்து 10 விவசாயிகளாவது மனம் மாறி இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால்போதும் என்றேன். மூன்று மாதம் கடந்தது, செய்ய முடியவில்லை என்று அவர், என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். இயற்கை வேளாண்மை செய்ய, இன்றைக்கும் என்னுடைய நிலத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.கரிம வேளாண் கட்டமைப்பு நிறுவனரும், மூத்த வேளாண் விஞ்ஞானியுமான அரு.சோலையப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.


No comments:

Post a Comment