Monday, 25 August 2014

சிரோஹி ஆடுகள்...

கொட்டில் முறை வளர்ப்புக்கு ஒரு புதிய வரவு !பொதுவாக சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரத் தேவையை நிறைவேற்றி வருபவை கோழிகள் மற்றும் ஆடுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.பல்வேறு களைச் செடிகள், புற்கள், தாவரங்கள், சமயலறைக் கழிவுகள் ஆகியவற்றையே உணவாகக் உட்கொண்டு... பால் மற்றும் இறைச்சியைத் தர வல்லவை ஜமுனாபாரி, தலைச்சேரி போன்ற பொதுவான இந்திய வகை வெள்ளாடுகள். குறைந்த பரமரிப்பு மற்றும் குறைந்தத் தீவனச் செலவில் பால் மாடுகளைக் காட்டிலும், அதிக வருமானம் தருபவை இந்த வகையான ஆடுகள் என்பதால், இவற்றுக்கு விவசாயிகளிடையே நல்ல மரியாதை.அந்த வரிசையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் புது வரவுதான் சிரோஹி ஆடு. இந்த வகை ஆடுகளின் இன்னொரு தனிச்சிறப்பு, இவற்றின் இறைச்சி தமிழ்நாட்டு ஆடுகளின் இறைச்சி சுவைக்கு இணையாக இருப்பதுதான். தவிர, இந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் பழக்கம் இல்லாததால், கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக இருக்கின்றது.இரண்டு வருடங்களாக, சிரோஹி ரக ஆடுகளைக் கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெண் விவசாயி கலாமணி. அதுமட்டுமல்லாமல் சிரோஹி ரக கிடாவையும் நாட்டு ரக பெட்டை வெள்ளாடுகளையும் இணைத்து, புதிய ரகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் கலாமணி."கொட்டில் முறையில ஆடு வளக்கணும்னு ஆசைப்பட்டு, கொட்டில் தயார் பண்ணி, கோ-3, கோ-4, மல்பெரி, அகத்தி, வேலிமசால் மாதிரியான தீவனப் பயிர்களை விதைச்சுட்டு ஆடுகளுக்காக அலைஞ்சுகிட்டுருந்தப்பதான், கேரளாவிலிருக்குற ஒரு டாக்டர் மூலமா இந்த வகை ஆடுகளைப் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே, அந்த டாக்டர் மூலமாவே 6 மாச வயசுல... 4 பெட்டை, ஒரு கிடாக் குட்டியை உயிர் எடைக்கு கிலோ 240 ரூபாய்னு மொத்தம் 36,000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. சில கிடாக் குட்டிகளை வித்தது போக, 19 உருப்படி பண்ணையில இருக்கு. அம்பது ஆடாவது வைச்சுருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கறதால கிடாக்களை மட்டும்தான் விக்கிறேன். பெட்டையையெல்லாம் நானே பராமரிச்சுகிட்டுருக்கேன்.நம்ம நாட்டு ஆடுகள் மாதிரியே இதுக்கும் இரண்டு வருஷத்தில் 3 ஈத்துதான். ஒரு ஈத்துக்கு சராசரியா இரண்டு குட்டிகள் ஈனும். பெட்டைக் குட்டிகள் 6 மாசத்துல பருவத்துக்கு வந்துடும். இந்த வகை ஆடுகளுக்கு 30 பெட்டைக்கு ஒரு கிடா இருந்தா, போதும். கிடாக்களை மட்டும் ஒண்ணரை வருஷத்துக்கு ஒருமுறை மாத்திக்கிட்டோம்னா... மரபணு ரீதியா வர்ற நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லாம ஆரோக்யமான குட்டிகள் கிடைக்கும்.இந்த ஆடுகள், அடர் காபித் தூள் நிறத்துல அங்கங்க வட்ட வட்டமா கருப்புத் திட்டுக்கள், மாவிலை மாதிரியான நீளமான காதுகளோட மினுமினுனு பாக்கவே அழகா இருக்கும். தவிர, 'கொழுகொழு'னு சதைப்பிடிப்பா கம்பீரமாவும் இருக்கும். இந்த ஆடுகளுக்கு மேயத் தெரியாததால கொட்டில்லேயே தீவனம் கொடுத்து வளக்குறேன். அதனால நல்ல எடை வருது. சாதாரணமா நாட்டு ஆடு ஆறு மாசத்துல 13 கிலோ எடை வரும். ஆனா, சிரோஹி 15 முதல் 20 கிலோ வரை எடை வந்துருது. தீவன இலைகளை கயித்துல கட்டி தொங்க விட்டா போதும். அதேமாதிரி கொஞ்சம் அடர் தீவனமும் கொடுத்தா... வளர்ச்சி நல்லா இருக்கும்'' என்று தன் அனுபவத்திலிருந்து விஷயங்களை எடுத்து வைத்த கலாமணி,"புதுமுயற்சியா, நாட்டுப் பெட்டை ஆடுகளோட சிரோஹி கிடாவை சேர்த்து விட்டேன். அதுல பிறந்த கலப்புக் குட்டிங்க காது மற்றும் உடல்வாகு எல்லாம் சிரோஹி மாதிரியாவே இருக்கு. சாதாரணமா நாட்டு ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போது, ஒன்றரை கிலோவில் இருந்து 2 கிலோ வரைதான் எடை இருக்கும். ஆனா, இந்த கலப்புக் குட்டிங்க 3 கிலோ எடை இருக்கு. ஆனா, மேயத்தெரியல. இதேமாதிரி தொடர்ந்து ஏழெட்டு தடவை, கலப்புக் குட்டிகளை எடுத்தா... அது புது ரகமா இருக்கும். அதை அப்படியே தனி ரகமா பராமரிச்சு வளர்த்தெடுத்தா... நம்ம ஊர்ல இருக்கற ஆடுகளோட ரகத்துல ஒண்ணு கூடுதலாயிடும்.தமிழ்நாட்டு ஆடுகள் மாதிரியேதான் சிரோஹி ஆடுகளோட இறைச்சியும் இருக்கு. அதனால, இதுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கு. பொதுவா இந்த மாதிரி வெளி மாநில ஆட்டுக் கறியில கவுச்சி அடிக்கும். இதுல அது இல்லை. அதனால விக்கிறதுலயும் பிரச்னை இருக்கிறதில்லை" என்று காரண காரியங்களோடு சொன்னார் கலாமணி.புது முயற்சிக்கு வாழ்த்துகள்!

ஆறே மாதத்தில் அசத்தல் எடை !திருப்பூரில் இயங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். ஆர். செல்வராஜ், சிரோஹி ஆடு பராமரிப்பு பற்றி சொல்கிறார். ‘‘இந்த வகை ஆடுகளின் வளர்ச்சி துரிதமாக இருக்கும். வளர்க்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோ எடை வந்துவிடும். மேம்படுத்தப்பட்ட தரமான சிரோஹி ஆட்டுக்கிடாவை தலைச்சேரி, போயர் மற்றும் ஜமுனாபாரி ஆடுகளுடன் இணை சேர்க்கலாம். இதன் மூலம் கிடைக்கும் குட்டிகளுக்கு விற்பனை வாய்ப்பும் அதிகம். விலையும் அதிகம் கிடைக்கும். ஆனால், கிடாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.இந்த ரக ஆட்டின் இறைச்சியில் வைட்டமின்&ஏ, டி சத்துக்கள் அதிகமிருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம். இரண்டு மாதங்களுக்கொரு முறை ஆடுகளுக்குக் குடற்புழு, நாடாப்புழு, தட்டைப்புழு ஆகியவற்றை நீக்குவதற்குரிய வைத்தியத்தை செய்யவேண்டும். ஒட்டுண்ணிகளின் தொந்தரவைத் தடுக்க, ஒட்டுண்ணி நீக்கும் மருந்தை 100 மில்லி அளவு எடுத்து, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆடுகளை குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். மற்ற ரக ஆடுகள் ஓர் ஆண்டுக்குப் பிறகு எட்டக்கூடிய எடையை, ஆறே மாதங்களில் எட்டிவிடும் இந்த சிரோஹி."

Saturday, 23 August 2014

ஆண்டுக்கு இரண்டு ஈத்து...ஈத்துக்கு இரண்டு குட்டிகள்.... !

பெங்கால் பிளாக் ஆடு வளர்ப்பு...எல்லா வகையான இலைதழைங்களையும் தின்னும்...7 மாசத்துல 20 கிலோ எடை...வான்கோழி, காடை, வெண்பன்றி, முயல், கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும்... நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.தமிழ்நாட்டில் கொடி ஆடு, கன்னி ஆடு என ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும்... தட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வரவுகளான சிரோஹி, தலைச்சேரி, போயர், ஜமுனாபாரி போன்ற ஆடு வகைகளோடு கலப்பு செய்து, கலப்பினக்குட்டிகளை உருவாக்கி வளர்க்கும் பழக்கமும் நம் விவசாயிகளிடம் பெருகி வருகிறது. அந்த வகையில், ‘பெங்கால் பிளாக்’ எனும் ஆடு வகையை வளர்த்து வருகிறார்கள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள கண்ணம்மநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயத் தம்பதியர் ஆர். சுந்தரராஜன்-செண்பகவல்லி.ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம் குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் பரஸ்பரம் மாறி இருக்கின்றன.ஆடுகளைக் கொட்டிலிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்துவிட்ட சுந்தர்ராஜன், "பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் சௌகரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி, பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்" என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார்.தற்போது 57 வயதாகும் சுந்தரராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே... சட்டப் பணிக்கு மொத்தமாக முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்."அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ... அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப் போயிடுச்சு. அந்த சமயத்துல வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுகதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக் கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.அதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதுங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடுக்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச் சோளத்தைக் கொடுத்து, தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.எந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்’ன்ற மாதிரி ÔகொழுகொழுÕனு ஆயிடும். மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா... மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்" என்று சுந்தர்ராஜன் நிறுத்த, தொடர்ந்தார் செண்பகவல்லி."ஆடுகளுக்குனு எதையும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்கு களை எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக" என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய சுந்தரராஜன், "கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக் குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்" என்றார் சந்தோஷ கணக்குடன்!"விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!"இந்த வகை ஆடுகள் குறித்து விளக்குகிறார், திருப்பூர், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் செல்வராஜ். "மேற்குவங்க மாநிலத்தில் இறைச்சிக்காக இந்த ஆடுகளை வளர்க்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். நம் மாநில சீதோஷ்ண நிலைக்கு எந்த அளவுக்கு இவை சரிப்பட்டு வரும் என்பது இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த ஆடுகள் ரொம்பவும் மென்மையானவை. இறைச்சியும் ருசியாகவே இருக்கும். ஆனால், எந்த அளவுக்கு விற்பனை வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு களத்தில் இறங்குவது நல்லது.மொத்தமாக இதை வாங்காமல், ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி வாங்கி வந்து, அவற்றை வளர்த்து பெருக்குவதுதான் லாபகரமானதாக இருக்கும்எந்த ஆடாக இருந்தாலும் சரியானப் பருவத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்தெல்லாம் கொடுத்து வளர்ப்பதுதான் நல்லது. இல்லையென்றால், என்னதான் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தாலும், மற்ற கால்நடைகள் மூலமாக நோய் தொற்றும் ஆபத்து இருக்கிறது" என்றார்."விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!



ய்தொடர்புக்கு சுந்தர்ராஜன்,அலைபேசி 93675-33111

நவீன தொழில்நுட்பம்

ஒட்டு கத்தரி தொழில்நுட்பம் :

ஒட்டுக்கத்தரி என்பது கத்தரியின் இனச்செடியான சுண்டைக்காய் செடியை வேர்ச் செடியாகவும், நமக்கு தேவையான கத்தரி இனத்தை தேர்வு செய்து அதிலிருந்து இளம்தளிர் தண்டினை எடுத்து ஒட்டுச்செடியாகவும் வைத்து இணைப்பதே ஒட்டுக்கத்தரி என்பதாகும். சுண்டைக்காய் செடி அதிக ஆண்டுகள் வளரும் தன்மையைக் கொண்டது. பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்குதலையும் தாங்கி வளரும் தன்மை உடையது. இளம்தளிர் ஒட்டுக்கன்றுகளை அதிக அளவு விளைச்சலை தரவல்ல செடிகளின் இரகங்களின் விதைகளை விதைத்து அதிலிருந்து இளம்தளிர் குச்சி தேர்வு செய்யப்படுகிறது.

வேர்ச்செடி தயாரிப்பு :
சுண்டைக்காய் விதைகளை 4 சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு மேட்டுப்பாத்திகளில் விதைக்க வேண்டும். சுண்டைக்காய் விதையை விதைத்த நார்களிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைத்த 25 நாட்களுக்கு இது ஒட்டுக்கட்டுவதற்கு ஏற்ற தடிமனுடன் இருக்கும்.

ஒட்டுக்கட்டுதல்:

வேர்க்குச்சியும், இளம்தளிர் குச்சிகளும் நான்கு இலைகள் விட்ட நிலையில் வேர்ச்செடியின் மேல் பகுதியை 10 செ.மீ. உயரத்தில் கூர்மையான சுத்தமான கத்தியைக் கொண்டு நீக்கி விட்டு, நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமனுடன் இளந்தளிர் குச்சியின் வேரை நீக்கி விட்டு தண்டின் இலைகளை இரு நுனியிலைகள் மட்டும் விட்டு விட்டு இதர இலைகளை நீக்கி விட வேண்டும். பின் "ஏ' வடிவத்தில் இருபுறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுபட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக் இணைப்பான் கொண்டு இணைக்க வேண்டும். அல்லது ஒரு செ.மீ. அகலமான சிறு பாலிதீன் தாளைக் கொண்டு இறுக்கமாகச் சுற்றி கட்டி விட வேண்டும். பின்னர் ஒட்டுக் கட்டிய செடிகளை ஒரு சிறு பாலிதீன் உறையை கொண்டு நுனியை மூடி நிழல்வலைக் கூடத்தினுள் சுமார் 70-80 சதவிகிதம் ஈரப்பதம் இருக்குமாறு எட்டு நாட்கள் வைக்க வேண்டும். பிறகு உறையை எடுத்து விட்டு 10-15 நாட்கள் நிழல்வலைக்குடிலில் வைக்க வேண்டும். ஒட்டு இணைத்த பிறகு 10 நாட்கள் வெளிசூழலில் வைத்து ஒட்டு செடிகளை நடவு வயலில் நடலாம்.நடவு செய்யப்படும் நிலத்தை 4-5 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரமிட்டு நன்கு கலக்க வேண்டும். ஒட்டுகத்தரி செடிக்கு 200 கிலோ தழைச்சத்து, 200 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும். இதில் 50 சதவிகித தழைச்சத்தான 100 கிலோவையும், மணிச்சத்து, சாம்பல் சத்து முழுவதையும் அடி உரமாக இட வேண்டும். மேலும் நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நுண்ணுயிரியை எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது டிரோகோடோமோ விதையை எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.

நடவு :

 தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கனஅடி அளவுள்ள சிறு குழிகளை எடுக்க வேண்டும். நன்கு ஒட்டு பிடித்த ஒட்டு கத்தரிகளை இக்குழிகளில் வரிசையாக நட வேண்டும். ஒட்டுச்செடிகளை ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடலாம்.

நீர்ப்பாசனம் :
ஒட்டுச்செடியை நடவு செய்த உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 7 - 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும்.

மேலுரமிடுதல்:

நட்ட ஒரு மாதம் கழித்து மீதமுள்ள தழைச்சத்தான 100 கிலோவை விட்டு மண்ணை அணைக்க வேண்டும்.


தாங்கு குச்சி :

தோட்டத்தில் நட்ட பிறகு தாங்கு குச்சியை கொண்டு முட்டு கொடுக்க வேண்டும்.

போத்து செடி எடுத்தல்:

ஒட்டுக் கட்டிய தலைச்செடியில் ஒட்டுப்பகுதியின் கீழே உள்ள சுண்டைக்காய் செடியிலிருந்து போத்துகள் முளைத்து வரும் அவற்றை ஒவ்வொரு 10 நாட்கள் இடைவெளியில் நீக்க வேண்டும்.

அறுவடை :

 நடவு செய்த 35 -40 நாட்களில் முதல் அறுவடை ஆரம் பிக்கும். காய்களை 3-4 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்களில் கிடைக்கும்




.(தகவல் - முனைவர்கள் தி.சரஸ்வதி, வே.அ.சத்தியமூர்த்தி, சி.தங்கமலை, த.சுமதி, அ.மகாலிங்கம், காய்கறி பயிர் கள் துறை, தோட்டங்கலை கல்லூரி, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர் -641 008. போன்: 661 1374, 661 1283).

Thursday, 21 August 2014

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்...

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன.அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி நிற்கின்றன. ஆறு ஏக்கரிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாதித்துள்ளார் விவசாயி மகாராஜன். தொட்டவுடனே சாதிக்கவில்லை. தோல்வி தந்த பாடம் தான், சாதிக்கத் தூண்டியது என்கிறார்.ஏற்கனவே ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரி திருமுருகு, " 5 எக்டேர் வரை அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கச் சொல்லும் போதெல்லாம்', "இதெற்கு... காசை கரியாக்கவா' என்று விட்டுவிட்டேன். தண்ணீரின்றி தென்னை கருகிப் போனது. ஆறுஏக்கர் மாந்தோப்பிற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் தண்ணீர் ஊற்றிய மரத்திற்கு, மீண்டும் தண்ணீர் கிடைக்க ஒருவாரமானது.மீண்டும் சொட்டுநீர் பாசனம் பற்றி கூறியதும், முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று சம்மதம் சொன்னேன். ஆறு ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, அரசே மானியம் தந்தது. கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து சொட்டுநீர் கருவிகளை அமைத்தேன். மின்மோட்டார் மூலம் உரம் தண்ணீரில் கலக்க தனி ஏற்பாடு செய்தேன். தற்போது ஆறு ஏக்கருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்து விடுகிறது. மின்செலவு குறைந்துள்ளது. களைகள் குறைந்து விட்டன. கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரில் மரங்கள் நன்றாக காய்த்து, மகசூலும் கிடைத்தது. மா மட்டுமல்ல... ஓராண்டுக்கு முன் கொய்யாவில் லக்னோ 49 ரகத்தில் 300 மரங்கள் வைத்து, பராமரித்து வருகிறேன். மாட்டு எரு, உரம் தருகிறேன்.வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, மரத்திற்கு ஒரு டன் காய்கள் தான் கிடைத்தன. இப்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், இரண்டு டன் காய்கள் கிடைக்கின்றன. மழை பெய்தால் இன்னும் மகசூல் கிடைக்கும்.சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், ஆறு ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற முடிந்தது, என்றார்.இவரிடம் பேச: 97867 51903.எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Tuesday, 19 August 2014

பாடு இல்லாமல் பணம் தரும் பாரம்பர்ய எலுமிச்சை!

ஏக்கர் கணக்கில் நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்தாலும், காலம் என்னவோ... பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகிறது. இதற்கு, ஆட்கள் பற்றாக்குறை உள்பட ஏகப்பட்டக் காரணங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவே பலரும் நிலத்தைத் தரிசாகக் கூட போட்டு வைத்துவிடும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே... 'ஒரு ஏக்கர் நிலத்திலுள்ள நாட்டு ரக எலுமிச்சைச் செடிகள் மூலமே லட்சத்துக்கு மேல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறது சின்னச்சாமி-ஜெயபாரதி தம்பதி' எனும் செய்தி காதில் விழுந்தால்... தெம்பு கூடுவதாகத்தானே இருக்கும்!திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று மூலனூரை அடுத்த நாரணாவலசு. இங்கேதான் இருக்கிறது அந்தத் தம்பதியின் எலுமிச்சைத் தோட்டம்.''வாங்க, வீட்டுக்காரரு டவுன் வரைக்கும் போயிருக் காரு'' என்றபடியே வரவேற்ற ஜெயபாரதி, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பச்சைக் குடை விரித்து படர்ந்து நின்றன எலுமிச்சை மரங்கள். மஞ்சள் பொட்டுக்களாக தரை முழுவதும் உதிர்ந்து கிடந்தன எலுமிச்சம் பழங்கள். அவற்றையெல்லாம் சேகரித்தபடியே...''இது மொத்தமும் நாட்டு ரக எலுமிச்சைதான். எங்க வீட்டுக்காரரோட தாத்தா, நூறு வருஷத்துக்கு முன்ன எங்கிருந்தோ ரெண்டு செடிகளைக் கொண்டு வந்து நட்டு, அதுல கிடைச்ச காய்கள கோயில் காரியம், வீட்டு விசேஷம், வைத்தியம்னு கேட்டவங்களுக்கு இலவசமா கொடுத்திருக்காங்க. அவருக்குப் பின்னால எங்க மாமனார், அந்தத் தாய்மரத்தில் இருந்து 15 நாத்து எடுத்து நட்டு வளர்த்தாரு. அது இப்பவும் நல்ல பலன் கொடுத்துக்கிட்டிருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன என் வீட்டுக்காரரு 45 நாத்துகளை உற்பத்தி செஞ்சி நட்டாரு. இப்ப அதுவும் சேர்ந்து பலன் கொடுத்துகிட்டிருக்கு. ஆக மொத்தம் இந்த ஒரு ஏக்கர் பூமியில 60 செடிக இருக்கு. எங்க அனுபவத்துல பாடு இல்லாம பணம் சம்பாதிக்க ஏத்த பயிர் எலுமிச்சைதாங்க'' என்ற ஜெயபாரதி, சாகுபடி பாடத்துக்குள் புகுந்தார்.27 அடிக்கு 27 அடி இடைவெளி!''எலுமிச்சை சாகுபடி செய்ய தண்ணீர் தேங்காத, மேட்டுப்பாங்கான நிலம் ஏற்றது. களர் நிலம் தவிர, மற்ற அனைத்து மண்ணிலும் செழிப்பாக வளரும். நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். பின்பு, வரிசைக்கு வரிசை 27 அடி, செடிக்குச் செடி 27 அடி இடைவெளியில் ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடியில் குழியெடுத்து, மழை மாதங்களில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) கன்றை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் நடும்போது ஏக்கருக்கு 60 கன்றுகள் தேவைப்படும். கன்றுகள் சிறியதாக இருந்தால், பச்சைப் புழுக்கள் இலையைச் சாப்பிட்டு விடும். அதனால் எட்டு மாதத்திலிருந்து ஒரு வருட வயதுள்ள கன்றுகளாக நடவு செய்வது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பாசனம் செய்யவேண்டும் (நேரடிப் பாசனம் என்றால், குறைந்தபட்சம் ஆறு நாளைக்கு ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்). நடவிலிருந்து இரண்டரை ஆண்டுகளில் எலுமிச்சை மகசூல் கொடுக்கத் தொடங்கும். நல்ல மகசூல் பெற ஐந்து வருடங்கள் ஆகும்.ஆண்டுக்கு ஒரு உரம்..!முதல் மூன்று வருடங்கள் மட்டும் செடிகளுக்கு இடையில் உள்ள களைகளை எடுத்து விட்டால் போதும். பிறகு, குடை போல விரிந்த செடிகள் நிழல் கொடுப்பதால் 'களை' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் மரங்களைக் கவாத்து செய்து, புரட்டாசியில் (பருவ மழைக்கு முன்பாக) தொழுவுரம் 25 கிலோ மற்றும் கோழி எரு 10 கிலோவை கலந்து செடிகளைச் சுற்றிலும் உள்ள நான்கடி வட்டப் பாத்தி முழுவதும் கொட்டி விடவேண்டும். பருவமழை பெய்ததும் எரு நன்றாக கரைந்து சூடு ஆறிவிடும். மற்றபடி வேறு எந்த உரமும் செடிகளுக்குத் தேவையில்லை.பறந்து போகும் பழ ஈ!எலுமிச்சையில் பழ அழுகல் நோய் தாக்கும். நன்கு பழுத்த பழங்களில் ஒரு வகை பழ ஈக்கள் அமர்ந்து காய்களைச் சுரண்டுவதால் பழங்களில் கரும்புள்ளிகள் தோன்றி, பழம் அழுகியது போல் ஆகிவிடும். இதைத் தவிர்க்க, 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கை, 20 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அந்தக் கரைசலை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளித்தால் போதும்.ஆண்டுக்கு 1,50,000!நாட்டு ரக எலுமிச்சையைப் பொருத்தவரை வருடம் முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். ஐப்பசி தொடங்கி மார்கழி வரை காய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், காய் ஒன்றுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் என்றுதான் விலை போகும். தை மாதம் முதல் வைகாசி வரையிலான பருவத்தில் காய்ப்பு குறைவாக இருக்கும். அதேசமயம், ஒரு காய் அதிகபட்சமாக 5 ரூபாய்க்குகூட விற்பனையாகும். ஆனி முதல் புரட்டாசி வரையிலானது நடுப்பருவம். இதில் காய்ப்பும் விலையும் சுமாராக இருக்கும். நல்ல பராமரிப்பு இருந்தால் ஒரு செடியில் ஆண்டுக்கு 3 ஆயிரம் காய்களுக்குக் குறையாமல் கிடைக்கும்.''சாகுபடி பாடத்தை முடித்த ஜெயபாரதி, ''சராசரியா ஒரு காய்க்கு ஒரு ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், எங்க தோட்டத்துல இருக்கற 60 மரங்கள் மூலமா ஒரு லட்சத்தி எண்பதாயிரம் காய் கிடைக்கும். வாரம் ஒரு தடவை காய்களைப் பறிச்சு மூலனூர் சந்தையில கொண்டு போய் விக்கிறோம். செலவு போக ஒரு லட்சத்து அம்பதாயிரம் ரூபாய் கையில நிக்கும்'' என்று வருமானக் கணக்கை சொன்னதோடு...''இது, தாத்தா காலத்துல இருந்து, இன்னிக்கு வரைக்கும் கைப்பிடி ரசாயனம்கூட படாத மண்ணு. அதுக்கு முன்ன ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமா இருந்ததால, அதோட எருக்களும் மண்ணுல ஏற்கெனவே மண்டிக் கிடக்கு. அதனால, வேற எந்த இடுபொருளும் இந்த நிலத்துக்குத் தேவையில்ல. இதுல எதைப் போட்டாலும் விளையும். அதுக்கு நாங்கதான் சாட்சி'' என்று இயற்கைப் பெருமையும் பேசினார் தெம்பாக!

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

அந்தப் பந்தல்... இந்தப் பந்தல்னு எந்தப் பந்தலும் இதுக்குத் தேவையே... இல்லீங்க. சும்மா நிலத்துல விதைச்சி விட்டா போதும்... தரையிலயே தன்னால வளரும். வருமானத்துக்கும் வஞ்சகமிருக்காது" தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருக்கும் திருப்பனம்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுவது... பாரம்பர்ய ரகம் என்று பெருமையோடு சொல்லப்படும் மிதிபாகற்காய் பற்றித்தான்.பந்தல் செலவுகளுக்குப் பயந்தே, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் சாகுபடி பக்கம் செல்வதை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை. இந்நிலையில், பந்தலுக்கான செலவைக் குறைப்பதற்காக 'பிரமிடு பந்தல்', 'கொட்டாரப் பந்தல்', 'நெடும்பந்தல்' என்று விதம்விதமான பந்தல்களைக் கண்டுபிடித்து, முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்தி பலன் பார்த்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள் பலரும். இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன் பார்த்திருக்கும் விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து நம்முடைய இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இங்கே இடம் பிடிக்கிறார்... 'பந்தலே தேவையில்லை' என்று களத்தில் இறங்கி, கலக்கிக் கொண்டிருக்கும் கனகராஜ்.பெரும்பாலான விவசாயிகள் விதைப்பது பெரிய பாகற்காயைத்தான். மிகச் சிறிய அளவில் இருக்கும் மிதிபாகற்காயை அவ்வளவாக யாரும் விதைப்பதில்லை. குறைந்த அளவில், பந்தல் முறையில் இதை விளை விக்கின்றனர். சில இடங்களில், தரையிலேயே விளைவிக்கின்றனர்.மிதிபாகற்காய்க்கு எப்போதுமே மக்களிடம் மவுசு அதிகம்தான். அதிலும் குறைந்த அளவிலானவர்களே இதை உற்பத்தி செய்வதால்... தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில்தான். சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ மிதிபாகற்காயின் விலை... குறைந்தபட்சம் 25 ரூபாய் என்பதே கடந்த சில ஆண்டுகளின் வரலாறு. அதிகபட்சம்... 50 ரூபாய் வரைக்கும் கூட போயிருக்கிறது!"தண்ணி இருந்தா நெல்லு... இல்லாட்டி எள்ளு!"சரி, கனகராஜ் சொல்வதற்கு காது கொடுப்போமா...?"பதினைஞ்சு வருஷமா விவசாயம் பாத்துகிட்டு இருக்குறேன். ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வந்தா, நெல்லு நடுவேன். அறுப்பு முடிஞ்ச பிறகு தண்ணி இருந்தா... நெல்லு, இல்லாட்டி எள்ளுனு ஏதாவது ஒரு பயிரை விதைச்சுடுவேன். அதேசமயம், கோடையில வயலைச் சும்மா போடறதில்ல. கண்டிப்பா ஒரு போகத்துக்கு மட்டும் மிதிபாகற்காயைப் போட்டுடுவேன்" என்று சுருக்கமாக அறிமுகப் படலம் முடித்தவர், சாகுபடி முறைகளைச் சொன்னார். அதை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.சிறப்பான சித்திரைப் பட்டம்!மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது. மணல் பாங்கான வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் இதற்கு ஏற்றது. நடவுக்கு முன் நிலத்தை நான்கு உழவு போட்டு, மூன்றடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில், 15 அடி நீள பார் அமைக்க வேண்டும். இரண்டு பாருக்கும் இடையிலான மூன்று அடி இடைவெளி நிலத்தில்தான் விதைக்கவேண்டும். அதாவது, அரை அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு எருவைப் போட்டு மூடி, குழிக்கு ஐந்து விதைகள் வீதம் ஊன்றினால் போதும். 100 குழி (சுமார் 33 சென்ட்) நிலத்துக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.ஏழாவது நாளில் முளை வரும். 15 முதல் 20 நாட்களில் செடியைச் சுற்றி இருக்கும் களைகளை அகற்றிவிட்டு, குழிக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தை வைத்து தண்ணீர் கட்டவேண்டும். 25ம் நாளில் இருந்து கொடி படர ஆரம்பிக்கும். 35ம் நாளுக்குள்ளாக பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் கொடியின் வளர்ச்சிக்காக ஏழு கிலோ யூரியா, ஏழு கிலோ பொட்டாஷை கலந்து, கொடிகளின் வேர் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக... கொடுக்க வேண்டும் (நான்கு விரல்களால் அள்ளி வைப்பது).45 முதல் 50ம் நாளில் அறுவடை ஆரம்பமாகிவிடும். அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பத்து கிலோ யூரியா, பத்து கிலோ பொட்டாஷ் கலந்து, தூருக்குத் தூர் கொஞ்சம் வைத்து தண்ணீர் கட்டவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் தண்ணீர் கட்டினால் போதும்.பறிப்புக்கு 100 கிலோ!அசுவினி, பச்சைப் புழு ஆகியவற்றின் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். பத்து லிட்டர் டேங்க் ஒன்றுக்கு, 25 மில்லி வீதம் டைமெத்தேட் மருந்தினைக் கலந்து தெளித்தால் போதும் (100 குழி நிலத்துக்கு 4 டேங்க்). முதல் பறிப்பைத் தொடர்ந்து, ஐந்து நாள் இடைவெளியில் காய் பறிக்கலாம். அதாவது, 50ம் நாள் தொடங்கி, 140ம் நாள் வரை 18 தடவை காய் பறிக்கலாம். ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ கிடைக்கும்."இதுதான் அவர் சொன்ன பாடம்."மூணு மாசத்துல ஏழாயிரம் ரூபாய்!"நிறைவாகப் பேசிய கனகராஜ், "மிதிபாகற்காய்க்கு ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவங்க கேக்குற அளவுக்கு நம்மளால உற்பத்தி பண்ணி கொடுக்க முடியறதில்ல. அதுக்குக் காரணம்... பெரும்பாலும் கோடையிலதான் இதைப் போட வேண்டியிருக்கு. அப்பத்தான் தண்ணி இல்லாம இருக்கும். தரையிலேயே இதை விதைக்க முடியும். அதேசமயம், பயிர் பண்றதுக்கும் தண்ணி இல்லாம போயிடறதால, அதிக அளவுல இதை விதைக்க முடியறதில்ல. அப்புறம், இந்தக் காயை பறிக்கறதும் கொஞ்சம் சிரமமான வேலை. அதுக்குப் பயந்துகிட்டே பல பேரு கிட்ட நெருங்க மாட்டாங்க. ஆனா, நான் இதை விடாம செய்துகிட்டிருக்கேன். அதுக்குக் காரணம்... இதுல கிடைக்கிற ஒரு லாபம்தான்!விளைஞ்சதை, பக்கத்துல இருக்கற திருவையாறு மார்க்கெட்டு வியாபாரிக்குத்தான் கொடுக்கிறேன். ஒரு கிலோ காய் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை வெச்சி எங்ககிட்ட வாங்கிக்கிறார். சராசரி கிலோ 9 ரூபாய். கோடையில சும்மா போட்டு வைக்காம, முடிஞ்ச வரைக்கும் பாடுபட்டா... மூணு மாசத்துல... நூறு குழி நிலத்துல ஒரு ஏழாயிரம் ரூபாயைக் கையில பாக்கலாம். அதை வெச்சு நாலு நல்லது கெட்டது பாத்துக்க முடியுமே!" என்று உற்சாகத்தோடு சொன்னார்.பாரம்பர்ய முறையிலும் பயிரிடலாமே!பாரம்பர்ய ரகமான மிதிபாகற்காயை இவர் பயிரிடுவது ரசாயன முறை விவசாயத்தில். இதையே இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா... 'முடியும்' என்றால் எப்படி? என்பது போன்ற கேள்விகள் எழ, கோவில்பட்டி, வேளாண்மை அலுவலர் செல்வத்திடம் கேட்டோம்."மிதிபாகற்காயை தாராளமாக இயற்கை முறை விவசாயத்திலும் செய்யலாம். ரசாயன உரத்துக்கு மாற்றாக, எரு, மண்புழு உரம், எலும்புத்தூள், இலை மட்கு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அத்தனைச் சத்துக்களும் கிடைத்துவிடும். இலை மட்கு உரத்தைப் பயன்படுத்தினால் (பார்க்கப் பெட்டிச் செய்தி), டி.ஏ.பி. உரத்தில் இருக்கும் அத்தனைச் சத்துக்களும் நிலத்துக்குக் கிடைத்துவிடும்.நீங்களே தயாரிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல்!பாகல் கொடியில் காய் எடுக்க ஆரம்பித்ததுமே... கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால், வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துகள் கிடைத்துவிடும். அதோடு, ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை இடித்தும் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, நாமே வேப்பங்கொட்டையைச் சேகரித்து, இடித்துக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் வேப்பம்முத்துக்களில் இருக்கும் 23 வித சத்துகளும் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கில், வேப்பம்முத்துகளில் இருக்கும் ‘அசாடிரக்டின்’ என்ற பொருளை தனியாகப் பிரித்துவிட்டே கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சத்துக்கள் அதில் இருக்காது. சமயங்களில் புளியன் கொட்டைத் தூள் கலந்தும் விற்கப்படுகிறது.புகையிலைக் கரைசலே போதும்!நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், ஒரு முறை தெளிக்கப்பட்டாலே, ஐந்து வருடத்துக்கு அதனுடய நஞ்சு, நம் நிலத்திலேயே இருக்கும். எனவே, அதற்கு மாற்றாக, இயற்கையாக கிடைக்கும் வேம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டி தயார் செய்து பயன்படுத்தினாலே நல்ல பலன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது.அசுவினி, பச்சைப் புழு, தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகள்தான் பாகற்காயைத் தாக்கும். இவற்றைத் தடுக்க, வேப்பங்கொட்டை, பூண்டு, புகையிலை கலந்த கரைசலை அடித்தாலே போதும் (பார்க்கப் பெட்டிச் செய்தி). டேங்குக்கு (பத்து லிட்டர்), புகையிலைக் கரைசல் ஒரு லிட்டர், காதி சோப் (100 கிராம்) கரைசல், ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து தெளித்தாலே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தக் கரைசலை மாலை வேளையில் தெளிப்பதுதான் நல்லது.இதேபோல பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது நிலத்தில் பயிருக்குத் தேவையான சத்துகளும், பூச்சி, நோய் தொந்தரவும் குறைவாகவே இருக்கும்.ரசாயனமோ... இயற்கையோ... பந்தல் இல்லாமல் பாகற்காய் விளையப்போவதில் சந்தேகமில்லை. ஆனால், நஞ்சு இல்லாமலும் விளைவிக்கவேண்டும் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்யவேண்டும்" என்று இயல்பாகச் சொல்லி முடித்தார் செல்வம்!

ஆள் பற்றாக்குறைக்கு அருமையானத் தீர்வு...!

மானாவாரியோ... இறவையோ... பயறு வகை சாகுபடி என்றாலே... விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க... என ஒவ்வொன்றுக்கும் வேலையாட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவே முடியும். நிலக்கடலை விவசாயமும் விதிவிலக்கல்ல.ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல... கடலை விவசாயத்தையும் மூட்டைக் கட்ட ஆரம்பித்து விட்டனர் விவசாயிகள் பலரும். அதையும் மீறி பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடலை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் பலரும்.அத்தகையோரில் ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விப்பட்ட, புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றையே உருவாக்கிவிட்டார்."நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு, அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பாக்குற ஆசிரியர் ஒருத்தர், அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பல்லாம் மூட்டைக் கணக்குல பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பார். ஆனா... ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரல. காரணம் கேட்டப்போ... 'வேலைக்கு ஆள் கிடைக்கலை'னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. 'இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்'னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.எங்க வீட்டுல விவசாயம் செய்த காலத்துல, கடலைக்கொடியில இருந்து கடலையைப் பிரிச்சு எடுக்குறதுக்காக ஒரு சின்னக் குழியை வெட்டி, அதுல கடலைக் கொடிகளைப் போட்டு, நடுவுல ஒரு குச்சியை வெச்சு அடிப்போம். கடலைக்காயெல்லாம் தனியா வந்துடும். ஒரே மூச்சுல ஒரு மூட்டை கடலையை இப்படி ஆய்ஞ்சி எடுத்தாலும், கை வலியே தெரியாது. சின்ன வயசுல இப்படி கடலையைப் பிரிச்செடுத்த விஷயம் அப்படியே எம் மனசுல இருக்க, அதை வெச்சே கடலைப் பிரிக்கறதுக்கான கருவியை மனசுக்குள்ள வடிவமைச்சேன்'' என்று சொல்லும் அந்தோணியின் சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம். ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு, குடும்பத்துக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்திருக்கிறார். ஆசிரியர் பணி கிடைக்கவே, விவசாயத்துக்கு விடை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக, அவை பற்றிய விவரங்களைச் சேகரிப்பதையும் செய்து வந்திருக்கிறார். அது, இந்த சந்தர்ப்பத்தில் கைகொடுக்க, கடலையைப் பிரிக்கும் கருவியை உருவாக்கிவிட்டார்.அந்தக் கருவியின் வடிவமைப்பு பற்றி நம்மிடம் விவரித்த அந்தோணி, தொடர்கிறார்..."முக்கால் அங்குல 'எல் ஆங்கில்' பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார் பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன் நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில் சட்டத்தை இணைத்து, மேல்புறம் திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும். கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு பேரிங் அமைத்து, அதன் நடுவே, 'புல்லி'யுடன் கூடிய உருளையை தயார் செய்து கொள்ள வேண்டும். உருளையின் நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் சரிவாக சல்லடைத் தகடைப் பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவி தயார்'' என்றவர், தான் வடிவமைத்து, தன் வீட்டில் வைத்திருக்கும் கருவியை இயக்கியும் காட்டினார். மேற்புறமிருந்து கடலைக் கொடியை அவர் உள்ளே காட்டக் காட்ட, பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து 'தட்தட்' டென்று கடலைகள் தனித்தனியே பிரிந்து வந்து விழுந்தன, மின்னல் வேகத்தில்!"கையில ஆயும்போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை ஆயுறதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும்போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா... சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கேன்'' என்றார் மகிழ்ச்சியுடன்.விவசாயிகளுக்காக இவர் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவி பற்றிய செய்தி, வெளியில் பரவினால், உடனே தாங்களே கண்டுபிடித்தது போல பதிவு செய்துகொண்டு, பணம் பார்க்க ஆரம்பிக்கும் கூட்டம் இங்கே அதிகம். அதனால், இந்தக் கண்டுபிடிப்பை முதலில் உரிய முறையில் பதிவு செய்யவேண்டும் என்று அந்தோணியிடம் கூறிய நாம், 'அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கம்' என்பதை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த 'சேவா' விவேகாநந்தன், கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். அவரும், ''நான் அந்தோணிக்கு உரிய உதவிகள் செய்து, அதைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறேன். இந்தக் கருவி, எல்லா விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றால், இப்படி பதிவு செய்வதுதான் நல்லது. அதன் பிறகு, அரசு நிறுவனங்கள் மூலமாகக் கூட இதை வெளியில் கொண்டு வரலாம்'' என்று ஆர்வத்தோடு சொன்னார்.படங்கள் ச. தமிழ்க்குமரன்தொ டர்புக்கு அந்தோணி,அலைபேசி 90035-30695

Wednesday, 13 August 2014

மல்லி...‘ சொல்லி அடிக்கும் ‘கில்லி!‘

நிச்சய லாபம் தரும் சாகுபடி10 நாட்களில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்!', ‘30 நாட்களில் 3 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க!', '40 நாளில் 4 லட்சம் ஈட்டுவது எப்படி?'இப்படி உங்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும், மாற்றும் வண்ணம் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் புத்தகங்களை இந்த உடன்பிறப்புக்கள் வாசித்ததில்லை. இருந்தாலும் '45 நாட்களில் நல்ல வருமானம் பார்க்க முடியும்' என்பதை விவசாயத்தில் நிரூபித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கையில் எடுத்திருப்பது லாபம் தரும் கொத்துமல்லித்தழைச் சாகுபடி. இதில் சொல்லி வைத்து கில்லி அடிக்கும் அந்த உடன்பிறப்புக்களை, ‘மல்லி பிரதர்ஸ்’ என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கே.வி. மணி மற்றும் பாலசுப்ரமணி என்கிற அந்தச் சகோதரர்களை கோவை மாவட்டம், பொங்கலூர் அருகில் உள்ள கருடமுத்தூர் கிராமத்தில் இருக்கும் அவர்களின் வயல்காட்டில் சந்தித்தோம்.பெண்கள் பலரும் பாத்திகளில் இருந்து மல்லித்தழைகளை பறித்து கட்டுகளாக்கிக் கொண்டிருக்க... ''ம்... ஆகட்டும். மார்க்கெட்டுக்கு நேரமாச்சு’’ என்று உசுப்பிவிட்டபடி நின்ற கே.வி.மணி, அப்படியே நம் பக்கம் திரும்பி,''ஆரம்பத்துல பருத்தி, வெங்காயம், வாழை, மஞ்சள்னு எல்லாரையும் போல பயிர் செய்துகிட்டிருந்தோம். உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி எல்லாம் ரொம்ப அதிகமாகிக்கிட்டே போகுது. மூணு ஏக்கர் வெச்சுக்கிட்டு விவசாயம் பார்க்கற சிறு விவசாயியான எங்களால தாக்குப்பிடிக்க முடியல. குறைஞ்ச நாள்ல பலன் தர்றது காய்கறிகள்தான்னு முடிவெடுத்து, கால் ஏக்கர் அளவுக்கு கொத்துமல்லித்தழையைப் போட்டோம். நாங்களே அறுவடை பண்ணி, திருப்பூர் காய்கறி மார்க்கெட்டுல இருக்கற கமிஷன் கடைகள்ல கொடுக்க ஆரம்பிச்சோம். வேன் வாடகை, கமிஷன் இதெல்லாம் போக... ஓரளவு வருமானம் கிடைச்சுது. பெரிசா சொல்லிக்கிற மாதிரியில்ல. திருப்பூர் பகுதியை ஒட்டி விவசாயிங்க நிறைய பேர் மல்லித்தழை சாகுபடி செய்றாங்க. அதெல்லாம் திருப்பூர் மார்க்கெட்டுக்குதான் வரும். அதேபோல, வெளியூர் வியாபாரிகள் வரத்தும் அங்கே குறைவு. அதனாலதான் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கலை.இதைப்பத்தி யோசிச்சிக்கிட்டிருந்தப்ப 'மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கேரளா வியாபாரிங்க நிறையப் பேர் வர்றாங்க. மேட்டுப்பாளையம் பகுதியில மல்லித்தழை சாகுபடி குறைவுங்கறதால அந்த மார்க்கெட்டுல நல்ல லாபம் கிடைக்கும்'னு ஒருத்தர் சொன்னார்.அடுத்தநாளே மல்லித்தழைக் கட்டுகளை பஸ்ஸுல ஏத்தி, 100 கி.மீ. தொலைவுல இருக்கற மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போனேன். அது, ரொம்பப் பெரிய மார்க்கெட். ஊட்டி, மதுரை, திருச்சினு வெளியூர்கள்ல இருந்தும் கேரளா, கர்நாடகானு வெளிமாநிலங்கள்ல இருந்தும் நிறைய வியாபாரிங்க வந்துபோறதால என்னோட மல்லிக்கு நல்ல விலை கிடைச்சுது. தேவை அதிகமா இருக்குங்கிறதையும் புரிஞ்சு கிட்டேன். அப்ப... ஆரம்பிச்சதுதான் மல்லித்தழை சாகுபடி... இன்னிக்கு அது ஒண்ணுதான் முழுக்க முழுக்க என் தோட்டத்து சாகுபடியா இருக்கு. மூணு ஏக்கர் முழுக்க அதைத்தான் போடுறோம். சொந்தமா வேன் வெச்சு மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடறோம். விஷயம் வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு.இதுல இருந்து மத்தவங்க தெரிஞ்சுக்கவேண்டியது... ஒரே விளை பொருளை ஒரே இடத்துல கொண்டு போய் விற்கக்கூடாது. தேவை எங்க இருக்குனு தேடிப்பிடிச்சி கொண்டுபோய் விற்பனை செய்தா லாபம் பார்க்கலாம். இதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுக்கணும்... அவ்வளவுதான். உள்ளூர் மார்க்கெட்டுலதான் விற்பேன்னு அடம்பிடிச்சிக்கிட்டிருந்தா, விலை சம்பலாகிப் போகும். கேட்ட விலைக்கு கொடுத்துப் புட்டு... மிக்சரும், டீயும் வாங்கிக் குடிச்சுப்புட்டு வெறும் கோணிப்பையோடதான் வீடு வந்து சேரமுடியும்...'' என்று கே.வி.மணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்து மல்லித்தழைகள் கட்டுகட்டுகளாக வேனில் ஏறியிருந்தது. வேனை நகர்த்திக்கொண்டு அவர் மேட்டுப்பாளையம் நோக்கி நகர, அவருடைய அண்ணன் பாலசுப்ரமணி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.''மல்லித்தழைய விளைவிக் கறதுதான் என்னோட வேலை. அதைக் கொண்டுபோய் வித்துப்புட்டு வர்றது மணியோட வேலை. நாங்க தோட்டத்துல போட்டிருக்கிறது வீரியரக மல்லி. 45 நாள்ல பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர். ஆரம்பத்துல.. நாட்டு மல்லிதான் போட்டுப் பார்த்தோம். அதுல ரசம் வெச்சா... சும்மா 'கமகம'னு மணக்கும். அந்த ஒண்ணுக்காகவே எல்லாரும் விரும்பி வாங்கு வாங்கனு மார்க்கெட்டுல கொண்டு போய் கூவிக்கூவிப் பார்த்தோம். விலை கேட்கறதுக்கு நாதியில்ல. அதுக்குப் பிறகுதான் வீரியரக மல்லிக்கு மாறிட்டோம். இப்ப எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்கு'' என்று சொன்னவர், சாகுபடி குறிப்புகளை எடுத்துப் போட்டார்.மொத்தமாக 45 நாட்கள்தான் இந்த சாகுபடி. மண் 'பொல பொல'வென்று ஆகும் அளவுக்கு டிராக்டரை கொண்டு இரண்டு உழவு ஓட்டவேண்டும். அடுத்து, அடியுரமாக 3 லோடு கோழி எரு கொட்டவேண்டும். பிறகு, ஒரே சீராக பாத்தி அமைத்து, வீரிய ரக விதைகளை (9 கிலோ) பாத்தி முழுவதும் ஏகமாக தூவி விடவேண்டும். பின்னர் கொத்துமுனை அல்லது குச்சி மூலம் கீறி விடவேண்டும். அதன் பிறகு பாத்தி நிறையும் அளவில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். 5 முதல் 7 நாட்களில் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும். அப்போது 10 ஆட்களை விட்டு, களை எடுக்கவேண்டும். விதைத்த 3-ம் நாளுக்குள்ளாகவே சிலர் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதைவிட கையால் களை எடுப்பதுதான் நல்லது.தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாசனம் தேவை. 15-ம் நாள் ஒன்றரை மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தைப் பாசன தண்ணீரில் கரைத்து கொடுக்கவேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். இதற்கும் 10 ஆட்கள் தேவைப்படுவார்கள். 25-ம் நாளில் 1 மூட்டை யூரியாவை பாசன நீரில் கரைத்துவிடலாம். இதையெல்லாம் செய்தால் மல்லித்தழை ‘குப்’பென்று வளரும். அதற்குப் பிறகு, தண்ணீர் மட்டும் அடிக்கடி பாய்ச்சினால் போதும். வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாள் தளதளவென தழைத்து நிற்கும் மல்லித் தழைகளை ஜம்மென்று அறுவடை செய்யலாம்.தொடர்ந்த பாலசுப்ரமணி, ''இதுக்கு... முட்டு வளி செலவுனு பார்த்தா ரொம்ப குறைச்சல்தான். இதையும் கூட நாங்க கம்மி பண்ணிக்கிட்டே இருக்கோம். இப்பவே... அடி உரமா கோழி எரு போடறதால, டி.ஏ.பி. தேவையில்லாம போயிடுச்சு. அதுபோலத் தான், மண்புழு உரம், தொழு உரம்னு மாத்திமாத்தி இயற்கை உரங்களை பயன்படுத்தப் போறோம். இதனால முட்டுவளி செலவுங்கறது ரொம்பவே குறைஞ்சி, லாபத்தை தானாவே அதிகரிக்கச் செய்யும்ங்கறதுல சந்தேகம் இல்லை.வருஷம் முழுக்க மல்லித்தழை சாகுபடி செய்யலாம். எங்க ஏரியாவுல கிட்டத்தட்ட 2000 ஏக்கர்ல மல்லித்தழை சாகுபடி நடக்குது. களர், உவர் மண்ணைத் தவிர.. எல்லாவித நிலத்துலயும் இது நல்லா வளரும். செம்மண் நிலத்துல ரொம்ப சிறப்பாச் செய்யலாம். தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் வெயில் கொளுத்தும். இது மல்லித்தழைக்கு அவ்வளவா ஆகாது. தென்னந்தோப்பு வெச்சிருக்கறவங்க, அதோட நிழல்ல சாகுபடி செய்யலாம். அப்படி வசதி இல்லாதவங்க, கொஞ்சம் கூடுதலா தண்ணி கொடுத்துப் பராமரிப்பு செய்யணும். இடுபொருள் விஷயத்துலயும் அதேபோல கவனம் செலுத்தினா போதும்... கணிசமா மகசூல் பாக்கலாம். கோடை காலத்துல ஏக்கருக்கு 1,000 கிலோ வரை மகசூல் குறைவாத்தான் கிடைக்கும். ஆனா, அந்த சீசன்ல சிரமப்பட்டு வளர்த்து கொண்டு வந்துட்டா, நல்ல விலைக்கு விக்கலாம். இந்த வருஷ கோடையில கிலோ 65 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமா விலை போயிருக்கு. சராசரியா ஏக்கருக்கு 8,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். இன்னிக்கு தேதியில மேட்டுப்பாளையம் மார்க்கெட் நிலவரப்படி கிலோ ஒண்ணுக்கு 8 ரூபாய் விலை கிடைக்குது. இதுவரைக்கும் கிலோ 5 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு ஒரு நாளும் நாங்க மல்லித்தழையை வித்ததில்லை. எங்களோட 3 ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில சாகுபடி செய்றதால எப்பவுமே எங்க தோட்டத்துல மல்லித்தழை வாசனைதான்.சொந்தமா வேன் வாங்கியிருந்தாலும் அதைச் சும்மா நிறுத்தி வைக்கறதில்ல. எங்களுக்கு வேலை இல்லாத மத்த நாட்கள்ல அக்கம் பக்கத்துல உள்ள விவசாயிகளோட மல்லிதழைகளை விலைபேசி மார்க்கெட்டுக்கு கொண்டு போறோம். அதுல ஒரு சின்ன லாபமும், வேன் வாடகையும் கிடைக்குது.மொத்தத்துல ஒரு முறை போட்டுப்பார்த்தா... உங்க உள்ளத்தை கவர்ந்துடும் சொல்லி வெச்சி லாபம் அடிக்கற இந்த கொத்து மல்லி'' என்று கில்லியாக சொல்லி முடித்தார் பாலசுப்ரமணி.தொடர்புக்கு: கே.வி.மணி, கருடமுத்தூர், திருப்பூர் வட்டம். அலைபேசி: 94862-42574.

முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

தோட்டக்கலை அதிகாரி தகவல்:உடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்கில் சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு வழி உள்ளது.விவசாயிகள் தனது சொந்த செலவில் கன்றுகளைப் பெற்று வாங்கி நட்டு அதன் புகைப்படம், சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு மற்றும் விண்ணப்பம் தந்து மூங்கில் சாகுபடி மானியம் பெற டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை, அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கூறுகையில், நட்ட 3ம் ஆண்டு முதல் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு ஏக்கரில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தரமான மூங்கில் வளர்த்து அறுவடை செய்து உயர்நிலை அடையலாம். மூங்கில் கன்றுகள் குறித்து மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, 11 August 2014

மீன் அமினோ அமிலம்! 

இது ஒருவகையான இயற்கை தழைச்சத்து உரம். ஒரு கிலோ மீன் (எந்த வகையாகவும் இருக்கலாம். கெட்டுப்போனதாக இருந்தால் ரொம்பவும் நல்லது), ஒரு கிலோ வெல்லம் அல்லது மொலாசஸ் (வெல்லம் காய்ச்சும் போது கிடைப்பது) இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் கேனில் 20 நாட்கள் ஒன்றாகப்போட்டு வைக்க வேண்டும். இது பஞ்சாமிர்தம் மாதிரி வாடையுடன் கலவையாகத் தயாராகிவிடும். 10 லிட்டர் நீரில் 100 மில்லி வீதம் கலந்து தேவைக்கேற்ப பயிர்களுக்குத் தெளிக்கலாம். காலை 9 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு பிறகும் தெளிப்பது நல்லது. பயிர்கள், இந்த நேரத்தில்தான் சத்துக்களை கிரகிக்கும்.''மேலே சொன்னபடி தயாரான மீன்அமினோ அமிலத்தில் 85% தழைச்சத்து உள்ளது. ஒரு யூரியா மூட்டையில் 46% தழைச்சத்துதான் இருக்கிறது. அதிலும் 10% நீரில் ஆவியாகிவிடும். மீதி 36% பயிருக்கு கிடைக்கும். அதனால் எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்'' என்கிறார் அந்தோணிசாமி.

இயற்கையா... செயற்கையா?-‘‘

இரண்டு ஏக்கர் சவால்!

இப்பல்லாம் இயற்கை விவசாயம்னு பேசறதே பலருக்கும் ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் சுத்த புரூடாதான். இயற்கை விவசாயத்துல எனக்கு இவ்வளவு கிடைச்சுது... உனக்கு இவ்வளவு கிடைச்சுதுனு பெருமைக்காக கதைவிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படியெல்லாம் விவசாயம் செய்து லாபம் பாக்கவேமுடியாது. கைக்காசை செலவு பண்ணிட்டு, வெட்டிபந்தாவுக்காக 'இயற்கை விவசாயம்'னு பேசிக்கிட்டு திரியறாங்க’’ என்று ஒரு சிலரிடமிருந்து 'பசுமை விகடன்' அலுவலகத்துக்கு சூடான கேள்விக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.''இதற்கு பதில் என்னவாக இருக்கும்?'' என்றபடி இயற்கை விவசாயிகளின் பட்டியலை ஒரு நோட்டமிட்டோம். அதில், நமக்கு பளீரெனப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பிரபல இயற்கை விவசாயி அந்தோணிசாமி. ஏக்கர் கணக்கில் இயற்கை விவசாயம் செய்து சாதித்துக்கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் அந்தோணிசாமி. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதும், சட்டென்று குரலை உயர்த்தி,''ஐயா.... இயற்கை விவசாயிகளைப்பத்தி இப்படி கேவலமா பேசறதே சிலருக்குப் பொழப்பாப் போச்சி. நானே கிட்டத்தட்ட பதினைஞ்சி வருஷமா இயற்கை விவசாயம் செய்து சாதிச்சிக்கிட்டிருக்கேன். பலர் நாப்பது வருஷமா செய்துகிட்டிருக்காங்க. சொல்லப் போனா, ஆயிரக்கணக்கான வருஷமா இயற்கை விவசாயம் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, இந்த நாப்பது வருஷத்துல வந்த ரசாயன விவசாயத்தை கையில எடுத்துக்கிட்டு, கேள்விக் கேட்கறாங்கன்னா அவங்களை என்னனுய்யா சொல்றது. வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம்... பிடிவாதத்துக்கு எந்த மருந்தய்யா கொடுக்கறது?'' என்று ஆதங்கப்பட்டவர்,''அவங்கள விடுங்கய்யா... நீங்க முதல்ல நேர்ல வந்து என்னோட மண்ணைப் பாருங்க. அதுவே உங்களுக்கு பதில் சொல்லும்'' என்று அழைப்பு விடுத்தார்.மறுநாளே, புளியங்குடி அருகே சிந்தாமணி கிராமத்திலிருக்கும் அந்தோணிசாமியின் பண்ணைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூப்பிடு தொலைவில் தெரியும் மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து சில்லென்று காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்க... அதையும் தாண்டி வேகமாக தன் தோட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் அந்தோணிசாமி. அவர் முன்பாக போய் நின்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், தலையிலிருந்த பச்சைத் துண்டை தோளுக்கு மாற்றியபடியே வரவேற்றார். அடுத்த நிமிடமே குற்றால அருவியைப் போல வார்த்தைகள் சலசலவென ஆர்ப்பரித்தன.''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. '5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கினா, மாட்டுவண்டிச் சக்கரத்துக்கு போடற இரும்புப்பட்டை ரெண்டு இலவசமா தர்றோம்'னு எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினார். இரும்புக்கு பற்றாக்குறை இருந்த காலம் அது. அதைப் பயன்படுத்திக்கிட்டுதான் ரசாயன உரத்தை மக்கள்கிட்ட பிரபலபடுத்த ஆரம்பிச்சாங்க. இரும்புப்பட்டை கிடைக்குதேனு பலரைப்போல நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்துமேல பெரிய மோகம் வந்துபோச்சி.67-ம் வருஷம் ஏக்கருக்கு 5 கிலோ அமோனியம் சல்பேட் போட்டேன். ஆனா, பெரிசா விளைச்சல் இல்லை. 'நைட்ரஜன் சத்து மட்டும் பத்தாது, ஏ.பி-யும் போடுங்க'னு விவசாய அதிகாரிங்க சொன்னாங்க. அதன்படியே போட்டேன். ஏக்கருக்கு 60 மூட்டை நெல் விளைஞ்சுது. மூணாவது வருஷம் அந்த விளைச்சல் காணாம போச்சி.அடுத்ததா கம்பு போட ஆரம்பிச்சேன். 70-ம் வருஷம் ரசாயன உரத்தை அள்ளிக் கொட்டிக்கிட்டு கம்பு போட்டதுல ஏக்கருக்கு 1,200 கிலோ மகசூல் கிடைச்சது. இதுக்கு என்.பி.கே. உரம் 200 கிலோ போட்டேங்கறது கவனிக்கவேண்டிய விஷயம். இவ்வளவு உரம் போட்டதுக்கு கிடைச்ச மகசூல், கொஞ்சம் கூட கட்டுப்படியான விஷயமா இல்லை. இதுக்குக் காரணம் மண்ணோட தன்மை மாறிப்போனதுதான். எவ்வளவு ரசாயன உரத்தைக் கொட்டியும் விளைச்சல் பெருகல.'மண்ணுல ‘சிங்’ நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்'னு 74-ம் வருஷம் அதிகாரிங்க சொன்னாங்க. சரினு 'சிங்'கும் போட்டேன். அப்புறம், 'அயன் (இரும்புச் சத்து) போடுங்க'னு சொன்னாங்க. அதையும் போட்டேன். போரான், மாங்கனீசுனு வரிசையா விவசாய அதிகாரிங்க சொன்னதையெல்லாம் போட்டேன். போகப்போக இடுபொருள் செலவு அதிகரிச்சி, கடனும் கூடிக்கிட்டே போச்சி. ஆனா, விளைச்சல் மட்டும் கூடவே இல்ல. 87-ம் வருஷத்துல விவசாயமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை முத்திப்போச்சி. ஏக்கருக்கு ஒன்றரை டன் கூட நெல் விளைச்சல் கிடைக்கல'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எலுமிச்சைச்சாறு மற்றும் கரும்புச்சாறு கலந்த பானம் வந்து சேர்ந்தது. அதை நாம் சுவைத்துக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக தொடர்ந்தார் அந்தோணிசாமி.''இதுக்கு என்னதான் வழி... கடன்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு ரொம்ப யோசிச்சிக்கிட்டே இருந்தேன். எங்க பகுதி விவசாய சேவா சங்கத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் அண்ணாச்சிகிட்ட பேசினேன். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். 'விவசாயம் நஷ்டமாகிப் போச்சி. கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாமா?'னு அங்க கேட்டோம். 'நாங்களே அதுல ஜெயிக்க முடியல. ஆடு வளர்க்கறதையே நிறுத்திட்டோம்'னு சொல்லிட்டாங்க. எப்படியாவது கடனை அடைக்கணுமேனு வெறியோட அலைஞ்சி வெளிநாட்டு ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். அதோட கழிவுல இருந்து 11% நைட்ரஜன் சத்து கிடைச்சுது. அதை வயல்ல போட்டேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என்னோட மண்ணுல ஒரு பூரிப்பு உண்டாச்சி. 'அடடா இயற்கை உரம் என்ன அற்புதமா வேலை செய்யுது?'னு எனக்குள்ள ஒரு சந்தோஷம். அதேசமயம், அந்த ஆடுங்க அத்தனையும் துடி, துடிச்சி இறந்து போச்சி. நான் ஒரு பேராசை புடிச்சவன். குளிர் பிரதேசத்துல வளர்ற ஆட்டைக் கொண்டு வந்து, வெக்கைப் பிடிச்ச இந்த மண்ணுல வளர்க்க நினைச்சது என்னோட தப்புதானே..:!மனசும், உடம்பும் சோர்ந்து போயி உடம்பு ரொம்ப பலவீனமாயிடுச்சி. இந்தக் கவலையிலயே கழுத்து எலும்பு தேஞ்சி நிமிந்து கூட பார்க்க முடியாத நிலை. 'என்னடா நம்ம பொழப்பு இப்படி போயிடுச்சே'னு யோசனை செஞ்சப்ப, ஆரோக்கியமான உணவு இருந்தா எதையும் சாதிக்கலாம்னு தோணுச்சி. அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்னு 90-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல ரசாயன உரம், பூச்சி மருந்து எதையும் பயன்படுத்தாம, இயற்கை உரத்தை மட்டுமே போட்டு 15 மூட்டை நெல்லை விளைவிச்சேன். அதைச் சாப்பிட, சாப்பிட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிச்சி. ஆனா, நான் வாங்கின கடன்... வட்டி குட்டி போட்டு பல லட்சமா மாறிப்போயி ருந்துச்சி.இப்போ பிரதமரா இருக்கிறாரே மன்மோகன் சிங்... இந்த புண்ணியவான் 91-ம் வருஷத்துல மத்திய நிதி அமைச்சர். அவரு கொண்டு வந்த 'அடுக்கு முறை வட்டிக் கொள்கை' மூலமா... 56 லட்ச ரூபாய் கடன் காரனாயிட்டேன். அதைக் கட்ட முடியாம, தீர்ப்பாயம் முன்னாடி போய் கைகட்டி நின்னேன். 'நீதிபதி அய்யா, என்கிட்ட பணம் கிடையாது. இப்பக்கூட கடன் வாங்கிகிட்டுதான் மெட்ராஸ் வந்து சேர்ந்திருக்கேன். எப்படியாவது தயவு பண்ணுங்க'னு கையெடுத்துக் கதறி அழுதேன்'’ என்று சொல்லி மௌனமானவர், முகத்தை பச்சைத் துண்டால் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.‘‘அந்த நீதிபதி நல்ல மனுஷன். 'இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்'னு சொன்னார். ஊர் திரும்பினதும் ராப்பகலா பாடுபட்டோம். மண்ணை மாத்தினா... எல்லாமே மாறும்னு நிலத்துல மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் போட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நிலம் வளமாச்சி. இது எல்லாம் 1992-ம் வருஷம் நடந்த சம்பவம்.கடனை அடைக்க எனக்காகவே ஒரு பயிரு காட்டுல காத்துகிட்டு இருந்துச்சி. அதுதான் எலுமிச்சை. எங்க பகுதியில எலுமிச்சை ரொம்பப் பிரபலம். காட்டுல உள்ள ஒரு வகை எலுமிச்சை செடியை எடுத்துகிட்டு வந்து, நாட்டுச் செடியோட ஒட்டுக்கட்டினேன். அமோக விளைச்சல். கொஞ்சம் கொஞ்சமா கடனையெல்லாம் அடைச்சிட்டேன். வறட்சியைத் தாங்கி வளர்ந்த இந்த ரகத்துக்காக இப்ப குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட விருது கொடுத்திருக்கார்.''நடவு செஞ்சப்ப உழவு ஓட்டினதோட சரி. களை எடுக்கவும் இல்ல. மருந்து அடிக்கவும் இல்ல. உரம் போட வேண்டிய வேலையும் இல்லாம போயிடுச்சி. வருஷம் முழுக்க எலுமிச்சை காய்ச்சி தொங்குது. ஒவ்வொரு மரத்துலயும் மூவாயிரம் காய் காய்ச்சிக்கிட்டிருக்கு. ஏக்கருக்கு நூறு மரம் நடவு செய்திருக்கேன்.தமிழ்நாட்டோட சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன்தான். இது இந்திய சராசரியை விட அதிகமான விளைச்சல். நான் ஏக்கருக்கு 60 டன் எடுக்கிறேன்'' என்று சொல்லி நிமிர்ந்து பார்க்க வைத்தவர், கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.''செருப்பைக் கழட்டிவிட்டுப்புட்டு வாங்க. இது மரியாதைக்குரிய விஷயமில்ல. வெறும் காலோட நடந்தாத்தான் இந்த மண்ணோட தன்மையை உணரமுடியும்ய்யா. எவ்வளவு கடுமையா வெயில் அடிச்சாலும் கரும்பு தோட்டத் துக்குள்ள வந்தா 4 டிகிரி வெயில் குறைஞ்சிடும். 2003-ம் வருஷம் மண்பரிசோதனை செஞ்சி பார்த்ததுல, 1957-ம் வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி நிலம் மாறிடுச்சி. அப்படியே இயற்கை எரு போடறதையும் நிறுத்திட்டேன். குப்பை உரம் கூட போடாம ஏக்கருக்கு 40 மூட்டை நெல் அறுவடை செய்றேன். மீன்அமீனோ அமிலம், பஞ்சகவ்யா இது ரெண்டையும் தான் 15 நாளுக்கு ஒரு முறை மாத்தி, மாத்தி தெளிக்கிறேன். பூச்சி, பூஞ்சாண நோய் வந்துச்சினா, கத்தாழை, துளசி, வெள்ளைப் பூண்டு கலந்து பூச்சி விரட்டியா தெளிப்பேன். எல்லாம் வந்தவழியே ஓடிப்போயிடும். நான் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி 14 வருஷமாகுது. அன்னிலிருந்து வைத்திய செலவே இல்லாம போச்சி... எம்மனைவிக்கு இருந்த சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சி.வெளியிலிருந்து எதையும் நான் வாங்கத் தேவையே இல்லை. கரன்ட்டு, டீசல், சமைக்கற உப்பு இதுமாதிரியான அத்தியாவசியமானதைத் தவிர மத்ததெல்லாம் தோட்டத்துலயே விளையுது. ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த அந்தோணிசாமி இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன். 'இயற்கை விவசாயங்கறதெல்லாம் ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்ல மட்டும்தான் செய்ய முடியும்'னு போறபோக்குல சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் மட்டுமில்ல, நூத்துக்கணக்கான ஏக்கர்லயும் இயற்கை விவசாயத்தை செய்யமுடியும். அதுக்கு நான்தான் உதாரணம். இயற்கை விவசாயம் செஞ்சா, இப்ப இருக்கற மாதிரியான மூணு இந்தியாவுக்கு சோறு போடமுடியும்.இதுக்குப்பிறகும் இயற்கை விவசாயத்தை நம்பாம... மோசடி, அது... இதுனு சொல்றது நல்லது இல்ல. ரசாயன விவசாயத்தைக் கரைச்சி குடிச்சி கரைகண்ட பெரிய ஆளுங்க, விவசாய படிப்பு படிச்சுப்புட்டு அரசாங்கத்துல உயர் வேலையில இருக்கற விஞ்ஞானிங்க, பெரிய பெரிய உரக்கம்பெனிகளோட உயர் ஆலோசகரா இருக்கறவங்களுக்கு நான் ஒரு சவால் விடறேன். அதுல அவங்க ஜெயிச்சுக்காட்டட்டும்.இது அஞ்சி வருஷ போட்டி. போட்டிக்கு வர்றவருக்கு என்னோட நிலத்துல ரெண்டு ஏக்கரை ஒதுக்கித் தருவேன். அதுல ரசாயன உரம், பூச்சி மருந்தெல்லாம் போட்டு அவர் செலவுல அவர் பயிர் செய்யட்டும். அதுல விளையறதையே அவரோட குடும்பம் சாப்பிட்டுகிட்டு, மீதியை வித்து வருமானம் பார்க்கட்டும்.அதேபோல ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி நான் இயற்கை விவசாயம் செய்வேன். அதுல விளையறதையே சாப்பிட்டு, மீதியை வித்து வருமானம் பார்ப்பேன். அத்தனைக் கணக்கு வழக்கையும் பக்காவா பதிவு பண்ணிக்கணும். ஆரம்பத்துலயே ரெண்டு நிலத்தோட மண்வளம், ரெண்டு குடும்ப உறுப்பினர்களோட உடல்நிலை எல்லாத்தையும் பரிசோதனை செஞ்சிக்கணும். 5 வருஷ முடிவுல கிடைச்ச லாபம், மண்ணோட தன்மை, குடும்ப உறுப்பினர்களோட உடல்நலம் இதையெல்லாம் பரிசோதிச்சி பாப்போம். ரசாயன உரம் போட்ட நிலத்தோட வளம், இயற்கை உரம்போட்ட நிலத்தைவிட வளம் கூடியிருந்தா, லாபம் அதிகமா கொடுத்திருந்தா, குடும்பத்துல உள்ளவங்களுக்கு எந்த நோயும் வராம இருந்தா ஒரு லட்ச ரூபாய் பரிசும், 'வேளாண் செம்மல்'னு பட்டமும் தரத்தயாரா இருக்கேன்.அப்படி இல்லாம அவர் தோத்துப் போயிட்டா... என்ன செய்யணுங்கறத பிறகு சொல்றேன்’’ என்று கட்டை விரலை உயர்த்தினார் அந்தோணிசாமி.சவாலுக்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமல்ல... அவரின் பயிர் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அந்தோணிசாமி, வடக்கு ரத வீதி, சிந்தாமணி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம், அலைபேசி: 94435-82076.

Monday, 4 August 2014

அசோலா-கால்நடைகளுக்கு ஒரு சத்தான தீவனம்

இன்றைக்கு கிராமப்புறங்களில் கால்நடைகள் குறைந்து வருகிறது. பசுந்தீவனம் மற்றும் உலர்தீவன பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு வளர்ப்பது மற்றும் வேறு பசுந்தீவனங்களை வளர்ப்பது இந்த பற்றாக்குறையை ஈடுகட்டும். இத்துடன் அசோலா என்னும் நீரில் மிதக்கும் ஒரு வகை பெரணி தாவரம் கால்நடைகளுக்கு அதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுகிறது. இது பற்றி பார்க்கலாம்.

அசோலா தாவரம்

அசோலா பெரணி வகை நீரில் மிதக்கும் தாவரமாகும். பெரும்பாலும் பச்சை மற்றும் இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என்கிறார்கள். இதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க வளர்க்கும் போது, எந்த விதமான பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.

வளர்ப்பு முறைக்கு தேவையானவை

செங்கல் 30 முதல் 40 கற்கள்செம்மண் 30 கிலோ மற்றும் சில்பாலின் பாய் 2.5 மீ நீளம் மற்றும் 1.5மீ அகலம்புதிய சாணம் 3 கிலோ.சூப்பர் பாஸ்பேட் 30 கிராம்ஐசோபேட் 10 கிராம்தண்ணீர் அளவு 10 செமீ உயரம்அசோலா விதை 300 கிராம் முதல் 500 கிராம் வரையூரியா சாக்கு தேவையான எண்ணிக்கை

செய்முறை

குழியின் அளவு 6 அடிநீளம் 3 அடி அகலம் இருக்கும் படி தோண்டிக் கொள்ள வேண்டும். புல்பூண்டு வளர்வதை தடுக்க யூரியா சாக்குகளை குழியில் பரப்பவும். செங்கல் குறுக்கு வாட்டில் குழியை சுற்றி வைக்கவும். அதன் மேல் சில்பாலின் பாய் பரப்பி அதன் மேல் 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்ப வேண்டும். புதிய சாணம் 2கிலோ தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். தண்ணீரின் அளவு 60 செமீ உயரம் வரும் வரை ஊற்ற வேண்டும்.250 கிராம் முதல் 500 கிராம் வரை அசோலா விதைகளை குழியில் போட வேண்டும். அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று நாளில் எடை மூன்று மடங்காக வளர்ச்சி அடையும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்புதினந்தோறும்

குழியில் உள்ள அசோலாவை கலக்கி விட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை குழியிலிருந்து வெளியேற்றி, பதிலாக சுத்தமான தண்ணீரை விட வேண்டும்.1 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா தான் செலவு ஆகும். ஆனால் இந்த 1 கிலோ அசோலாவில் உள்ள சத்து 1 கிலோ புண்ணாக்கில் உள்ள சத்துக்கு சமமானது. அசோலா உட்கொள்வதால் பசுக்களில் பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை உயரும். அசோலா உட்கொள்ளும் கோழிகள் அதிகமான எடையுடன் வளரும்.அசோலாவை மாட்டுத்தீவனமாக பச்சையாகவோ, பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும், தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன. அசோலாவை முயல்களும் விரும்பி உண்ணும். அசோலா வளரும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது.

மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி?

கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில்வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். எனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது. பண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை

யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி

வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.யூரியா சத்தூட்ட வைக்கோல்அதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும். இதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.


நன்மைகள்யூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.மழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.குறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும். இத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும்

. அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்பால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும். தீவனங்களின் மீது ஈரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். அடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.மழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும். 

ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை

கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

Saturday, 2 August 2014

சுவைதரும் நம்மூரு பேரீச்சம் பழம்

பாலைவனப்பகுதியில் மட்டுமே பேரீச்சம் பழ மரங்கள் பயிரிட முடியும் என்பதை மாற்றி, நம் மண்ணி லும் பலவித தட்பவெட்ப நிலையிலும் பேரீச்சை மர சாகுபடி செய்யலாம் என சாதித்துக்காட்டியுள்ளார், தர்மபுரியை சேர்ந்த நிஜாமுதீன்.இவரது "சாலியா நர்சரி" பண்ணையில் 23 ஆண்டுகளாக பேரீச்சை சாகுபடி நடந்து வருகிறது. 32 வகையான பேரீச்சை மரங்கள் உள்ளன. 3 ஏக்கரில் 650 மரங்கள் வளர்க்கப்படுகிறது. உலகிலேயே மிக உயர்ந்த ரக பேரீச்சையான அஜீவா ரகம் இந்த பண்ணையில் தான் உள்ளது. இதன் கன்று ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திசுமூலம் கன்று வளர்ப்பு:

இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளிலிருந்து அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப 3 ஆண்டுகள் கன்று வளர்க்கப்படுகிறது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சை கன்றானது இங்குள்ள வெப்பநிலைக்கு தகுந்தாற்போல் இரண்டு ஆண்டுகளுக்கு திசு மூலம் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பின்னர் இவை நடவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளிலே காய்க்கத் தொடங்குகிறது.காய்க்கும் அளவு: ஒவ்வொரு கன்றும் 30 கிலோ முதல் 50 கிலோ வரை விளைச்சல் தருகிறது. பரிகனீதி, அஜீவா என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் பரீகனீதி வகை பழம் நன்கு பருமனாகவும், சதைபிடிப்பும், ருசி தன்மையும் கொண்ட உருண்டை வடிவத்தில் காணப்படும். இந்த பேரீச்சம் பழம் தான் தற்போது நடைமுறையில் அதிகமாக விற்பனையில் உள்ளது.நடவு முறை: ஒரு ஏக்கருக்கு 24ஙீ24 அடிக்கு ஒரு கன்று வீதம் 76 கன்றுகள் நடவேண்டும். ஒவ்வொரு குழியும் 3ஙீ3ஙீ3 அடி அளவில் இருக்க வேண்டும். குழியின் அடிப்பாகத்தில் 1.5 அடி வரை மணல் கலந்த மண்ணும், மேல் பாகத்தில் 1.5 அடியில் மண்ணும் இயற்கை உரங்களும் கலந்து நடவு செய்யலாம். நடவு செய்த ஒரு மாதம் வரை வாரம் இரண்டு முறை கன்றுக்கு 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறையும் , மரம் வளர்ந்த பின் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும்.சொட்டு நீர் பாசனமும் பயன்படுத்தலாம். இவ்வாறு பராமரித்து வந்தால் வறட்சி காலங்களிலும் இது நல்ல பலன் தரும். ஆண்டிற்கு 2 முறை உழவு, 2 முறை உரங்கள் இட வேண்டும். எல்லாவித மண்பாங்கையும் தாங்கி வளரும் மரங்கள் இவை. 90 ஆண்டுகள் வரை நன்கு காய்க்கும். பின் காய்ப்புத்தன்மை குறைந்துவிடும். இதன் ஆயுட்காலம் 150 ஆண்டுகள்.

பழம் அறுவடை
: பேரீச்சம்பழம் ஜூன் முதல் செப்டம்பர் வரை அறுவடைக்கு ஏற்ற காலம். தற்போது அறுவடை நடந்து வருகிறது. பேரீச்சை மரம் வளர்ப்பு தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு நிஜாமுதீனை 98426 60620ல் தொடர்பு கொள்ளலாம்.-டபிள்யு.எட்வின்,

Friday, 1 August 2014

தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழி என்ன?

கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன. காண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும்.தாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்றும், பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். இந்த வகை வண்டுகள் சராசரியாக 10 சதம் வரை சேதம் ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றை பொறுக்கி அழிப்பதுடன், கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.மேலும், கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.சிவப்புக் கூன் வண்டு: இந்த வகை வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன.சில நேரங்களில் தண்டுப் பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும்.தாக்குதலைக் கட்டுப்படுத்த...: மரக்காயங்களில் முட்டையிடுவதால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிதாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் இந்த வகை வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

கருத்தலைப் புழு:

கீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும்.கருந்தலைப் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ஒளிச் சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதம் வரை விளைச்சல் குறைவதோடு, வெயில் காலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரிப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும்வகையில் தெளிக்கலாம்

.எரியோபைட் சிலந்திப் பூச்சி:

இவை 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் தோட்டுக்கடியில் கூட்டமாக சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத் திட்டுகளை ஏற்படுத்துகின்றன.இந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்பெண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டுத் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளித்தால் போதுமானது.இதுதவிர, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம். இதுபோன்ற ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும் என்றார் அவர்.