Friday, 7 November 2014

பால் 40 ரூபாய்… மாட்டு சிறுநீர் 60 ரூபாய்!

காஞ்சிபுரம்: பால் விலை லிட்டர் ரூ.40க்கு கிடைக்கிறது என்றும், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு விற்கிறது என்றும், வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும், விவசாயமும் செழிக்கும் என்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள புதிய இடையூர் கிராமத்தில் கரிம விவசாயிகள் தினம்  கொண்டாடப்பட்டது.மரங்கள் அடர்ந்த இயற்கைச் சூழலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு , இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் 'பண்ணை', களம் அமைத்து கொடுத்திருந்தது. கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவர் குமாரவேல் கூட்டத்தில் பேசியபோது, "முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்களின் வீடுகளில் பத்து மாடுகளாவது இருக்கும். ஆனால் இன்று மாடுகளே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள். இயற்கை விவசாயத்திற்கான அடிப்படையே மாடுகள்தான். சென்னைவாசிகள் வீட்டில் நடக்கும் சுபதினங்களுக்கு பசு மாட்டுச் சிறுநீர் கிடைக்காமல் மஞ்சள் நீரை தெளிக்கின்றார்கள்.பசுமாட்டு சிறுநீர் இப்போது பாட்டிலில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பால் விலை லிட்டர் ரூ.40க்கு  கிடைக்கிறது. ஆனால், ஒருலிட்டர் பசு மாட்டு சிறுநீர் 60 ரூபாய்க்கு  விற்கிறது. இதை மதிப்புக்கூட்டி 'அர்க்' என்ற மருந்து பொருளாக மாற்றலாம். இதன் விலை 500 ரூபாய்க்கு மேலே விற்பனையாகிறது. பாலை விட  நாட்டு  மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணத்தையும் விற்க முடியும். வீட்டுக்கு ஒரு மாடு இருந்தால் வருமானமும் இருக்கும். விவசாயமும் செழிக்கும்" என்றார்.நீரின் அவசியம் குறித்து பேசிய பாலாறு படுகை பாதுகாப்பு இயக்க தலைவர் காஞ்சி அமுதன், "குடிநீர் ஆதாரத்திற்காக பயன்பட்ட ஏரிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் கூவத்தை விட பாலாற்றில் சயனைடு அளவு அதிகமாக இருக்கிறது. பாலாற்றை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம்.நம் நாட்டில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ரெக்சின் பொருட்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றோம். தோலின் மூலம் தயாரித்த பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதியாகின்றன. எந்த நாட்டினரோ பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்காக நம்முடைய ஆறுகளை  பணத்திற்காக பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். தேம்ஸ் நதிக்கரையில் இருந்த தோல் பதனிடும் கம்பெனிகளை எல்லாம் அகற்றி ஆற்றை தூய்மையாக்கிவிட்டார்கள்.  நம்முடைய ஆறுகளை எப்போது தூய்மையாக்கப் போகிறோம்?” என்று கேள்வியை உதிர்ந்து அமர்ந்தார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விவசாயி ராஜப்பன், "உளுந்தூர்பேட்டை பகுதியில், சிறுதானியங்களை பயிரிட்டு வருகின்றேன். சென்னையில் ஒரு கிலோ வரகு அரிசி 120 ரூபாய்க்கு விற்பதாக இங்கே சொன்னார்கள். 100 கிலோ வரகு மூட்டையை 1100 ரூபாய்க்கு விற்றேன். இதை அரிசியாக்கினால் 50 கிலோ வரகரிசி கிடைக்கும். இடைத்தரகர்கள் எந்த அளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றார்கள் என்று இதிலிருந்தே தெரியும். குறைந்த விலையில் மக்களுக்கு சிறுதானியங்களும் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் விவசாயிகளுக்கும் நஷ்டம் வரக் கூடாது. விளைவிப்பவர்களுக்கு விலை கிடைத்தால்தான் சிறுதானியங்களை பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார் ஆதங்கமாக.கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி பேசும்போது, "எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒருத்தர் விவசாயம் செய்வதற்கு நிலம் தேடி வந்திருந்தார். நான் பண்ணையில் வைத்திருந்த ஆடு, மாடு கோழி என அனைத்தையும் வைத்து சம்பாதித்துக் கொள்ளுங்கள். ஆனால் நிலத்தை இயற்கையான முறையில்தான் பராமரிக்க வேண்டும். எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அதைப்பார்த்து 10 விவசாயிகளாவது மனம் மாறி இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால்போதும் என்றேன். மூன்று மாதம் கடந்தது, செய்ய முடியவில்லை என்று அவர், என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். இயற்கை வேளாண்மை செய்ய, இன்றைக்கும் என்னுடைய நிலத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.கரிம வேளாண் கட்டமைப்பு நிறுவனரும், மூத்த வேளாண் விஞ்ஞானியுமான அரு.சோலையப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.


தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது என்று கேள்விப்பட்டோம். எந்தெந்தப் பயிர்களுக்கு, என்னென்ன அளவில் மானியம் கொடுக்கிறார்கள்?”


எம். சுந்தரம், திருப்பூர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.‘‘தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக் காய்... போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இவை ஒரு ஹெக்ேடர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேற்கண்டவை தவிர, மண்புழு உரம் தயாரிப்பு, டிராக்டர், பவர்-டில்லர், விளக்குப்பொறி, பவர்-ஸ்பிரேயர்... போன்றவற்றுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.இதில் சிறுவிவசாயி, பெண்கள்... போன்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்த மானியங்களைப் பெற நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, 3 போட்டோ, மண் மாதிரி முடிவுகளை இணைத்து, அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
‘‘மண்புழு உரம் உற்பத்தி செய்ய விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா?”


ஆர். முருகன், செம்மேடு.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் செயல்பட்டு வரும் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலர் முனைவர் பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.‘‘இயற்கை விவசாயம்தான் இனி எதிர்காலம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், இயற்கை இடுப்பொருட்களை உற்பத்தி செய்ய, அரசும் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, மண்புழு உரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, காதி கிராமத் தொழில் ஆணையம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நேரடியாக வழங்கப்படுவதில்லை. வங்கிகள் மூலமே வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு, 25% மானியம், பெண்களுக்கு 30% மானியம் என்று வழங்கப்படுகிறது.500 கிலோ உற்பத்தித்திறன் கொண்ட மண்புழு உரக்கூடத்தை அமைக்க, சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகும். இதில் ஆண் களுக்கு ஒரு லட்சமும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமும் மானியமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுதவிர, மத்திய-மாநில அரசுகளும் அவ்வப்போது மண் புழு உர உற்பத்திக்கு மானியம் வழங்கி வருகின்றன.இந்த மானியங்களைப் பெற வேண்டும் என்றால், அடிப்படைத் தகுதிகள் அவசியம். சொந்தமான நிலம் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராக, மண்புழு உர உற்பத்திப் பற்றி முறையாகப் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கே.வி.கே என்று அழைக்கப்படும் வேளாண் அறிவியல் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்கள் விவேகானந்தா கேந்திராவிலும், மண்புழு உர உற்பத்தி பற்றிய பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறோம். இந்தப் பயிற்சியில், மண்புழு உர உற்பத்தி நுட்பங்கள்... வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுக்கிறோம். விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில், திட்ட அறிக்கையும்கூட தயார் செய்து கொடுக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளோம்.”தொடர்புக்கு, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கன்னியாகுமரி-629702. தொலைபேசி: 04652-246296, செல்போன்: 82200-22205.
‘‘விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். இதற்கு உதவி செய்யும் அமைப்புகள் பற்றி சொல்லுங்கள்?”


ஆர்.எம். சரவணன், ஈரோடு.பெங்களூருவில் உள்ள அபீடா அமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் பி.பி. வாக்மரே பதில் சொல்கிறார்.‘‘விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அமைப்பான அபீடா, (APEDA-The Agricultural and Processed Food Products Export Development Authority) 1986-ம்ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ், புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்புக்கு மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கவுகாத்தி, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா... உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ளவர்கள், பெங்களூரு மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.ஏற்றுமதி எண்ணத்தில் இருப்பவர்களுக்குத் தேவையானத் தகவல்களைக் கொடுத்தும், தேவைப்பட்டால், விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியும் செய்வதுதான், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். காய்கறி, பழங்கள், பூக்கள், பதப்படுத்தப்பட்டப் பழச் சாறுகள், அரிசி, கோதுமை, நிலக்கடலை, வெல்லம்... கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, எருமை இறைச்சி, பால் பொருட்கள், இயற்கைத் தேன்... என்று ஏற்றுமதிக்கு ஏற்றப்பொருட்களையும் அவற்றை எந்த நாடுகளுக்கு, எந்த நிறுவனத்துக்கு அனுப்பலாம் என்றும்கூட, ஆலோசனை வழங்கி வரு கிறோம்.ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை ‘இரண்டு வகையாகப் பிரித்துள்ளோம். வியாபார ரீதியில் செயல்படு பவர்களை, ‘வியாபார ஏற்றுமதியாளர்கள்’ என்றும், விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளை, ‘உற்பத்தி ஏற்றுமதியாளர்கள்’ என்றும் அழைக்கிறோம். இரு வகையினருமே, முதலில் அபீடா வில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இதற்கு ஏற்றுமதியாளர்-இறக்குமதியாளர் குறியீட்டு எண், வருமான வரி கணக்கு எண் (பான்) மற்றும் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரின் சான்று ஆகியவை இதற்குத் தேவைப்படும். குறியீட்டு எண் பெறுவதற்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தை அணுக வேண்டும். இதுகுறித்த விவரங்களை http://dgft.delhi.nic.in/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தனியார் நிதி ஆலோசகர்களை அணுகினால், வருமானவரி கணக்கு எண் பெற்றுத் தருவார்கள். முறைப்படி அபீடாவில் பதிவு செய்துகொண்ட பிறகு, ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் எங்கள் அலுவலகத்திலிருந்து, தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.தொடர்புக்கு, Regional Incharge, Agricultural and Processed Food Products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore-560 020 Telephone 080-23343425 / 23368272. Fax 080-23364560.

Tuesday, 4 November 2014

மெனக்கெட்டா..... மேலும் லாபம்!

கீரையைவிட விதையிலதான் லாபம்...தண்டுக்கீரை 90 நாளில் அறுவடை..சிறுகீரை 60 நாளில் அறுவடை..ஏக்கருக்கு 35 ஆயிரம் வருமானம்.."யானை கட்டி, மாடு கட்டி போரடிச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. கார், லாரி, பஸ்னு பறக்கிற தார் ரோட்ல விளைச்சலைக் கொட்டி போரடிக்கிற காலமுங்க இது"வெயில் தகித்துக் கொண்டிருக்கும் தார் சாலையில் காயும் தண்டுக் கீரைக் கட்டுகளை உதறியபடி, கிண்டலாகவே பேசினார் விவசாயி பாலு.இடம் விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ள மாத்தூர் கிராமம்.தண்டுக்கீரை, சிறுகீரை விதைகள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக முன்னிலையில் நிற்கிறது இப்பகுதி. முட்டத்தூர் நகர், திருவதிகுன்னம், ஒட்டம்பட்டு, நங்காத்தூர், வேட்டவலம், ஏந்தல், கீழ்நாத்தூர் உள்ளிட்ட திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதியிலிருக்கும் கிராமங்களில், பல நூறு ஏக்கர்களில் கீரை விதை உற்பத்தி ஜரூராக நடக்கிறது.மெனக்கெட்டா மேலும் லாபம்!"போட்டது விளையும் வளமான செம்மண் பூமி. போதுமான பாசன வசதி. ரெண்டும் சரியா கிடைக்கிறதாலதான், தொடர்ந்து கீரை விதையை உற்பத்தி செய்ய முடியுது" என்று சொன்ன பாலு,"காத்து மாதிரி கார், லாரி பறக்கிற ரோடு. வாங்க இப்படி ஓரமா நின்னு பேசுவோம்" என்றபடி வேப்பமர நிழலுக்கு அழைத்துச் சென்றார்."தண்டுக்கீரை, சிறுகீரை, அரைக்கீரைனு மகசூல் நல்லாவே நடக்குது. ஆனா, 'விதைச்சோமா... 25, 30 நாள்ல அறுத்து வித்தோமா'னுதான் பலரும் இருக்கறாங்க. கீரையை மட்டும் விளைவிச்சிக்கிட்டிருந்தா வருமானமும் கம்மி. வேலையும் கம்மி. ஆனா, மெனக்கெட்டு முயற்சி செஞ்சா இன்னும் லாபம் பாக்கலாம்னு நினைக்கிற ஆளுங்க நாங்க. அதனாலதான் கீரையைவிட விதை உற்பத்தியில வருமானம் அதிகம்கிறத உணர்ந்து பதினஞ்சி வருஷமா விதை உற்பத்தியில இந்தப் பகுதி விவசாயிங்க தீவிரமா ஈடுபட்டுக்கிட்டிருக்கோம். லாபம் கிடைக்கறது ஒருபக்கம் இருக்க... விவசாயத்துக்கு அடிப்படையான விதைகளை உற்பத்தி செய்ற புனிதமான வேலையைச் செய்றோமேங்கற தனி சந்தோஷம் இன்னொரு பக்கம்" என்று பெருமையாகச் சொன்னவர்,"மூணு ஏக்கர்ல தண்டுக்கீரை போட்டிருந்தேன். அதைத்தான் இப்போ காய வெச்சி உதறிக்கிட்டிருக்கேன். என்னோடது மணல் கலந்த செம்மண் நிலம். கிணத்துப் பாசனம். குடிக்கிற சுவையில தரமான தண்ணீர் இருக்கு. அதனால விளைச்சலுக்குக் குறைவில்லாம காலம் ஓடிக்கிட்டிருக்கு" என சுயவிவரங்கள் சொல்லி முடித்து, சாகுபடி விவரங்களை 'சலசல'வென கொட்டத் தொடங்கினார்.


ஏக்கருக்கு நாலு கிலோ விதை...அடர் விதைப்பு ஆகாது!கீரை விதை உற்பத்திக்கு கார்த்திகைப் பட்டம்தான் உகந்தது. டிராக்டர் உழவு ஓட்டி, ஏர்கலப்பையால் பார் உழவு ஓட்ட வேண்டும். நன்கு புழுதியாக உழவுகளை ஓட்டி, ஆறடிக்கு, எட்டடி பாத்திகளை அமைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ தண்டுக்கீரை விதைகளை, ஐந்து கிலோ மணலில் கலந்து பரவலாக பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். இந்தக் கீரை செழிப்பாக, உயரமாக வளரும் குணமுடையது. எனவே, அடர் விதைப்புக் கூடாது. மணல் கலந்து விதைத்த பின், முள் கொத்து மூலம் பாத்திகளை ஏகமாக நிரவி விடுதல் அவசியம். முள் கொத்தை இடம், வலமாக இழுத்துவிடும்போதுதான் விதை நன்றாக மண்ணில் பதியும். நாமே விதை உற்பத்தி செய்தாலும், நம் நிலத்தில் விதைக்கும்போது, வேறொரு நிலத்தில் விளைந்த விதைகளை வாங்கி விதைத்தால்தான் தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.ஏக்கருக்கு நாலு கிலோ விதை...அடர் விதைப்பு ஆகாது!கீரை விதை உற்பத்திக்கு கார்த்திகைப் பட்டம்தான் உகந்தது. டிராக்டர் உழவு ஓட்டி, ஏர்கலப்பையால் பார் உழவு ஓட்ட வேண்டும். நன்கு புழுதியாக உழவுகளை ஓட்டி, ஆறடிக்கு, எட்டடி பாத்திகளை அமைக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ தண்டுக்கீரை விதைகளை, ஐந்து கிலோ மணலில் கலந்து பரவலாக பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். இந்தக் கீரை செழிப்பாக, உயரமாக வளரும் குணமுடையது. எனவே, அடர் விதைப்புக் கூடாது. மணல் கலந்து விதைத்த பின், முள் கொத்து மூலம் பாத்திகளை ஏகமாக நிரவி விடுதல் அவசியம். முள் கொத்தை இடம், வலமாக இழுத்துவிடும்போதுதான் விதை நன்றாக மண்ணில் பதியும். நாமே விதை உற்பத்தி செய்தாலும், நம் நிலத்தில் விதைக்கும்போது, வேறொரு நிலத்தில் விளைந்த விதைகளை வாங்கி விதைத்தால்தான் தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.


90 நாட்களில் 200 படி மகசூல்!விதைத்த பிறகு, பாத்தி நிறையும் அளவு உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்று நாள் கழித்து அடுத்த தண்ணீர். தொடர்ந்து வாரம் ஒரு தண்ணீர் அவசியம். மொத்தம் 90 நாட்களில் விதைக்கான சாகுபடி முடிந்துவிடும். அடியுரமாக டி.ஏ.பி. 2 மூட்டை இறைத்துவிடவேண்டும்.சாறு உறிஞ்சும்பூச்சிகள், அசுவனி மற்றும் தண்டு துளைப்பான் ஆகியவை கீரையை அதிகமாக தாக்கும். இதற்கு டைமோதேட் 250 மில்லியை 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இது முதல் தெளிப்பு. விதைத்த 20 நாட்களுக்குள் இதைத் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் மோனோகுரோட்டபாஸ் 500 மில்லியை 100 லிட்டர் நீரில் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் தெளித்தால்... பச்சைப்புழு கட்டுப்படும்.20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுப்பது அவசியம். 40-ம் நாளில் பொட்டாஷ் ஒரு மூட்டையோடு, ஒரு மூட்டை யூரியாவைக் கலந்து கொடுக்கலாம். அப்பொழுதுதான் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் சீராகக் கிடைத்து, செடிகள் 'தளதள'வென செழிப்பாக வந்து சேரும்.90 நாட்களில் கதிர்முற்றி, கேழ்வரகு கதிர் போல காய்ந்து நிற்கும். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய பத்து ஆட்கள் தேவைப்படும். அறுவடை செய்த கதிரை மூன்று நாள் நிலத்திலேயே காயவிட வேண்டும். பிறகு கத்தையாகக் கட்டி, வாகனங்கள் செல்லும் தார் ரோட்டில் பரப்பிவிட வேண்டும். வாகனங்களின் சக்கரங்கள் கீரைச் செடிகளின் மீதேறிச் செல்லும்போது, விதைகள் தனியாக பிரிந்து வந்துவிடும். காலையில் சாலையில் பரப்பினால், மாலையில் அள்ளிக் கட்டிவிட வேண்டும்.சாகுபடி தொழில்நுட்பங்களை சொல்லி முடித்த பாலு, பதர் தூற்றும் பணியைச் செய்யும்படி ஆட்களை ஏவிவிட்டார். தார்ரோட்டில் பதரும், விதையுமாகப் பரவிக்கிடந்ததை, ஆட்கள் சிலர் அள்ளிக் கொடுக்க... அதைக் கைப்பற்றி பதர் தூற்றும் பணியை ஆரம்பித்தனர் சில பெண்கள்.


படி இருநூறு ரூபாய்!நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த பாலு, ‘‘இப்படி தூற்றின பிறகு, ஒரு படுதாவை விரிச்சி, புடைச்சி, சல்லடையில போட்டு சலிச்சிட்டா... விதை தயார். சராசரியா ஒரு ஏக்கருக்கு 90 நாள்ல எப்படியும் 200 படி மகசூல் கிடைக்கும் (இவர்கள் பயன்படுத்தும் படி என்பது கிட்டத்தட்ட 2 கிலோ).இன்னிய தேதியில, 'படி 200 ரூபாய்'னு வியாபாரிங்க கொள்முதல் செய்யறாங்க.. எங்க ஊர்ல இன்னும் பழைய முறையிலதான் விற்பனை நடக்குது. தராசு வெச்சு எடை எல்லாம் போடுறது கிடையாது. ஆனா, வாங்கிட்டு போற ஏவாரிங்க கிலோவுலதான் விக்கிறாங்க. பெங்களூரு, மைசூர், சென்னை, அரக்கோணம்னு பல ஊருங்களுக்கு இந்த விதைங்க போகுது" என்றார்.சீக்கிரமா விளைஞ்சிடும் சிறுகீரை!அடுத்து, திருவதிகுன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணாவைச் சந்தித்தோம். இவர் உற்பத்தி செய்வதுசிறுகீரை விதைகள்."சிறுகீரைக்கு கார்த்திகைப் பட்டம்தான் நல்லது. ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் தொழுவுரம் போட்டு, டிராக்டர் உழவு இரண்டு முறையும், ஏர் உழவு ஒரு முறையும் ஓட்டினேன். அப்புறமா எட்டடிக்கு, எட்டடி பாத்தி அமைச்சேன். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். அதை 5 கிலோ மணல்ல கலந்து பாத்திகள்ல அடர்த்தியா தூவி விதைச்சேன். மேற்கொண்டு பராமரிப்பெல்லாம் தண்டுக்கீரைக்கு செய்றது மாதிரிதான். 55 முதல் 60 நாள்ல அறுவடை செஞ்சிடலாம். சிறுகீரை விதைக்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. அதனால விலையும் அதிகமா கிடைக்கும். ஒரு படி 300 ரூபாய்க்கும்கூட போகும். இப்போதைக்கு 240 ரூபாய்க்கு போய்க்கிட்டிருக்கு" என்றவர்,புரூடோனியாவை விரட்ட முடியலையே!"கீரையைப் பொறுத்தவரை பூச்சித் தொல்லைதான் பெருசா இருக்கு. சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ இதெல்லாம் சேர்ந்து இலையைச் சுரண்டி, செடிங்கள காலி பண்ணிடும். அதனால, 20, 40ம் நாள்ல ரெண்டு முறை பூச்சிக்கொல்லி கட்டாயம் தெளிக்கணும்.ஆனா... இந்த புரூடோனியா புழுனு ஒண்ணு இருக்குதே... அதுங்க மட்டும் எந்த பூச்சிக்கொல்லிக்கும் முழுசா அழியாம, கூட்டம் கூட்டமா உற்பத்தியாகி, செடிங்கள மேய்ஞ்சி அழிச்சிடுது. செடிங்க நல்லா வளர்ச்சியில இருக்குதேனு பார்த்தா, திடீர்னு சுத்தமா காய்ஞ்சி போயிடும். தண்டுதுளைப்பான் பண்ற வேலை இது. எந்தப் பூச்சிமருந்து தெளிச்சும் வேலைக்கு ஆகல" என்று கவலையை வெளிப் டுத்தினார் கிருஷ்ணா.


புரூடோனியா புழுவுக்கு தீர்வு!'கிருஷ்ணாவை வாட்டி எடுக்கும் புரூடோனியா புழுவுக்குத் தீர்வு சொல்லியாக வேண்டுமே..' என்றபடி, ஈரோடு மாவட்டம், கொடுமுடி, முத்தூர் கிராமத்தில் ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்தைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கும் ஈஸ்வரி முத்துச்சாமியிடம் பேசினோம். "இவ்வளவுதானே... நான் சொல்ற இயற்கை வைத்தியத்தையெல்லாம் தவறாம கடைபிடிக்கச் சொல்லுங்க. அவரோட கஷ்டம் தீர்ந்துடும். ஆனா, ஆரம்பத்துல இருந்தே எல்லாத்தையும் இயற்கை முறையில செய்யணும்கிறதுல கவனமிருக்கணும். அப்பத்தான் இயற்கை முறை விவசாயம் கைகொடுக்கும். குறிப்பா தொழுவுரத்துல இருந்து ஆரம்பிக்கணும். விதைங்களும் நேர்த்தி செய்யப்பட்டதா இருக்கணும்" என்றபடி, இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறைகளைச் சொன்னார்.அக்னி அஸ்திரம் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது, புரூடோனியா புழு, பச்சைப் புழு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.பூச்சிவிரட்டி நொச்சி, எருக்கு, ஊமத்தை, பப்பாளி, வேம்பு இது போன்ற ஆடு தின்னா தழைகள் ஏதாவது ஐந்தை தலா ஒரு கிலோ சேகரித்து, ஒன்றாக இடித்துக் கொள்ளவேண்டும். அதை, பழைய மண்பானையில் போட்டு, மூழ்கும் அளவுக்கு பசுமாட்டுச் சிறுநீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பிறகு, வேடு கட்டி வைத்து மூன்று நாள் கழித்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 முதல் 500 மில்லி கலந்து வாரம் ஒரு தடவை தெளித்தால் தண்டுதுளைப்பான், வேர்ப்புழு உள்ளிட்டவை கட்டுப்படும்.எச்சரிக்கை, மேற்சொன்ன இரண்டு பூச்சி விரட்டிகளையுமே 500 மில்லிக்கு அதிகமாக சேர்த்தால் பயிர்கள் கருகிவிடக்கூடிய வாய்ப்புள்ளது.ஈஸ்வரி முத்துச்சாமி கொடுத்த இயற்கை ஆலோசனைகளை அப்படியே, கிருஷ்ணாவின் காதுகளில் போட்டோம்."ரொம்ப ரொம்ப நன்றிங்க. ஏற்கெனவே நீங்க எங்கள பார்த்து இயற்கை முறை விவசாயத்தை முயற்சி செஞ்சி பார்க்கவேண்டியதுதானேனு கேட்டீங்க. அதைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டே இருக்கோம். அடுத்த போகத்துக்கு தொழுவுரமெல்லாம் சொல்லி வச்சிட்டேன். இப்ப நீங்க கேட்டுச் சொல்லியிருக்கற இந்த ஆலோசனைகளை அப்படியே குறிச்சி வெச்சிக்கிறேன். அடுத்தத் தடவை நீங்க இந்தப் பக்கம் வந்தா... என்னோட வயல்ல  இயற்கை முறை விவசாயம் கண்டிப்பா இருக்கும்" என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

"இயற்கை விதைக்கு இருக்கு கிராக்கி!"இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கீரை விதைகளை வாங்கி, விற்பனை செய்யும், விதை வியாபாரி கந்தனிடம் விற்பனை குறித்து கேட்டபோது, "சீசனுக்கு 25 டன் வரைக்கும் சிறுகீரை விதை இந்தப் பகுதியில உற்பத்தியாகுது. நேரடியா கொள்முதல் செஞ்சி, வேன்ல ஏத்தி பெங்களூரு, சென்னை, அரக்கோணம், ஒட்டன்சத்திரம் பகுதியில இருக்கிற சில்லறை விதை வியாபாரிங்களுக்கு அனுப்பறோம். எனக்கு தெரிஞ்சவரைக்கும் தமிழ்நாட்டுல இந்த செஞ்சி பகுதி விவசாயிங்கதான் அதிக அளவுல விதை உற்பத்தி செய்யறாங்க.மைசூரு, பெங்களூருனு விதைகளை விற்கப் போற இடத்துல, நிறைய விவசாயிங்க, 'ரசாயன பயன்பாடு இல்லாத விதை கிடைக்குமா?'னு ஆர்வத்தோட கேட்கறாங்க. நானும் தேடிகிட்டே இருக்கேன்... கிடைக்க மாட்டேங்குது. இயற்கை முறையில் தயாராகுற விதைக்கு நல்ல மார்க்கெட் இருக்கு'' என்று சொன்னார்.

பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு!

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்' என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்' என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள்.’குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது' என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்' என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்... பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய பாரம்பர்ய அறிவியல் நிலையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள். நம் மண்ணுக்கே உரிய பாரம்பர்ய அரிசி ரகங்களை உடல் ஆரோக்கியத்துக்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த அரிசி ரகங்களைப் பரிந்துரைக்கிறது... இந்த ஆராய்ச்சி முடிவுகள்.சமீபத்தில் சென்னையில் இதற்கென நடந்த பயிற்சிப் பட்டறையில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கல்லூரி மாணவிகள் என பலர் பங்கேற்றனர். இதை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பாரம்பர்ய அறிவியல் நிலையத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியம் பேசும்போது, ”உடல் ஆரோக்கியத்துக்கான நெல் ரகங்கள் பற்றி தேடியபோது, ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் சுமார் 300 வகையான ரகங்கள் பற்றிய பட்டியல் கிடைத்து ஆச்சர்யமானோம். ”வறட்சியான பகுதியில் விளையக்கூடிய நெல் ரகங்கள், எளிதாக செரிமானமாகிவிடும். அதிக நீர் தேங்கும் பகுதியில் விளையும் நெல் ரகங்கள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கினால், 6 மாதங்கள் கழித்தே பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 மாசங்கள் கழித்தாவது பயன்படுத்த வேண்டும். கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது' என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன'' என்று பெருமையோடு சொன்னார்.              அரிசி ரகங்கள் ஆய்வுகள் குறித்துப் பேசிய எத்திராஜ் மகளிர் கல்லூரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியர் மேனகா, ”இந்த ஆய்வுக்கு கருங்குறுவை, நீலம்சம்பா, காலா நமக், குள்ளகார், பெருங்கார், மாப்பிள்ளைச் சம்பா, குடவாலை, கவுனி ஆகிய 8 பாரம்பர்ய ரகங்களை எடுத்துக்கொண்டோம். ஒப்பீட்டு ஆய்வுக்காக இன்று மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளைப் பொன்னி அரிசியையும் எடுத்துக்கொண்டோம். ஆய்வின் முடிவுகள், பாரம்பர்ய நெல் ரகங்களைக் கொண்டாட வைக்குமளவுக்கு இருக்கின்றன. உதாரணமாக... கருங்குறுவை ரகத்தில், வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. நீலம்சம்பா ரகத்தில் கால்சியம் கூடுதலாக உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இதற்குப் பதிலாக நீலம்சம்பா அரிசியை சாப்பிடப் பரிந்துரைக் கும் அளவுக்கு, இதில் கால்சியம் சத்து உள்ளது. எங்கள் ஆய்வின் முடிவுகள், ஆயுர்வேதம், சித்தா இரண்டிலுமே ஏற்கெனவே இருக்கும் குறிப்புகளுடன் பொருந்திப் போவது ஆச்சர்யமே! பொதுவாக வீடுகளில் நாம் பயன் படுத்தும் அரிசி வகை களில் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப் படுத்தும் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் வயிற்றில் இருக்கும் போது சராசரியாக 80 -  90 என்ற அளவில்தான் சர்க்கரை யின் அளவு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வில் பங்குபெற்ற மாணவிகளுக்கோ... 100க்கு மேல் இருந்தது'' என்றவர்,''நமது உடல், பெரும் பெரும் நோய்களுக்கு இலக்காவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவைதான் பாரம்பர்ய ரக அரிசிகள் என்று தெரிந்தபிறகு, அவற்றை நாடாமல் இருப்போமா என்ன?!''  என்கிற பாஸிட்டிவ் கேள்வியுடன் முடித்தார் மேனகா.

Sunday, 2 November 2014

தொடர் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியதாவது: பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை.ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடிப்படைத் தத்துவங்கள்: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.கோழி வளர்ப்பு: ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.மீன் குட்டையில் கோழி வளர்ப்பு: கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.சிப்பிக்காளான் வளர்ப்பு: நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர்ச்சக்கை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக உள்ளது. இதனால் குறைந்த செலவில் காளான் உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.ஆனால் உற்பத்தி செய்யும் காளான்களை அன்றன்றே விற்பனை செய்து விட வேண்டும்.கறவை மாடு வளர்ப்பு: மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கும் மணிகள், தட்டு மூலமாகவும் பசுந்தீவனங்கள் மூலமாகவும் விவசாயிகள் 2 முதல் 3 கறவை மாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் அதிக வருமானம் பெறலாம்.காடை வளர்ப்பு: 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறைக்கு 500 காடைக் குஞ்சுகள் என்ற அளவில் வளர்த்தால் மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம்.நெல் வயலில் மீன் வளர்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் நடுத்தர, அதிக வயதுடைய ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது.நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் அதிக வருமானம் பெற நெல் வயலில் மீன் வளர்ப்பு உதவிகரமாக இருக்கும்.இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்துவதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கலாம்.மீன் கழிவுகள் வயலுக்கு உரமாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். வடகிழக்கு பருவமழை காலத்துக்குப் பின் சம்பா, தாளடி பருவத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீன்வளர்ப்புக்கு வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ரகங்கள் மிகவும் ஏற்றவை.நெல் வயலின் வரப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆழமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் அமைத்து அதில் மீன்களை வளர்க்கலாம்.நெல் வயலில் கால்வாயை விட்டுவிட்டு மற்ற நடு பகுதியில் நெல்பயிர் நாற்றை வரிசைக்கு வரிசை 25 செ.மீ, செடிக்கு செடி 25 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளியில் நடவு செய்வதால் மீன்கள் வயலின் நடுபகுதிகளுக்கு சென்று இறைத் தேட வசதியாக இருக்கும். நெல் வயலில் நீர்விடும் பகுதி, நீர் வெளியேற்றம் பகுதியில் வலைகள் அமைத்து மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.நெற்பயிர் நடவு செய்தவுடன், நெல்வயலில் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. நீர் அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நெல் நடவு செய்யப்பட்டு 5 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை வயலில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் நெற்பயிறுக்கு தழைச்சத்து கிடைப்பதுடன், அது மீன்களுக்கு நல்ல உணவாகவும் இருக்கும்.நெல் நடவுக்குப் பின் 15 நாள்கள் கழித்து ரோகு, கட்லா, மிர்கால் போன்ற மீன் குஞ்சுகளை ஏக்கர் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 வரை கால்வாயில் இருப்பு செய்யலாம்.வாரம் ஒரு முறை மாட்டுச் சாணம், கிளைரிசிடியா தழைக் கட்டுகளை நெல் வயலில் உள்ள கால்வாயில் போட வேண்டும். இது மீன்களுக்கு சிறந்த உணவாகும்.மேலும் வயலில் உள்ள அசோலா, களைகள், நெற்பயிறுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் (விளக்கு பொறி வைப்பதால்) மீன்களுக்கு இறையாக கிடைக்கின்றன. நெல் வயலில் மீன்கள் வளர்க்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்க கூடாது. இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் மருந்துகளான வேப்ப எண்ணெய், பஞ்ச காவ்யா, இழைச்சாறு ஆகியவற்றை தெளிக்கலாம். நெல் முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிரின் நடுவே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கால்வாயில் மட்டுமே நீர் நிறுத்த வேண்டும். நெல் அறுவடை செய்தவுடன் கால்வாயில் உள்ள நீரை வடிகட்டி விட்டு மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம். நெல் வயலில் இருப்பு செய்யப்பட்ட மீன்கள் 5 மாதத்தில் 500 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக வளரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ முதல் 500 கிலோ வரை மீன்களைப் பெறலாம்.மேலும், விவரங்களுக்கு, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745237 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.